பாலசரவணன் – இளமைத் துடிப்புள்ள குணசித்திர நடிகர்! Actor Bala Saravanan film journey
பாலசரவணன். தமிழ் திரையுலகம் சமீபகாலமாக எதிர்கொண்டு வருகிற குணசித்திர, நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். வெற்றிகரமாக உலா வந்து கொண்டிருக்கும் இளம் கலைஞர்களில் முதல் வரிசையில் இடம்பெறுபவர். திரையில் தோன்றினால் குறைந்தபட்சமாக பத்து ‘காமெடி ஒன்லைனர்களை’ உதிர்த்துவிட்டுப் போவார் என்ற இளம் ரசிகர்களின் நம்பிக்கையை குலைத்துவிடாமல் பேணிப் பாதுகாப்பது இவரது சிறப்பு.
தொண்ணூறுகளில் சார்லி, தாமு, சின்னி ஜெயந்த், ஸ்ரீமன், வையாபுரி என்று குறிப்பிட்ட நடிகர்கள் நாயகர்களின் உயிர்த்தோழர்களாக நடித்திருக்கின்றனர். ‘போதும்’ என்று ரசிகர்கள் ‘தடை’ போட்டபிறகும்கூட, திரையில் அவர்களை கல்லூரிக்கு வழியனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் சில இயக்குனர்கள்.
இன்றைய தலைமுறையிடம் அது செல்லுபடியாகாது. அப்படியொரு நிலைமையைத் தான் நடிக்கிற படங்கள் சம்பாதித்துவிடக் கூடாது என்ற தெளிவைக் கொண்டிருப்பவர் பாலசரவணன். Actor Bala Saravanan film journey

அதனால், ஒவ்வொரு படத்திலும் நடிப்பும் தோற்றமும் பாத்திரத்தினை ரசிகர்கள் உள்வாங்கும்விதமும் ஒரேமாதிரியாக இருந்துவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டி வருவதே பாலசரவணனின் சிறப்பு.
பாலசரவணன் 1987ஆம் ஆண்டும் நவம்பர் 2ஆம் தேதி பிறந்தார். மதுரை வட்டாரத்திலுள்ள பள்ளி கல்லூரியில் படித்தார். Actor Bala Saravanan film journey
2009ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்’ சீரியல் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார் பாலசரவணன். அதையடுத்து, நகர்ப்புறப் பின்னணியில் அமைந்த ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்தார்.

அந்த சீரியலில் பாலசரவணன் நடிப்பில் தென்பட்ட ‘காமெடி டைமிங்’, அதற்குக் கிடைத்த வரவேற்பு ஆகியன ஒன்றிணைந்து அவருக்குச் சில திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தன. அவற்றுள் அவருக்கு நம்பிக்கையூட்டிய வாய்ப்பாக அமைந்தது ’குட்டிப்புலி’. முத்தையா இயக்கத்தில் சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த அந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரங்களில் ஒன்றாகத் தோன்றியிருந்தார் பாலசரவணன்.
திருமண வயதை நெருங்கிய நபராக நாயகன் திகழ, அவர் மீது நாயகி காதலில் விழ, அவர்களைக் கண்டு கடுப்பாகிற கல்லூரி இளசுகளில் ஒருவராகத் தோன்றியிருந்தார் பால சரவணன். அந்தப் படத்தில், அவரைப் போலவே இன்னும் நான்கைந்து பேர் அறிமுகமாயிருந்தனர். Actor Bala Saravanan film journey
அது, ‘தனியாக ஜொலிக்க முடியவில்லையே’ என்ற ஆதங்கத்தை நிச்சயமாக பால சரவணனுக்குள் விதைத்திருக்கும். அதனை மொத்தமாய் துடைத்தெறிவது போன்று அமைந்தந்து இயக்குனர் அருண்குமார் தந்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ பட வாய்ப்பு.

அந்தப் படத்தில் ‘பீடை’ என்ற பாத்திரத்தில் அழுக்கான உடையணிந்து, மனிதர்களின் இயல்பறிந்து செயல்படாத ஒரு மனிதராக நடித்திருந்தார். விஜய் சேதுபதி, ஜெயபிரகாஷ், துளசி ஏற்று நடித்த பாத்திரங்களை ரசிகர்கள் எப்படிக் கொண்டாடினார்களோ, அதே போன்று பாலசரவணனையும் அவர்கள் கொண்டாடிய படம் அது.
அதே போன்றதொரு வரவேற்பை திருடன் போலீஸ், டார்லிங், ஒருநாள் கூத்து, ராஜா மந்திரி, அதே கண்கள், ப்ரூஸ் லீ, ஹரஹர மகாதேவகி படங்களுக்கும் தந்தனர் ரசிகர்கள். இந்த காலகட்டத்தில் ‘கோதா’ எனும் படம் வழியே அவர் மலையாளத் திரையுலகிலும் அறிமுகமானார். Actor Bala Saravanan film journey
ஆண்டுக்கு குறைந்தது 5 முதல் பத்து படங்களில் நடிப்பது என்று நீண்டு கொண்டிருந்த பாலசரவணனின் வாழ்வு, கொரோனா காலத்தில் உருக்குலைந்தது. இதர மனிதர்கள் போல, அந்த காலகட்டத்தில் அவர் வீட்டுக்குள் முடங்கினார். அதன் விளைவாக, உடல்ரீதியாகவும் சில மாற்றங்களை எதிர்கொண்டார்.

