சபரிமலை கோயில் துவாரபாலகர் சிலைகளுக்கு தங்க மூலாம் பூசுவதற்கு வழங்கப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்த விவகாரத்தில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக தொழிலாளர் உன்னிகிருஷ்ணன் போட்டிக்கு சொந்தமான பெங்களூரில் உள்ள இடங்கள், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாருக்கு சொந்தமான கேரளாவில் உள்ள இடங்கள் மற்றும் நகை வியாபாரிகள் சிலருக்கு சொந்தமான இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் தங்கத்தால் செய்யப்பட்ட கோயிலின் பொருட்கள் செப்பு தகடு என்று பதிவேடுகளில் தவறாக பதிவு செய்யப்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் சட்டவிரோதமாக கோயில் வளாகத்தில் இருந்து அகற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
மேலும் கோயில் காணிக்கைகள், சடங்குகள் தொடர்பான செயல்பாடுகளிலும் முறைகேடு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபரிமலை தங்க கவச மோசடி தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்த விவகாரத்தில் இரண்டு வழக்குகளை பதிவு செய்து சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் உன்னிகிருஷ்ணன் போட்டி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் இருவர், கோயில் தந்திரி கண்டரு ராஜீவரு உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனிடையே நடிகர் ஜெயராம் வீட்டிற்கு தங்கத் தகடு கொண்டுவரப்பட்டு பூஜைக்கு வைக்கப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து சபரிமலை தங்க கவச முறைகேடு வழக்கில் ஜெயராமிடம் சென்னையில் உள்ள இல்லத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்தது.
சென்னை அசோக் நகர் இல்லத்தில் உள்ள ஜெயராம் வீட்டில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். நாட்டையே உலுக்கிய சபரிமலை கோயில் தங்க கவச முறைகேடு வழக்கில் பிரபல நடிகரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடைபெறுவது திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
