புஷ்பா 2 திரைப்படம் பார்க்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில், நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4-ஆம் தேதி இரவு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படத்தின் பிரிமியர் ஷோ திரையிடப்பட்டது.
படத்தைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கு முன்பு குவிந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வேளையில், அல்லு அர்ஜூன் சர்ப்ரைஸாக திரையரங்குக்கு எண்ட்ரி கொடுத்தார்.
இதனால் அல்லு அர்ஜூனுடன் செல்ஃபி எடுப்பதற்காக கூட்டம் முண்டியடித்தது. இதனால் கூட்ட நெரிசல் எற்பட்டது.
இந்தக் கூட்ட நெரிசலில் தில்சுக்நகரைச் சேர்ந்த ரேவதி (வயது 39) என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீ தேஜ் (வயது 9) படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தநிலையில், உயிரிழந்த பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அல்லு அர்ஜூன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன், தியேட்டர் அதிபர் சந்தீப், சீனியர் மேலாளர் நாகராஜூ உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சந்தீப், நாகராஜூ ஆகியோரை சிக்கட்பள்ளி போலீசார் நேற்று (டிசம்பர் 12) கைது செய்தனர். இந்தநிலையில், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அல்லு அர்ஜூன் வீட்டிற்கு இன்று காலை சென்ற போலீசார், அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து சிக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அல்லு அர்ஜூனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து நம்பள்ளி குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லு அர்ஜூன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அல்லு அர்ஜூனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, அவரது ரசிகர்கள் அதிகளவில் நீதிமன்றத்தின் முன்பு குவிந்தனர். மேலும், அல்லு அர்ஜூனை விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
25 Years of Bala : தமிழ் சினிமாவின் இன்னொரு முகத்தை காட்டிய பாலா