அப்போது, ஈஸ்வரன் மற்றும் களத்தில் சந்திப்போம் படங்களில் நடிக்கிற வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பு, மீண்டும் அவர் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியது.
அந்த நேரத்தில், புதுமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தியின் ‘டான்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு பாலசரவணனைத் தேடி வந்தது. அதில் கல்லூரி செல்லும் இளைஞராகத் திரையில் தோன்றுவதற்காகத் தனது எடையைக் கணிசமாக அவர் குறைத்தார். அந்த தோற்றம் மீண்டும் அவரைப் புகழ் வெளிச்சத்தில் நிறுத்தியது.

இயக்குனர் ஹெச். வினோத்தின் ‘துணிவு’ படத்தில் நடித்த இளம் பத்திரிகையாளர் பாத்திரம் பாலசரவணன் வாழ்வில் மிக முகியமானது. ஏனென்றால், அதில் அவரது நடிப்பு ஆக்ஷன் காட்சிகளுக்கு நடுவே ரசிகர்களைக் கிச்சுகிச்சு மூட்டுவதாக அமைந்தது.
தொடர்ந்து அயலான், இங்க நான் தான் கிங்கு, ஹிட்லிஸ்ட் போன்ற படங்களில் மெலிதாகச் சிரிப்பூட்டிய பாலசரவணன், மீண்டும் ‘லப்பர் பந்து’ படத்தில் ‘பேக் டூ தி பெவிலியன்’ என்று சொல்லும்விதமாக தோன்றினார்.
வெறும் நகைச்சுவை நடிகனாக மட்டுமல்லாமல், ஒரு குணசித்திரக் கலைஞராகவும் அப்படத்தில் அவர் வெளிப்பட்டிருந்தார். சிகரம் தொட்டிருந்தார். அப்படிப்பட்ட வாய்ப்புகள் வெகு அரிதாகத்தான் நடிகர் நடிகையருக்கு அமையும்.
அந்த வகையில், ‘லப்பர் பந்துவுக்கு முன்’ ‘பின்’ என்று தனியாகச் சொல்லும் வகையில், பாலசரவணன் வாழ்வைப் புரட்டிப் போடுவதாக அமைந்தது அந்தப் படம். சமகாலச் சமூகம் குறித்த அவரது சிந்தனைகளை ரசிகர்கள் அறியச் செய்தது. கதையின் நாயகனாகவும் அவர் மிளிர முடியும் என்கிற எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறது. ஆக, அவரது திரைப்பயணத்தில் இன்னொரு திசை நோக்கிச் செலுத்தியிருக்கிறது ‘லப்பர் பந்து’.

இடைப்பட்ட காலத்தில், ‘பேச்சி’ என்ற ஹாரர் படத்திலும் சரி, ‘விலங்கு’ எனும் வெப் சீரிஸிலும் சரி, வழக்கத்தை மீறிய சில பாத்திரங்களில் பாலசரவணன் மிளிர்ந்தார். வேறொரு பாத்திரமாக அவர் உருமாறியிருந்ததைக் கொண்டாடினர் ரசிகர்கள்.
கடந்த சில மாதங்களாக, அவர் ஏற்கனவே நடித்த ‘மிஸ் யூ’, ‘தருணம்’, ‘2கே லவ் ஸ்டோரி’ ஆகியன அடுத்தடுத்து வெளியாகின. Actor Bala Saravanan film journey
வித்தியாசமான குரல், வசன உச்சரிப்பு, உடல்மொழி, பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்றாற் போன்று தோற்றமளிக்கும் திறன், இவையனைத்தையும் தாண்டி ஒரு பாத்திரமாகத் திரையில் தெரியும் பாங்கு என்று ’தனித்துவமாக’த் தெரிபவர் பாலசரவணன்.
இன்ஸ்டாரீல்ஸ் மூலமாக வாய்ப்பு தேடும் ஜென்ஸீ தலைமுறையோடு இணைந்து பயணிக்கிற துள்ளலுடன் மேலும் பல புதிய திரையனுபவங்களை பாலசரவணன் தர வேண்டும். ‘பத்தோடு பதினொன்று’ என்றில்லாமல் தனக்கான இடத்தைத் தருகிற படைப்புகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதே அவரைத் திரையில் ரசிப்பவர்களின் ஏகோபித்த விருப்பமாக இருக்க முடியும்!