கல்லூரி ஆசிரியர், வெற்றி மாறனின் ஆதர்சம்… நடிகர் கிஷோரின் அறியாத பக்கங்கள்!

Published On:

| By Kavi

உதய் பாடகலிங்கம்

நடிகர் கிஷோர். பொல்லாதவன் படத்தில் செல்வம் எனும் பாத்திரத்தின் வழியே தமிழ் திரையுலகில் நுழைந்தவர், இன்று அதன் செல்வமாகவே மாறக்கூடியவர் என்று சொல்கிற அளவுக்கு வளர்ச்சி கண்டு வருகிறார்.

சமீபத்தில் வெளியான வேட்டையனில் நடித்த இவரது திரைப்பயணம்  தமிழில் கூலி, இந்தியில் சிக்கந்தர் என்று தொடர்கிறது.

பிரமாண்டமாகத் தயாராகும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஈடாகச் சிறிய பட்ஜெட்டில் அமையும் படங்களிலும் தலைகாட்டுவது கிஷோரின் சிறப்பம்சங்களில் ஒன்று.
கிஷோரின் தோற்றம் திரைவானில் நாம் கண்டு ரசித்த பல நட்சத்திரங்களில் இருந்து வேறுபட்டது.

குதிரை வடிவிலான முகம். சற்றே வழுக்கை விழுந்த தலை. நல்ல உயரம். அத்லெட்டிக் வீரர் போன்ற உடல்வாகு. குரல்வளையை நெறித்துக்கொண்டு வெளிப்படுகிறாற் போன்றதொரு குரல். அனைத்தும் ஒன்றுசேர்ந்த தோற்றத்தோடு நடுத்தர வயதுக்கே உரிய அழகோடு திரையில் தோன்றியவர் கிஷோர்.

பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர் கிஷோர். கொஞ்சம் வசதியான பின்னணி கொண்ட நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

கன்னட இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். படித்து முடித்த பிறகு கல்லூரியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

சிறு வயதில் இருந்தே நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர் கிஷோர். அந்த ஆர்வமே, இவரைக் கலையுலகில் வெவ்வேறு திசைகளை நோக்கி நகர்த்தி வந்திருக்கிறது.

கல்லூரி ஆசிரியர் பணியை உதறிவிட்டு, சில காலம் வித்யாசாகர் எனும் ஆடை வடிவமைப்பாளரிடம் உதவியாளராகப் பணியாற்றச் செய்திருக்கிறது.

அப்படி திரையுலகில் நுழைந்தபோதுதான், கன்டி எனும் கன்னடப் படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிஷோரை வந்து சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து ராக்‌ஷஷா எனும் படத்திலும் நடித்தார்.

இவ்விரண்டு படங்களுக்காக, கிஷோர் கர்நாடக அரசின் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார். இந்த ஒரு விஷயமே, அப்படங்களில் அவரது நடிப்பு எப்படியிருந்தது என்பதைச் சொல்லிவிடும்.

பிறகு போலீஸ் அதிகாரி, அரசியல்வாதி, ரௌடி என்று வில்லன் பாத்திரங்களாக வந்து குவிந்தன. அப்படி கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது தான், ’ஹேப்பி’ எனும் தெலுங்கு படத்தில் சிறு பாத்திரத்தில் தோன்றினார்.

அதையடுத்து, இயக்குனர் வெற்றிமாறன் பார்வையில் பட்டார் கிஷோர். அவர் இயக்குவதாக இருந்த ‘தேசிய நெடுஞ்சாலை’யில் தனுஷ் உடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

அந்தப் பட முயற்சி கைவிடப்பட்டு, மீண்டும் பொல்லாதவன் படத்தை வெற்றிமாறன் தொடங்கியபோது, அதில் இடம்பிடித்தார். அதன்பின் நடந்தது நாடறிந்த கதை.

பொல்லாதவன் படத்தின் வெற்றியால் தமிழில் தவிர்க்க முடியாத நடிகராகிப் போனார் கிஷோர். அதன்பிறகு அவர் நடித்த ஜெயம்கொண்டான், சிலம்பாட்டம் படங்களில் அவரது பாத்திரங்கள் வழக்கமான வில்லத்தனத்தோடு அமைந்தபோதும், அவரது நடிப்பும் தோற்றமும் ரொம்பவே வித்தியாசமாக ரசிகர்களை உணரச் செய்தன.

அதே சூட்டோடு ‘வெண்ணிலா கபடி குழு’வில் சவரிமுத்து எனும் கபடி விளையாட்டு பயிற்சியாளராகத் தோன்றி நம்மை வசீகரித்தார் கிஷோர்.

போர்க்களம் படத்தில் சோலோ ஹீரோவாகவும் தோன்றினார். ஆனால், அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து ஆடுகளம், வம்சம் படங்களில் பெயர் சொல்கிற பாத்திரங்களைப் பெற்றார்.

