5 முக்கிய கோரிக்கைகளுடன்… திமுகவுக்கு கருணாஸ் கட்சி ஆதரவு!

Published On:

| By christopher

5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த நாடாளு மன்றத்தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும்.

மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க ‘இந்தியா கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் தி.மு.கவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.

இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்தியா, பெருமுதலாளிகளின் கையில் கார்ப்ரேட்டின் கொள்ளைக் கூடாரமாகிவிடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழ்நாட்டில் அடிமை துரோகக் கட்சியான அ.தி.முக வை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.

தி.மு.க.விற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக் கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய திமு.க.விற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அ.தி.மு.க.வை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும்” என்று கருணாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் 5 முக்கிய கோரிக்கைகளை கருணாஸ் முன்வைத்துள்ளார்.

▶️மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெயரைச் சூட்ட ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

▶️பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவை (அக்டோபர்30) அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.

▶️மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கள்ளர் மறவர்- அகமுடையார் ஆகியோரை தேவரினம் என அறிவித்த அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். இரண்டரை கோடி மக்கள் தொகை உள்ள முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

▶️தமிழ்நாட்டில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

▶️ஒன்றிய அரசு புதிதாக கட்டியுள்ள பாரளுமன்ற வளாகத்கில் வெள்ளையரை வெளியேற்ற அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலை அமைக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஜி ஸ்கொயர்… வேல்ஸ் பல்கலையில் வருமான வரித்துறை சோதனை!

எம்பி சீட் அதிருப்தி: சிவலிங்கம் வீட்டுக்கு அதிகாலையில் சென்ற கள்ளக்குறிச்சி திமுக நிர்வாகிகள்… நேருவை அனுப்பிய ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share