வந்த புதிதில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டு, ஆனால் வலுவிழந்த மார்க்கெட்டுக்கு சொந்தக்காரர் பாபி சிம்ஹா. அழகிய மலையாள நடிகை ரேஷ்மி மேனனை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆனதுதான் அவரைப் பற்றி இப்போது இருக்கும் முக்கிய நினைவு.
எனினும் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட சிலரின் மொழி பாசமும், அதே வகையில் தெலுங்கு சினிமாவின் ஆதரவும் பாபி சிம்ஹாவுக்கு என்றும் உண்டு.
இப்போதுதான் தெலுங்கில் எந்தப் படம் எடுத்தாலும் அப்படியே தமிழில் மொழி மாற்றி, சில இடங்களில் தமிழ் எழுத்துகள் வரும் ஷாட்களை மட்டும் எடுத்துக் கொண்டு, ‘தமிழிலும் எடுக்கப்பட்ட படம் ‘ என்று சத்தியம் செய்வதுதான் சர்க்கரைப் பொங்கலாக இருக்கிறதே.
அந்த வகையில் உருவாகிறது பாபி சிம்ஹா நடிக்கும் ஒரு புதிய படம்.
யுவா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவா கிருஷ்ணா தயாரிப்பில், மெஹர் இயக்கத்தில், பாபி சிம்ஹா மற்றும் ஹெப்பா படேல் நாயகன்–நாயகியாக நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ‘உருவாகி’றது இந்தப் படம். இது பாபி சிம்ஹாவின் இருபத்தைந்தாவது படம்.
இதுகுறித்து தயாரிப்பாளர் யுவா கிருஷ்ணா, ” இந்த படத்திற்காக பல கதைகளை கேட்டேன். இயக்குநர் மெஹர் என் நண்பர். அவர் இந்த கதையை சொன்னவுடனே மிகவும் பிடித்தது. அருமையான திரைக்கதை. நடிகர்களுக்கு நடிப்பில் சிறந்த வாய்ப்புகள் உள்ள கதை இது. இந்த கதையை கேட்டவுடன் முதலில் பாபி சிம்ஹா அவர்கள்தான் நினைவுக்கு வந்தார். தயாரிப்பாளராக எந்த சமரசமும் இல்லாமல், கதைக்கு தேவையான அனைத்தையும் வழங்கி ஒரு சிறந்த படமாக உங்கள் முன் கொண்டு வருகிறோம்.”என்கிறார்.
நடிகர் தனிகல பரணி “பாபி சிம்ஹா ஒரு சிறந்த நடிகர். அவர் பல சிறந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.. பாபி சிம்ஹாவுக்கு இது மிகவும் சவாலான கதாபாத்திரம்.” என்கிறார்.
நாயகன் பாபி சிம்ஹா, ” ஒரு நல்ல கதைக்காக காத்திருந்த நேரத்தில் யுவா எனக்கு அழைப்பு கொடுத்தார். கதையை கேட்டவுடன் மிகவும் பிடித்தது. இது ஒரு நடிகனாக எனக்கு சவாலான கதை. என் திரைவாழ்க்கையில் இது ஒரு புதிய முயற்சி. இதில் தாத்தா கதாபாத்திரம் ஒன்று உள்ளது. அந்த வேடத்தை பரணி அவர்கள் செய்கிறார் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவருடன் நடிப்பது ஒரு பெரிய சந்தோஷம். ஹெப்பா ஒரு சிறந்த நடிகை. அவருடன் பணியாற்றுவதும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் நல்ல குழுவுடன் இந்த படத்தை செய்கிறோம். தயாரிப்பாளர் யுவா மிகவும் ஆர்வமுள்ளவர். இந்த கதை சவாலானதாக இருப்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். டிசம்பர் 22 முதல் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. “என்றார்.
மஞ்சி சினிமா தீஸ்கோன்டி.
— ராஜ திருமகன்
