வெளி உலகத்திற்கு ஏவிஎம் சரவணன் போன்ற பின்னணி ஆளுமைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் அவரை வணங்குவதற்கான காரணம் எங்கள் வாழ்க்கையைப் பார்த்தாலே புரிந்துவிடும் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
ஏவிஎம் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய ஏ.வி.மெய்யப்பனின் மகன் ஏவிஎம். சரவணன். 1958ஆம் ஆண்டில் ஏவிஎம் நிறுவனத்துக்குத் தலைமையேற்று திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஏவிஎம் சரவணன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரின் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். 86 வயதான அவர் இன்று காலை வயது மூப்பு காரணமாக காலமானார். தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர் கமல் உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பதிவில் வெயிட்டுள்ளார்.
அதில், “திரு. ஏ.வி.எம். சரவணன் அவர்களுக்கும், எனக்கும் உள்ள உறவு என் அண்ணன் சந்திரஹாசன் அவர்களுக்கும், சாருஹாசன் அவர்களுக்கும், எனக்கும் உள்ள உறவு போன்றது.
இந்த உறவுக்கு என்ன பொருள் சொல்வது இவர்களுக்கு எந்த மாதிரியான மரியாதை தருவது என்ற குழப்பம் சிறுவயதில் ஏற்பட்டது உள்ளது. 20 வயது வயது தாண்டிய போது உறுதியாகி விட்டது. இவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை என்ன என்பதை என் அடி மனது உறுதி செய்து விட்டது.
ஒரு தகப்பனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தான் இவர்களுக்கு தருவது சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. அப்படித்தான் என் மனதில் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். திரு.குகனுக்கு இருக்கும் சோகத்தில் எனக்கும் பங்கிருப்பதாகவே நான் உரிமை கொண்டாடுகிறேன். இப்படி உரிமை கொண்டாடும் நான் தனி மரமல்ல ஏவிஎம் எனும் பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி. இன்று வளர்ந்து வந்திருக்கிறேன்.
பெருங்கலைஞர்கள் விட்டுச்சென்ற அடிச்சுவற்றில் என் சிறு பாதத்தை எப்படி பதித்து நடக்க வேண்டும் என்று பல பெரிய ஆசான்கள் எனக்கு இந்த தோப்பில் நின்று கற்று கொடுத்திருக்கிறார்கள் அவர்களை எல்லாம் நினைத்து பார்க்கிறேன்.
பேர் சொல்லும் பிள்ளையாக சரவணன் ஐயா அவர்கள் இருந்திருக்கிறார்கள். அவரின் சகோதரர்களும் தான். அது போன்ற ஒரு பிள்ளையாக நானும் இருக்க ஆசைப்படுகிறேன்.
என் ஆசை எல்லாம் இந்த தோப்பின் 3ம் தலைமுறை தோன்றியிருக்கிறது. அவர்களும் என்னை போன்ற பல செடிகளை நட்டு இந்த பெரும் பள்ளியின் பெயர் நிலைத்திருக்க செய்ய வேண்டும் . இதுதான் அன்னாரின் மக்களாக நாம் செய்யும் கடமை என்று நான் நம்புகிறேன்.
ஏ.வி.எம் வளாகமும், அங்கு வேலை செய்து ரிட்டையர் ஆகி, வேலையில் சேர வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்கள் எல்லோருக்கும் இருக்கும் சோகம், அதில் நானும் பங்கு கொள்கிறேன்.
வெளி உலகத்திற்கு இதுபோன்ற பின்னணி ஆளுமைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் அவரை வணங்குவதற்கான காரணம் எங்கள் வாழ்க்கையைப் பார்த்தாலே புரிந்துவிடும். முக்கியமாக எங்கள் கலை வாழ்க்கையை. அவருக்கு நன்றி சொல்லும் ஒரே வழி அவர் கண்ட பாதையில் வீறுநடை போட்டு நடப்பதுதான். நன்றி ஐயா, அனைத்திற்கும்”என்று தெரிவித்துள்ளார்.
