இனி வெள்ளித்திரையில் எனக்கு இடைவெளி இருக்காது என நம்புகிறேன் என்று நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் தியாகராஜனின் மகன் என்ற அடையாளத்துடன் 1990 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி ராதா பாரதி இயக்கத்தில் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசாந்த்.
அறிமுகமான முதல் படமே வணிக ரீதியாக வெள்ளி விழா கொண்டாடியது. தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நாயகனாக நடித்தவர் பிரசாந்த்.
‘அந்தகன்’ படத்திற்கு எதிர்பார்ப்பு!
பாலுமகேந்திரா இயக்கத்தில்’ வண்ண வண்ண பூக்கள்’,R.K. செல்வமணி இயக்கத்தில்’ செம்பருத்தி’, மணிரத்னம் இயக்கத்தில்’ திருடா திருடி’, ஷங்கர் இயக்கத்தில்’ ஜீன்ஸ்’, ஹரி இயக்கத்தில்’ தமிழ்’, சுந்தர் சி இயக்கத்தில்’ வின்னர்’, கலைஞர் கதை வசனத்தில்’ பொன்னர் சங்கர்’ படத்தில் நடித்திருக்கிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பின் இவரது நடிப்பில் திரைப்படங்கள் எதுவும் வெளியாகத நிலையில், ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பின் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் கதை நாயகனாக நடித்திருக்கும்’ அந்தகன்’ இன்று உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது.
பிரசாந்த் மட்டுமல்ல தமிழ் சினிமா இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இந்த படத்திற்கு சினிமா ரசிகர்கள், பொதுமக்கள் வரவேற்பு எந்தளவு இருக்கும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக இருக்கும் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், முன்னணி கதாநாயகர்களின் கால்ஷீட் கிடைக்காத சூழலில் அந்த இடத்தை பிரசாந்த் நிரப்ப அந்தகன் படத்தின் வெற்றி முக்கியமாக பார்க்கப்படுகிறது.
‘அந்தகன்’ ரீமேக்’ படம் அல்ல, ‘ரீ மேட்’ படம்!
இந்நிலையில், அந்தகன் படத்தின் அனுபவம் குறித்து பிரஷாந்திடம் பேசிய போது, “இதில் என்னுடன் சிம்ரன், பிரியா ஆனந்த், நவரச நாயகன் கார்த்தி, சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் ரீமேக் தான் அந்தகன் படம். இரண்டு படங்களுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்களை எதிர்பார்க்கலாம். என் அப்பா கூறியது போல ‘அந்தகன்’ ரீமேக்’ படம் அல்ல, ‘ரீ மேட்’ படம்.
அப்பாவின் இயக்கம், பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். ரசிகர்களுக்கு, இப்படம் நிச்சயம் பிடிக்கும். படத்தில், பார்வையற்றவனாக நடித்தது சவாலாக இருந்தது. இந்தப் படத்தில் ஒவ்வொரு சீனிலும் சஸ்பென்ஸ் இருக்கும்.
பிளாக் காமெடி இருக்கும். அதனால் சிரித்துக் கொண்டே இருக்கும்போது திடீர் ஆச்சரியங்கள் வரும். குறிப்பாக என்னுடைய திறமையை வெளிப்படுத்துகிற மாதிரி பல படங்களில் நடித்திருந்தாலும். பியானோ இசைக் கலைஞனாக நடித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
எனக்கு நிஜமாகவே பியானோ இசைக்கத் தெரியும் என்பதால், என் திறமையை வெளிப்படுத்த இந்தப் படத்தை பயன்படுத்திக் கொண்டேன். அது மட்டுமில்லாமல், தமிழுக்கு மையக் கதையைக் கெடுத்திடாத வகையில், அப்பா சின்ன சின்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்.
கார்த்திக் சாருக்கு தனி முக்கியத்துவம்!
தமிழுக்கு சரியாக இருக்காதுன்னு நினைச்ச சில காட்சிகளை மாத்தியிருக்கிறார். கதைக்கு இன்னும் அழுத்தம் கொடுக்கும் விதமாவும் கதையை வேகமாக நகர்த்தும் பாணியிலும் நிறைய மாற்றங்கள் உண்டு. குறிப்பாக சொல்வதானால் எனக்கும் சமுத்திரக்கனி அண்ணாவுக்கும் ஒரு பைட் எடுத்தார்கள். இதற்காக ஐந்து நாள் படப்பிடிப்பை நடத்தினோம்.
