நடிகர் ஜெயம் ரவி கடந்த 9-ஆம் தேதி தனது மனைவி ஆர்த்தியுடனான குடும்ப வாழ்விலிருந்து நிரந்தரமாக விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தார். மேலும், தனது பிறந்தநாளான செப்டம்பர் 10-ஆம் தேதி அன்று விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார்.
ஜெயம் ரவியின் இந்த முடிவு முழுக்க முழுக்க தன் கவனத்திற்கு வராமலும், தன் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று அவரது மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பிரச்சினை சம்பந்தமாக இணைய தளங்களிலும் பல்வேறு சமூக ஊடகங்களிலும் ஜெயம் ரவி – ஆர்த்தி இருவருக்கு இடையில் பிரிவு ஏற்படக் காரணம் என பல்வேறு யூகங்களும், வதந்திகளும் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
அதில் ஒன்றுதான் ஜெயம் ரவிக்கும் கோவாவைச் சேர்ந்த பாடகி கெனிஷா பிரான்சிஸ் இடையே ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாகவே மனைவியைப் பிரிய ஜெயம் ரவி முடிவு செய்தார் என்று சொல்லப்பட்டது.
பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயம் ரவி
இந்நிலையில் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜெயம் ரவி.
அப்போது அவரது மனைவி ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி “நான் எடுத்த விவாகரத்து முடிவு ஆர்த்தி ரவிக்குத் தெரியாது என்பதில் உண்மையில்லை. அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியிருந்தேன்.
இந்த விவாகரத்து நோட்டீஸ் சம்பந்தமாக ஆர்த்தி ரவி தரப்பினரும் என்னிடம், இதே அலுவலகத்தில் பேசி இருக்கிறார்கள்.
இவ்வளவு நடந்தும் இது எதுவுமே நடக்காதது போலவும், தனக்குத் தெரியாமல் இந்த விவாகரத்து முடிவை நான் எடுத்தேன் என்று ஆர்த்தி கூறுவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். ஆர்த்தியின் குற்றச்சாட்டை சட்டரீதியாக அணுகவுள்ளேன் ” என்று பதிலளித்தார்.
மேலும் பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் தன்னை தொடர்புப் படுத்தி பரவும் செய்திகள் குறித்து பேசிய ஜெயம் ரவி “பாடகியுடன் என்னை தொடர்புப்படுத்திப் பேசுவது, பேசியவர்களுக்குத்தான் அசிங்கம், எனக்கு இல்லை. அவர் ஒரு மனோதத்துவ மருத்துவர்.
அவரோடு இணைந்து ஒரு ஆன்மீக மையம் ஆரம்பிக்க முடிவு செய்ததை நிறைவேற விடாமல் செய்வதற்காகத்தான், இப்படிப்பட்ட வதந்திகளைப் பரப்புகிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப் பேசுவது மிகவும் தவறு. நான் சட்டத்தை நம்புகிறேன். நியாயம் கிடைக்கும்” என்றார்.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இலங்கை அதிபர் தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!
அமிதாப் பச்சன் Vs ரஜினி: தெறிக்கும் தோட்டா… மிரட்டும் ‘வேட்டையன்’ டிரைலர்!