கஞ்சா விற்பனை : மன்சூர் அலிகான் மகனை சிக்க வைத்த காண்டக்ட் நம்பர்… தட்டி தூக்கிய போலீஸ்!

Published On:

| By Minnambalam Login1

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இடையே போதைப்பொருள் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், கடந்த மாதத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களிடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களைக் கொண்டு, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, காட்டாங்கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா ஆயில் டப்பாக்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக, காட்டாங்கொளத்தூர் சென்று அறையில் இருந்த கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர்களது அறையில் கஞ்சா ஆயில் உட்பட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த மாணவர்களின் செல்போன்களில் உள்ள எண்களைக் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் போன் நம்பரும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டில் இருந்த அலிகான் துக்ளக்கை தனிப்படை போலீசார் நேற்று (டிசம்பர் 3) இரவு கைது செய்தனர்.

பின்னர், ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக அலிகான் துக்ளக்கிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

விஸ்காம் படித்துள்ள அலிகான் துக்ளக், சினிமாவில் உதவி இயக்குநராக இருந்தார். இவர், மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு, பலருக்கும் கஞ்சா, மெத்தபெட்டமைனை சப்ளை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்… கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது தீபத்திருவிழா!

“அதிமுக ஆட்சியில் இடிந்து விழுந்த 7 பாலங்கள்” – எடப்பாடிக்கு அமைச்சர் வேலு பதிலடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share