பன்முகம் கொண்ட ஆளுமை! Actor Elango Kumaravel
இளங்கோ குமரவேல். திரைத்துறையில் பன்முகத்திறமை கொண்ட ஆளுமையாகத் திகழ்பவர்கள் மிகக்குறைவு என்ற குறையைப் போக்கியவர்களில் ஒருவர். மேடை நாடக நடிகர், நாடக மற்றும் திரைப்பட எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், நாடகப் பயிற்றுனர் என்று பல முகங்கள் இவருக்கு உண்டு. தனது பயணம் எந்த திசையில் நிகழ்ந்தாலும், பயணிக்கிறபோது கிடைக்கிற அனுபவத்தை உணர்வதே சிறப்பானது என்று எண்ணக்கூடியவர்களில் ஒருவர். இப்படி இளங்கோ குமரவேலைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. Actor Elango Kumaravel
சென்னையில் பிறந்து வளர்ந்தவர் குமரவேல். இவரது தந்தை மா.ரா.இளங்கோவன் தமிழில் இதழியல் குறித்து ஆய்வு நூல்கள் எழுதியவர். தாத்தா மா.ராசமாணிக்கனார் நாடறிந்த தமிழாசிரியர். பல வரலாற்று ஆய்வு நூல்களைத் தந்தவர். இப்படிக் கற்றோர் நிறைந்த குடும்ப உறுப்பினர்களைக் கொண்டிருந்த காரணத்தால், சிறு வயதிலேயே நூல்கள் படிக்கும் பழக்கம் குமரவேலைத் தொற்றிக் கொண்டது. புனைவுகள் மட்டுமல்லாமல் பிற நூல்களை வாசிக்கிற ஆர்வத்தையும் ஊற்றெடுக்கச் செய்திருக்கிறது.

மேடை நடிப்பில் ஆர்வம்!
பள்ளிப் படிப்பு முடித்ததுமே ராயப்பேட்டை நியூ கல்லூரியில் பயின்றார் குமரவேல். சென்னையைச் சேர்ந்த ஒரு சராசரி இளைஞனாக அனுபவங்கள் பல பெற்ற இவர், விற்பனைப் பிரதிநிதியாகச் சில காலம் வேலை பார்த்திருக்கிறார்.
அப்போதுதான், பாண்டிச்சேரியில் இருக்கும் சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்த்துகலை நிறுவனத்தில் நாடகத் துறையில் சேருமாறு இவரது நெருங்கிய உறவினர்கள் கூறியிருக்கின்றனர். அப்போது, அங்கு எழுத்தாளர் நா.பார்த்தசாரதி தலைமைப் பொறுப்பில் இருந்திருக்கிறார். வாசிப்பின் மீது கொண்டிருந்த ஆர்வம் காரணமாக அங்கு சென்ற குமரவேல், பின்னர் நாடக நடிப்பைப் பற்றி ஆய்வு செய்யாமல் அதில் ஈடுபடுகிற வேட்கையைப் பெற்றார். Actor Elango Kumaravel
புரிசை கண்ணப்பத் தம்பிரான், கூத்துப்பட்டறை முத்துசாமி என்ற இரண்டு நாடக ஆளுமைகள் குமரவேலின் வாழ்வுப் பயணத்தையே புரட்டிப் போட்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு கணமும் புதுப்புது அனுபவங்களைத் தரும் மேடை நடிப்பு அவருக்கு ஆச்சர்யங்களை வாரி வழங்குவதாகத் தெரிந்திருக்கிறது. அப்படித்தான் அதனோடு அவரது பிணைப்பு தொடங்கியிருக்கிறது. Actor Elango Kumaravel

கூத்துப்பட்டறை கலைஞன்!
பாண்டிச்சேரியில் பயின்ற காலத்தில் பெங்களூரு உட்படப் பல இடங்களில் நாடக விழாக்களில் பங்கேற்றிருக்கிறார் குமரவேல். அப்படி ஒருமுறை சென்றபோது நாகமண்டலா நாடகக்குழுவைச் சேர்ந்த பிரகாஷ்ராஜை சந்தித்திருக்கிறார். பிறகு கூத்துப்பட்டறை நாடகக் குழுவில் பசுபதி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரோடு சேர்ந்து நடித்திருக்கிறார். பல கிராமங்களுக்கு, நகரங்களுக்குச் சென்று நாடகங்களை நிகழ்த்தியிருக்கிறார். அந்த காலகட்டம், தமிழ் மண்ணின் கலாச்சாரத்தையும் இதர அம்சங்களையும் அவருக்குக் கற்பித்திருக்கிறது. Actor Elango Kumaravel
’மீன் பிடிக்கக் கடலில் இறங்கிய ஒருவன் முத்து குளித்துவிட்டு வருவது போல’ குமரவேலின் வாழ்வும் அவரையும் அறியாமல் அர்த்தங்களை வெளிப்படுத்தத் தொடங்கியது.
கூத்துப்பட்டறையை விட்டு வெளியேறியதும் ‘மேஜிக் லேண்டர்ன்’ குழு சார்பில் வெவ்வேறு நாடகங்கள் நடத்தியிருக்கிறார் குமரவேல். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மேடை நாடகமாக்கி வெற்றி பெற வைத்தது அதிலொன்று. Actor Elango Kumaravel
அந்த நாடகத்திற்காக நாசரை குமரவேல் அழைத்துவர, பதிலுக்கு இவரை ‘மாயன்’ திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் நாசர்.

