மேஜிக் ரஜினி, மாஸ்டர்கிளாஸ் கமல்… பக்ஸ் சொல்லும் சுவாரஸ்யம்!

Published On:

| By uthay Padagalingam

Actor Bucks shares his experience

சமகாலத்தில் தமிழ் சினிமாவில் இருக்கும் சிறந்த குணசித்திர நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள்.

கௌதம் வாசுதேவ் மேனன், கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி இயக்குனர் ஆகும் கனவோடு திரிந்த இவரை ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நடிகர் ஆக்கினார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

பிறகு ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’, ’ஜிகர்தண்டா’, ‘பிச்சைக்காரன்’, ’96’, ‘சூப்பர் டீலக்ஸ்’ என்று பல படங்களில் நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்தவரின் திரைப்பயணம் ‘டூரிஸ்ட் பேமிலி’, ‘தக் லைஃப்’ என்று தொடர்கிறது. Actor Bucks shares his experience

சமீபத்தில் ஒரு யூடியூப் தளத்திற்கு அளித்த பேட்டியில் ‘தக் லைஃப்’, ‘ஜெயிலர்’ படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உடன் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார் பக்ஸ்.

அப்போது, ‘மணிரத்னம், கமலோடு பணியாற்றிய அனுபவம் ஒரு மாஸ்டர்கிளாஸ் என்றால் நெல்சன், ரஜினியோடு வேலை செய்தது ஒரு மேஜிக். அதனை டீகோடு செய்வது கடினம். அந்த மேஜிக் எப்படி நிகழ்கிறதே என்றே தெரியவில்லை’ என்று கூறினார்.

’ஏதேனும் ஒரு பிரபலத்தோடு வேலை செய்யும்போது நாம் நாமாக இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்’ என்றவர், ’ஆனால், கமல் சாரோடு இருக்கும்போது அப்படி இருக்க முடிந்தது. ரஜினி சாரோடு பணியாற்றும்போதும் அது நடந்தது’ என்று தெரிவித்தார்.

‘நீங்கள் நீங்களாக இருப்பதைத்தான் அவர்களும் விரும்புகின்றனர். அவர்கள் அதனை இப்படி வார்த்தைகளாகக் கூடச் சொல்வதில்லை. அதனை நிகழ்த்துகின்றனர்’ என்றார் பக்ஸ். Actor Bucks shares his experience

அதற்கு உதாரணமாக, ரஜினியோடு நிகழ்ந்த உரையாடல் பற்றிப் பேசினார்.

“ரஜினி சாரின் வயிற்றில் இடித்து ‘போங்க சார்.. உங்க மேல கோபம்’ என்றேன். அதற்கு, அவர் ‘ஏன்.. ஏன்..’ என்றார். Actor Bucks shares his experience

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை பார்த்தீங்களா சார்’ என்றேன். ‘பார்த்தேனே.. பிடிக்கும்.. ரொம்ப நல்ல படம்’ என்றார். ’அப்புறம் ஏன் சார் எங்களை கூப்பிட்டு பேசலை’ என்றேன். அவர் சிரித்துக்கொண்டே ‘நான் பிஸியா இருந்திருப்பேன்’ என்றார்.

நானோ ‘சார்.. நீங்க அப்படியொண்ணும் பிஸியா இல்ல. அதுக்கு ஒரு மாசம் முன்னால ’பீட்சா’ ரிலீஸ் ஆனப்போ, அந்த டீமை கூப்பிட்டு பேசுனீங்க. எங்க படத்துக்குப் பிறகு ரெண்டு மாசம் கழிச்சு ‘சூது கவ்வும்’ ரிலீஸ் ஆச்சு. அந்த டீமை கூப்பிட்டு பேசுனீங்க. எங்களை மட்டும் கூப்பிடலை சார்’ என்றேன்.

அதற்கும் சிரித்துக்கொண்டே, ‘இமயமலைக்குப் போயிருப்பேன்’ என்று ரஜினி சார் பதில் சொன்னார்” என்றார் பக்ஸ்.

சில நிமிடங்கள் கழித்தே, ’அந்த பேச்சு எப்படி நிகழ்ந்தது’ என்று தான் யோசித்துப் பார்த்ததாகக் கூறினார்.

’ரெண்டு மூணு படம் ஹிட் ஆன ஹீரோக்கள் கிட்டயே நாம் விலகித்தான் நிற்கிறோம். ரொம்பவே க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்கிட்ட மட்டும்தான் இப்படி விளையாட முடியும்.

ரஜினி சாரிடம் அந்த இடத்தை நானாக எடுத்துக்கொள்ள முடியாது. அப்படியானால் அவ்வளவு இயல்பாக நம்மை எப்படி அவர் மாற்றுகிறார்? அதுதான் மேஜிக். அதே போல கமல் சார்கிட்டயும் இயல்பாக, மனதில் நினைப்பதைப் பேச முடியும்” என்று தெரிவித்தார் பக்ஸ்.

ரஜினி, கமல் இருவரது எதிரே நாம் நிற்கும்போது தானாக அவர்களது ரசிகர்களாகிவிடுவோம் எனக் கூறினார். ”ஒருவேளை அவர்களது ரசிகர்களாக இல்லை என்றால், ’இனிமேல் நீ என் ரசிகன்’ என்பதைத் தங்களது செயல்கள் மூலமாக நிகழ்த்திவிடுவார்கள். அவர்களது அணுகுமுறை வெவ்வேறாக இருந்தாலும், இலக்கு அது தான்” என்றார் பக்ஸ்.

இதற்கு முன்னர் இதே மாதிரியான கருத்துகளைப் பல பிரபலங்கள் பகிர்ந்திருந்தாலும், பக்ஸின் இந்த பேச்சு நமக்குப் பல வகையில் ஆச்சர்யத்தைத் தருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share