ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவன்!

Published On:

| By uthay Padagalingam

‘அலைபாயுதே’ படத்தில் அறிமுகமாகி ‘ரன்’ மூலமாகத் தமிழ் திரையுலகில் வேகமான வளர்ச்சியைப் பெற்றவர் நடிகர் மாதவன். ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ மூலமாக இயக்குனர் ஆகவும் வெற்றியைச் சுவைத்தார். Actor Madhavan acted GD Naidu

தமிழில் அவர் நடிக்கும் படங்கள் வசூல் மற்றும் வணிகரீதியாக வெற்றியைப் பெற்றாலும் தொடர்ந்து இந்திப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தமிழில் இவர் நடித்த அதிர்ஷ்டசாலி, டெஸ்ட் ஆகிய படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன. இந்த நிலையில், அவர் நடிக்கும் தமிழ் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அதன் பெயர் ‘ஜி.டி.என்.’.

இந்த படத்தின் டைட்டிலில் ’டேக்லைன்’ போன்று ‘ஜி.டி.நாயுடு’ என்ற பெயர் இடம்பெற்றிருப்பது, அந்த இனிஷியலுக்கான விளக்கத்தைச் சொல்லிவிடுகிறது.

ஆம், இது தமிழ்நாட்டில் வாழ்ந்த அறிவியல் மேதை ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகிற திரைப்படம்.

1893-ஆம் ஆண்டு கோவை மாவட்டம் கலங்கல் கிராமத்தில் பிறந்தவர் துரைசாமி நாயுடு. இவரது தந்தை பெயர் கோபால்சாமி. தந்தையுடன் அவர் பெயரையும் சேர்த்து அழைப்பதன் சுருக்கமாக ‘ஜி.டி.நாயுடு’ என்ற பெயர் வந்து சேர்ந்தது.

அந்த காலகட்டத்தில் நான்காம் வகுப்பு வரை படித்த ஜி.டி.நாயுடுவுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளின் மீது சிறு வயதிலேயே ஆர்வம் அதிகம். குறிப்பாக, மனிதர்களின் தினசரி வாழ்வில் உள்ள சிக்கல்கள், பிரச்சனைகளைக் களையும் விதமாகப் புதிய கண்டுபிடிப்புகளில் அவர் ஈடுபட்டார். எந்திரவியல், வேளாண் துறைகளில் பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்.

பேருந்தில் பயணச்சீட்டு வழங்குவதற்கான எந்திரம், அந்தக் காலத்து கார்களில் தண்ணீர் ஊற்ற வேண்டிய ரேடியேட்டருக்குப் பதிலாக புதிய எந்திரம், முகத்தில் காயமின்றி சவரம் செய்வதற்கான பிளேடு என்று பலவற்றைக் கண்டுபிடித்திருக்கிறார். முக்கியமாக, பல வெளிநாட்டு நிறுவனங்கள்  எவ்வளவோ கேட்டும் அவற்றின் காப்புரிமையை ஜி.டி.நாயுடு தரவில்லை.

இப்படிப்பட்ட ஒரு மாமனிதரின் வாழ்வில் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சம் இருக்குமா? அதனாலேயே, இந்த ‘ஜி.டி.என்.’ திரைப்படம் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

கோவிந்த் வசந்தா இசையமைக்கிற இப்படத்தில் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கமலநாதன் பணியாற்றவிருக்கிறார். இப்படத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார். ’பைவ்ஸ்டார்’ கிருஷ்ணா என்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்குத் தெரியும்.

‘பைவ்ஸ்டார்’ படத்தில் நடிகராக அறிமுகமான கிருஷ்ணா, பின்னர் ‘திருடா திருடி’, ‘அறிந்தும் அறியாமலும்’ படங்கள் தொடங்கி ஆரம்பம், கவண் வரை சுமார் 30 படங்களில் நடித்திருக்கிறார். தென்னிந்தியாவின் வெற்றிகரமான விளம்பரப் பட இயக்குனராகத் திகழ்ந்து வருகிறார்.

கிருஷ்ணா வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகமாகிற படம் ‘ஜி.டி.என்’. இப்படத்தில் பிரியாமணி, ஜெயராம், யோகிபாபு உட்படப் பலர் நடிக்கின்றனர்.

படத்தின் முன்தயாரிப்பு பணிகளுக்காக அதிக காலம் செலவிட்டது, வெவ்வேறுபட்ட ஆளுமைகள் ஒரு படத்தில் கைகோர்ப்பது என்று எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது இப்படம். தமிழில் வெளியான வாழ்க்கை வரலாற்று படங்களில் சிறப்பானதாக அமையும் என்ற எண்ணத்தையும் அதிகப்படுத்தியிருக்கிறது ‘ஜி.டி.என்’ குறித்த அறிவிப்பு. Actor Madhavan acted GD Naidu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share