இயல்பான நகைச்சுவை!
பிறகு அழகி, இயற்கை படங்களில் சிறு பாத்திரங்களில் தலை காட்டியபோதும் குமரவேலை நாம் அடையாளம் காண வைத்த திரைப்படம் ராதாமோகனின் ‘அழகிய தீயே’. அதில் அவர் நடித்த ‘சித்தப்பா’ பாத்திரம் அவரது நடிப்பில் மிக வித்தியாசமானதாகத் தெரிந்தது. ’ஒரு கமர்ஷியல் படத்தில் இப்படிக் கூட காமெடி செய்ய முடியுமா’ என்று யோசிக்க வைத்தது. அந்தக் கணம் குமரவேலுக்கு என்று ரசிகர் பட்டாளம் உருவானது.
தொடர்ந்து ‘அபியும் நானும்’ படத்தில் பிச்சைக்காரர் ரவி சாஸ்திரியாக நடித்தார் குமரவேல். பிறகு மதராசப்பட்டினம், பயணம், வாகை சூட வா, கௌரவம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், உன் சமையலறையில், உப்பு கருவாடு என்று தனக்கு விருப்பமான ஸ்கிரிப்ட்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்தார். Actor Elango Kumaravel
அந்த வரிசையில் நிதிலன் இயக்கிய ‘குரங்கு பொம்மை’யில் வில்லனாகத் தோன்றினார் குமரவேல். அதுவும் மிகக்கொடூரமான மனிதனாக வடிவமைக்கப்பட்டிருந்தது அப்பாத்திரம். அதனை மிகத்திறமையாக வெளிக்காட்டினார். அதன்பிறகு சுமார் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துவிட்டார். ஆனாலும், விக்ரம், கிங்ஸ்டன் போன்ற படங்களே அவர் பெயர் சொல்லும்விதமாக இருக்கின்றன.

வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிய இளங்கோ குமரவேல்
நாடகம், சினிமாவில் நடித்தபோதும், இவரை வெறுமனே நடிகர் என்ற வட்டத்திற்குள் குமரவேலை அடக்கிவிட முடியாது. ’கற்றது களவு’ படத்தில் திரைக்கதை வசனத்தைக் கையாண்டிருக்கிறார். ஆனால், அதுபற்றி அப்போது அவர் வாய்திறந்து விளம்பரப்படுத்தவில்லை.
பிறகு, 2022இல் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ பட எழுத்தாக்கத்தில் பங்கேற்றார் குமரவேல். அந்த நாவலை நாடகமாக்கிய அனுபவம் அவருக்கு காட்சிகளை எழுத்தில் வடிக்க உதவி செய்தது.
இரண்டு பாகங்களும் வெற்றி கண்டபோதும் கூட, தொடர்ந்து திரைக்கதைகள் எழுதும் முயற்சியில் குமரவேல் இறங்கவில்லை. மாறாக, முன்பைவிட பலமாக நிகழ்த்துகலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இடையே, சுழல் வெப் சீரிஸில் இவர் வில்லனாக நடித்திருந்தார். அதற்குக் கிடைத்த வரவேற்பு, ‘யார் இவர்’ என்று பலரைக் கேள்வி எழுப்ப வைத்தது. ‘காரோட்டியின் காதலி’ என்ற படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
நடிகர் பிரமானந்தம் உட்படச் சிலருக்கு இவர் டப்பிங் பேசியிருக்கிறார். இது போக காஸ்ட்டிங் அசிஸ்டெண்ட் போன்ற பணிகளைக் கையாண்ட அனுபவமும் இவருக்குண்டு. பள்ளிக் குழந்தைகளும் நாடகம் நடத்துவது தொடர்பான பயிலரங்கை நடத்தியிருக்கிறார். இப்படிப் பல பணிகளை அடுத்தடுத்து மேற்கொள்வது அவருக்குக் கைவந்த கலை.

தனித்துவமான நடிப்பு!
இளங்கோ குமரவேலின் பெரும்பலம், இயல்பாக நாம் வெளிப்படுத்துகிற உரையாடலை எந்த பாவனைகளும் இல்லாமல் திரையில் வெளிப்படுத்துவது. அதுவே அவரது நடிப்பு அருகாமையில் பார்வையாளர்களை இழுத்துச் செல்லும். அதுவரை அவர் காக்கிற பொறுமையும் , அதன்பின் விளைகிற நடிப்பாற்றலும் மேடை நாடகங்கள் தந்தது.
இன்று வரை அதற்கான பலனை அனுபவித்து வருகிறார் இளங்கோ குமரவேல். இப்போதும் நாடகம், சினிமா என்ற வேறுபாட்டுக் கோடு எதையும் கிழிக்காமல், தன்னை ஒரு நிகழ்த்துகலை நிபுணராகப் பார்வையாளர்களிடம் வெளிப்படுத்தி வருகிறார் குமரவேல்.
இதுநாள் வரை அவர் தொடர்ந்துவரும் வித்தைகள் யாவும் இனிமேலும் அவருடன் பயணிக்க வேண்டும். நல்லதொரு பொழுதுபோக்கினைத்தருகிற கலைஞனாக அவர் என்றென்றும் திகழ வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை, இளங்கோ குமரவேல் நடித்த எந்தவொரு திரைப்படமும் நமக்குத் தந்துவிடும். அதுவே அவரது தனித்துவம். Actor Elango Kumaravel