ஒரு மொழியில் புகழ் பெற்றிருக்கும் நடிகர் நடிகைகள் இன்னொரு மொழியில் நடிக்கும்போது சில கஷ்டமான தருணங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அவற்றில் ஒன்று, தாய்மொழி சம்பந்தமான கேள்வி பதிலில் தடுமாறிச் சிக்கலில் மாட்டிக் கொள்வது. உணர்ச்சிமயமான மனநிலையில் ஏதோ சொல்ல நினைத்து, வேறுவிதமாகப் பதிலளித்து மாட்டிக்கொண்டவர்கள் நம்மூரிலும் உண்டு. ’அந்த வரிசையில் நானும் இருக்கிறேன்’ என்று இணைந்திருக்கிறார் பெங்காலி நடிகரான பிரசோன்ஜித் சாட்டர்ஜி. actor apologizes for insult mother tongue
ராஜ்குமார் ராவ் நாயகனாக நடித்துள்ள ’மாலிக்’ எனும் இந்திப்படத்தில் இவர் முக்கியப் பாத்திரம் ஏற்றிருக்கிறார். சமீபத்தில் மும்பையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.

அப்போது, அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரசோன்ஜித்திடம் பெங்காலியில் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு, “பெங்காலி மொழியில் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் என்ன” என்று அவரிடம் கேட்டிருக்கிறார் பிரசோன்ஜித்.
அந்த கேள்வி மட்டுமே திரும்பத் திரும்ப இணையத்தில் உலா வர, ‘தாய்மொழியான பெங்காலியை பிரசோன்ஜித் அவமதித்துவிட்டார்’ என்று மேற்கு வங்காளத்தில் உள்ள ரசிகர்கள் சிலர் கொதித்துவிட்டனர். மெல்ல விஷயம் பூதாகரமாகவதை அறிந்து சுதாரித்துக்கொண்ட பிரசோன்ஜித், ரசிகர்களிடம் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டு விளக்கம் வெளியிட்டிருக்கிறார்.
மும்பையில் அந்த விழா நடந்தது என்றும், அதில் பங்கேற்றவர்கள் அனைவரும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள் என்றும், பெங்காலியில் நான் பதிலளித்தால் அவர்களுக்குப் புரியாது என்பதால் தான் அப்படிச் சொன்னதாகவும் அந்த விளக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
“42 வருஷமா பெங்காலி சினிமாவுல இருக்கேன். இப்படி ஒரு விஷயம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கலை. இங்கிலீஷ்ல நான் சொன்ன பதில் தெளிவில்லாம இருந்ததால வந்த தவறான புரிதல் இது. தாய்மொழியான பெங்காலியை அவமதிக்கணும்னு இதுவரை கனவுல கூட நினைச்சதில்ல” என்று உருக்கமாகத் தனது தரப்பு விளக்கத்தைத் தந்திருக்கிறார் பிரசோன்ஜித்.
‘பான் இந்தியா’ படங்கள் பெருகி வருகிற காலகட்டத்தில், இது போன்ற சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போக்கைக் காணும்போது, ‘இது மாதிரியான விஷயங்களைத் திரையுலக நட்சத்திரங்கள் சூதனமாக கையாள்வதற்கான வழிமுறைகள் இதோ’ என்று யூடியூப்பில் சிலர் வீடியோக்கள் வெளியிட்டாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
