ADVERTISEMENT

கிளப்களில் சிசிடிவி: டிஜிபிக்கு உத்தரவு!

Published On:

| By Balaji

பொழுதுபோக்கு கிளப்களில் தவறான நடவடிக்கைகள் நடைபெறாமல் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி பொருத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

பொழுதுபோக்கு கிளப்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி காஞ்சிபுரம் மாவட்டம் எம்.எம்.நகர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு கிளப், சென்னை வடபழனி பைவ் ஸ்டார் கிளப் ஆகியவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

ADVERTISEMENT

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிளப்களுக்கு வரும் உறுப்பினர்களில் சிலர் தடை செய்யப்பட்ட ரம்மியை விளையாடுவதாகவும், அவர்களை கண்காணித்து, நடவடிக்கை எடுப்பதாக கூறி, மற்ற உறுப்பினர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் தடை செய்யப்பட்ட ரம்மியை விளையாடுவதாக புகார்கள் வரும் நபர்கள் பொழுதுபோக்கு கிளப்களுக்கு வந்தால், அவர்களை கண்காணிக்க மட்டுமே உள்ளே செல்வதாகவும், அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் நோக்கம் ஏதும் இல்லை . உறுப்பினர்களுக்கு எதிராக புகார்கள் வராத நிலையில் கிளப்களுக்குள் செல்வதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கிளப் நடவடிக்கைகளில் காவல்துறை தலையிடுவதாக தொடர்ந்து புகார்கள் வருவதால், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையிலும், பொழுதுபோக்கு கிளப்களில் தவறான நடவடிக்கைகள் நடைபெறாமல் கண்காணிக்கும் வகையிலும் கிளப்களில் ரகசிய கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தலாம் என பரிந்துரை செய்தார்.

அவ்வாறு கிளப்களில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் உறுப்பினர்களின் தனியுரிமையையும், காவல்துறை விசாரணையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக உரிய ஆலோசனை நடத்தி முடிவெடுக்க தகுந்த நபராக தமிழக டிஜிபி இருப்பதால், அவரை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்தும் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் பரிந்துரையை அமல்படுத்த முடியுமா, அதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து விரிவான ஆய்வுசெய்து உறுதியான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share