மின்வெட்டு பிரச்சனையில் பொதுமக்களை ஏளனமாக பேசியதாக எழுந்த சர்ச்சையில் நடிகர் மகேந்திரன் ’மன்னிப்பு’ கேட்கதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் மகேந்திரன் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கரண்ட் போகுதா?” “சோலார் சிஸ்டம்னு ஒன்னு கண்டுபிடிச்சானுக.. ஏதாவது டிரை பண்ணினீங்களா?” ”சரி ஓகே.. இவ்வளவு நாள் கரெண்ட் இஸ்யூ இல்லாம இருந்துட்டீங்க.. ஜாலியா.. இப்ப இஸ்யூ ஆகுதா.. சரி பரவா இல்லை.. ஒரு 6 மாசம் கேட்காதீங்க….ஏன் வீட்டுல கூட கரெண்ட் எடுத்துக்குங்க… வெயிலில் இருந்து ரெண்டு வயரை வெச்சு 2 மோட்டாரை வெச்சு எப்படி ஃபேன் சுத்த வைக்கனும்னு எனக்கு தெரியும்.. நான் பண்ணியிருக்கேன் ஜாலியா.. நான் பேசுறது Funny தெரியும்.. பட் நான் பிராக்டிக்கல்லா பேசுறேன்..”
“இப்ப நீங்க அவரை (விஜய்யை) கேள்வி கேட்டுட்டா மட்டும் கரெண்ட் வந்துடவா போகுது? அவர் மைக் முன்னாடி வெச்சுட்டு, “ஏன் இப்படி நடந்துச்சு?”ன்னு கேள்வி கேட்டா ”கரெண்ட் ஆன் ஆகிடுமா உங்க வீட்டுல?” ஆகாது இல்லை..”
”ஏன் கேட்குறீங்க.. ஏன் ஒருத்தரை கேள்வி கேட்கிறதே மோட்டிவ்வா இருக்கிறீங்க? இன்னும் எத்தனை வருஷம் கேள்வி கேட்பீங்க.. உங்களுக்கு பதில்தான் வேணும் இல்லையா? நீங்க கேள்வி கேட்கிறதை நிறுத்துனதான் பதிலே வரும்.. நீங்க கேள்வி மட்டும் கேட்டுகிட்டே இருந்தா பதில் எப்படி வரும்?” என பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது. பொதுமக்களை ஏளனமாக நினைத்து நடிகர் மகேந்திரன் பேசியதாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
மன்னிப்பு கேட்ட மகேந்திரன் (Actor Mahendran)
இதனைத் தொடர்ந்து நடிகர் மகேந்திரன் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மகேந்திரன் கூறியுள்ளதாவது: இந்த வீடியோவின் மூலம் எனது மக்களுக்கு நான் என்ன சொல்ல வந்தேன் என்பதைத் தெளிவாக விளக்க விரும்புகிறேன். மின்சார விநியோகம் குறித்து நான் கேள்வி எழுப்பியபோது, அதன் நோக்கம் மக்களின் உணர்வுகளை வைத்து அரசியல் செய்பவர்களைக் குறித்ததுதானே தவிர, பொதுமக்களை அல்ல.
அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு, எல்லாவற்றையும் முறையாகச் சீரமைக்க ஆறு மாத காலம் அவகாசம் கேட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாகவே, அவர் கோரிய அந்த அவகாசத்தை வழங்கலாம் என்று நான் கூறினேன்.
சோலார் சிஸ்டம் குறித்த எனது முந்தைய கருத்தில் தவறு நிகழ்ந்துவிட்டது. அந்தத் தகவலில் ஏற்பட்ட பிழைக்கு நான் வருந்துகிறேன். சாதாரண ஒரு மாணவனாகப் படிப்பைத் தொடர முடியாமல் பாதியிலேயே நின்றதால், சில தகவல்களைத் தவறாகக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், எனது நோக்கம் வேறொன்றாகும். 2015-ம் ஆண்டு முதல் கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையம் முழுமையாகச் சோலார் ஆற்றல் மூலமே இயங்கி வருகிறது. அதை நேரில் பார்த்தபோது, தமிழ்நாட்டிலும் இதுபோன்ற திட்டங்களை ஏன் அரசு செயல்படுத்தவில்லை என்ற எண்ணமே எழுந்தது. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, வீட்டு மனைத் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மேலே சோலார் பேனல்களை அமைக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். அதன் மூலம் மக்களுக்குத் தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டது.
மேலும், என் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நான் வருத்தமடைகிறேன். நான் ஒரு இயக்குநரிடம் திமிராக நடந்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் முற்றிலும் பொய்யானது. இது குறித்து நான் அவரிடம் பேசியபோது, விளையாட்டுத்தனமாகவே அப்படிப் பேசியதாக அவர் தெரிவித்தார். மக்களுடைய கஷ்டத்தைப் பார்த்து நான் சிரிக்கிறேன் என்ற குற்றச்சாட்டும் தவறு. நான் இன்று ஒரு வேளை உணவு உண்கிறேன் என்றால், அதற்கு இந்த மக்களே காரணம்.
நான் நடிக்கும் படங்கள் நன்றாக இல்லை என்று விமர்சித்தால் அதை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்வேன். ஆனால், என் மீது வீண் பழிகளைச் சுமத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் கூறிய கருத்துகளால் எவருடைய மனமேனும் புண்பட்டிருந்தால், அதற்காக என் மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். எனக்காகத் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு நடிகர் மகேந்திரன் கூறியுள்ளார்.