அது மிக மிரட்டலான காட்சியாக அமைந்துள்ளது. இதற்காக மாடியில் இருந்து நிஜமாகவே குதித்ததெல்லாம் தனிக் கதை . இந்த சண்டைக் காட்சி தமிழுக்காக சேர்த்த விஷயம்.மேலும், வெயிட்டான கதை என்பதாலேயே கார்த்திக், சிம்ரன், சமுத்திரக்கனி, ஊர்வசி , லீலா சாம்சன், செம்மலர், வனிதா விஜயகுமார், யோகிபாபு நடித்துள்ளார்கள்.
ஒவ்வொருவரும் நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். இது எனக்கு புதிய அனுபவம். பிஸியாக இந்திப் படங்கள் பண்ணி கொண்டிருக்கும் ரவி யாதவைக் கூட்டிக்கொண்டு வந்து ஒளிப்பதிவு பண்ண வைத்திருக்கிறார் அப்பா. . பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் ஒவ்வொன்றும் கவனிக்க வைக்கும். கலை இயக்குநர் செந்தில் ராகவன் உள்பட அனைத்து டெக்னீஷியன்களும் தங்களின் சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
முன்னொரு காலத்தில் இளைஞர்களின் ஆதர்ச கதாநாயகனாக இருந்த கார்த்திக் சாருக்கு தனி முக்கியத்துவம் இருக்கிறது. இந்தப் படத்தில் அவர் வரும் ஒவ்வொரு சீனிலும் பழைய கார்த்திக்கை பார்க்கலாம்.
அவர் கேரக்டர் எல்லாருக்கும் பிடிக்கும் படி இருக்கும். கதையைக் கேட்டு, தன் பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். அப்புறம் தமிழ் சினிமாவில் எந்த ஜோடிகளும் நிகழ்த்திக்காட்டாத காதல், மோதல், ஆக்சன் என பல ஜானர்களில் நடித்து கலக்கியுள்ள சிம்ரனும் நானும் சேர்ந்து ஆறு படங்களில் ஜோடியாக நடித்து எல்லோரையும் கவர்ந்து உள்ளோம்.
அந்தக் கெமிஸ்ட்ரி வேற மாதிரி இருக்கும். இந்தப் படத்தில் சஸ்பென்ஸ் நிறைந்த கேரக்டரில் சிம்ரன் வருகிறார். கிடைச்ச எல்லா ரோலையும் அவர் தன் பெர்ஃபார்மன்ஸால் மிரட்டுவது வாடிக்கை . தனது ஸ்டைலில் அந்த கேரக்டருக்குச் சரியான நடிப்பை கொடுத்து அசத்தி இருக்கிறார். வனிதா விஜயகுமார் கேரக்டரைப் பார்க்கும் ஒவ்வொருவரும் கைத்தட்டி ரசிக்கப் போவது நிஜம்.
இந்தியில் அடுத்த படம்!
இனி வெள்ளித்திரையில் எனக்கு இடைவெளி இருக்காது என நம்புகிறேன். இதுவரை ஒவ்வொரு கதைக்கும் என்னைத் தயார்படுத்திக் கொள்ள அந்த கால அவகாசம் தேவையாக இருந்தது. இனி அது இருக்காது. தொடர்ந்து நடிக்கப் போகிறேன்.
இப்போது தினமும் நிறைய இயக்குநர்கள் வந்து கதை சொல்வதும் தயாரிப்பாளர்கள் வந்து போவதும் அதிகரித்து விட்டது.
அந்தகனுக்கு அடுத்ததாக விஜய்யுடன் நடித்த கோட் ரிலீஸ் ஆகப் போகிறது. நெக்ஸ்ட் அமிதாப் பச்சன் சாருடன் சேர்ந்து நடிக்கும் ‘ஒரு படம் பண்ணுகிறோம். அதுவும் பெரிய பட்ஜெட் படம். நான்கு மொழிகளில் உருவாகிறது. இது தவிர விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’ படத்தை இந்தியில் ‘ரீசார்ஜ்’ என்னும் டைட்டிலில் ரீமேக் பண்ணுகிறோம். அது பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும்” என்றார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் என்னிடம் விசாரணை ஏன்? – பால் கனகராஜ் விளக்கம்!
தமிழ்ப் புதல்வன்: நேற்றே வங்கிக்கணக்கில் ரூ.1000… மாணவர்களுக்கு ஸ்டாலின் குட் நியூஸ்!