நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் உறுப்பினராக தமிழ் திரையுலகின் மூத்த நடிகரான நாசரின் மகன் ஃபைசல் இன்று (மார்ச் 12) இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஜய், கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சி பெயரை அறிவித்து அரசியலில் நுழைந்தார்.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்யேக செயலியை வெளியிட்டு, அதில் எப்படி நுழைய வேண்டும் என்ற வீடியோவையும் விஜய் வெளியிட்டிருந்தார்.
அதன்படி பலரும் அக்கட்சியில் இணைந்து, அதற்கான உறுப்பினர் சேர்க்கை அட்டையை தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுவரை ஏறக்குறைய 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
https://twitter.com/nasser_kameela/status/1767556233475829766
விஜய் கட்சியில் நூருல் ஃபைசல்
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் மூத்த நடிகரான நாசரின் மகன் நூருல் ஹுசைன் ஃபைசல் இந்த கட்சியில் இணைந்துள்ளார். இதனையடுத்து தனது உறுப்பினர் சேர்க்கை அட்டையை மகிழ்ச்சியுடன் ஃபைசல் காட்டும் புகைப்படத்தை நாசரின் மனைவியான கமீலா அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாசரின் மகன் ஃபைசல் கடந்த 2014ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர்பிழைத்தார். அவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஆவார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி போட்டியிடவில்லை என்று விஜய் ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். எனினும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் அவரது கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எலெக்ஷன் ஃபிளாஷ் : சரத்குமாருக்கு தேசிய அளவில் முக்கிய பதவி?
தேர்தல் பத்திர விவரங்களை வழங்கிய எஸ்.பி.ஐ : உடனே வெளியிடுமா தேர்தல் ஆணையம்?