விஜய்-அஜித்:பிரசன்னாவின் கேள்வியும் பதிலும்!

Published On:

| By Balaji

தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நடிகர் பிரசன்னா அளித்த பதிலும், நடிகர் சாந்தனுவிடம் அவர் கேட்ட கேள்வியும் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் தேதி பட்டாஸ் திரைப்படம் வெளியானது. தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது தொடர்பாக சினேகாவின் கணவரும் நடிகருமான பிரசன்னா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

அதற்கு பதிலளிக்கும் விதமாக, நடிகர் சாந்தனு ‘பட்டாஸ், குடும்பங்களுக்கான சிறந்த திரைப்படம். தனுஷ், எப்போதும் போல மிகவும் வலிமையாக, ஆழமாக நடித்துள்ளார். எனது அன்புத் தோழி சினேகா, மிகச் சிறப்பாக தனது கதாபாத்திரத்தைக் கையாண்டுள்ளார். உங்களை நினைத்து எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்று பதிவிட்டிருந்தார். அதற்குப் பிரசன்னா, ‘தேங்க் யூ மச்சி, மாஸ்டர் அப்டேட் சொல்லுடா’ என்று கேட்டுள்ளார். இது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் அஜித் கதாநாயகனாக நடித்துவரும் வலிமை திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பிரசன்னா நடிக்கிறார் என்னும் தகவல்கள் சமூக ஊடகங்களில் வலம்வந்தது. அதனைத் தொடர்ந்து ரசிகர் ஒருவர், “வலிமை படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா” என்று கேட்டிருந்தார், அதற்கு “இதுவரை இல்லை. உறுதியான தகவலுக்காக காத்திருக்கிறேன்” என்று பிரசன்னா பதிலளித்துள்ளார்.

ADVERTISEMENT

அஞ்சாதே, திருட்டுப்பயலே-2 போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து, மாஃபியா படத்தில் பிரசன்னா தற்போது வில்லனாக நடித்துவருகிறார். இந்தப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் பிரசன்னா மற்றும் அவரது ரசிகர்கள் போன்றே விஜய்யின் மாஸ்டர் பட அப்டேட்டுக்காகவும், அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காகவும் அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share