அந்த வரிசையில் ஒரு மைல்கல் ஆக அமைந்தது ‘ஹரிதாஸ்’ திரைப்படம். அதில், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்காக வேலையை விட்டுவிடுகிற ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இன்றும் ‘கிஷோர்’ என்றவுடன் தமிழ் ரசிகர்கள் நினைவுக்கு வருகிற முதல் படம் அதுவே.

கடந்த பத்தாண்டு காலத்தில் ஆரம்பம், தூங்காவனம், விசாரணை, கபாலி, வடசென்னை, ஜடா, சார்பட்டா பரம்பரை, டைரி, பொன்னியின் செல்வன் 1 & 2, ஜெயிலர், வேட்டையன் என்று சுமார் 45 தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் கிஷோர்.

புலி முருகன், கண்ணூர் ஸ்குவாட் வழியாக மலையாள ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கிறார். கார்த்திகேயா, பிஎஸ்வி கருடவேகா, வெங்கி மாமா உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் அங்குள்ள ரசிகர்களும் அவரை அடையாளம் காணும் விதமாக அமைந்திருக்கின்றன.

இது போக, இன்றைய 2கே கிட்ஸ்களை ஈர்க்கும் விதத்தில் தி பேமிலி மேன், ஷீ, பேட்டைகாளி, தலைமைச் செயலகம், பாராசூட் உள்ளிட்ட வெப்சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார் கிஷோர்.

இவற்றுக்கு நடுவே கிஷோர் பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்த களத்தூர் கிராமம், கடிகார மனிதர்கள், மெய், பிளட் மனி போன்ற படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெறாமல் விடுபட்டிருக்கின்றன.

நாடகம் மற்றும் திரைப்பட நடிகர் என்ற அடையாளத்தோடு, இப்போது விவசாயி ஆகவும் மிளிர்ந்து வருகிறார் கிஷோர். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை விரும்புபவராக, அது சார்ந்த கருத்துகளைப் பொதுவெளியில் பகிர்பவராக இருந்து வருகிறார். சமூக நலனை வலியுறுத்துகிற கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிப்பவராக அடையாளம் காணப்படுகிறார்.

இவை அனைத்துமே இயல்பு வாழ்க்கையில் புரட்சிகரமான மாற்றங்களை கைக்கொண்டவராக கிஷோரை நாம் காணச் செய்கிறது. கிட்டத்தட்ட இதே போன்றதொரு பாத்திரத்தில் வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 2’வில் தோன்றியிருக்கிறார்.

சினிமாவில் நடிப்பைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு, தங்கள் மீதான புகழ் வெளிச்சம்தான் ஆதாரம். ஆனால், அதனைத் துறந்துவிட்டு சூரிய ஒளியைத் தன் மீது நிறைத்துக்கொள்ளத் தயாராக இருப்பவர் கிஷோர்.

திரையில் கிஷோர் தோற்றுவித்த மாயாஜாலம் அப்படிப்பட்டது. அவர் நடித்த பாத்திரங்களை இன்னொருவர் ஏற்றிருந்தால், நம்மால் அதே போன்றதொரு ஈர்ப்பைப் பெற முடியுமா என்பது சந்தேகமே.

ஏனென்றால், இரண்டு துருவங்களாக அமைந்த உணர்வுகளை நோக்கி நொடிகளில் இடம்பெயரக் கூடியவர். உதாரணமாக பொல்லாதவன், ஹரிதாஸ் போன்ற படங்களில் கம்பீரத்தையும் பணிவையும் ஒருசேர வெளிப்படுத்தக்கூடிய உடல்மொழியை கிஷோரிடத்தில் நாம் காண முடியும்.

இவரைப் போன்று இன்னொருவர் இருந்தார் என்று சொல்ல முடியாத வகையில் தனித்துவத்துடன் இருக்கிற தமிழ் திரை நட்சத்திரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் ஒருவர், கிஷோர்.

திரையுலகில் மட்டுமல்லாமல் தனது சொந்த வாழ்விலும் கிஷோர் மேலும் பல உயரங்களையும் பரிமாணங்களையும் காண வேண்டும். அது, இப்போது இருப்பதைப் போலவே ரசிகர்களிடத்தில் ஏதோ ஒருவகையில் நல்லதொரு தாக்கத்தை உருவாக்க வேண்டும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேல்முருகன் பேச்சு: அமைச்சர்களின் அடடே ரியாக்‌ஷன்!

மதுரை: லஞ்சப் புகாரில் சிக்கிய ஜிஎஸ்டி அதிகாரிகள்… கைது செய்த சிபிஐ!

அம்பேத்கர் பற்றி சர்ச்சைப் பேச்சு… அமித்ஷாவின் புது விளக்கம்!

குகேஷுக்கு மொத்த பரிசு 16.45 கோடி; மத்திய அரசு பிடிப்பது எவ்வளவு?

13 ஆயிரம் ரயில் சேவை … பரபரக்கும் கும்பமேளா!

அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு… அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: ரேவதி

நாய்க்கு ரூ. 3,356 கோடி சொத்து ;சொகுசாக வாழும் ஆறாம் குந்தர்

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: உத்திரட்டாதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share