சில திரைப்படங்களின் ‘ட்ரெய்லர்’ பார்த்தால் ‘சூப்பர்’ என்று சொல்லும்விதமாக, நம்மை தியேட்டருக்கு அழைத்துச் செல்லும். சிலவற்றைக் கண்டால், ‘இதுவே திருப்தியா இருக்கு,. படம் கூட பார்க்க வேண்டாம்’ என்ற எண்ணம் தோன்றும்.
ட்ரெய்லர் நன்றாக இருந்து, அதற்கு நேரெதிராகத் திரையில் காண முடியாத அளவுக்குச் சில படங்கள் இருந்திருக்கின்றன. சில படங்களின் ட்ரெய்லர் மிக மோசமாக ‘கட்’ செய்யப்பட்டிருந்தாலும், திரையில் வேறொரு அனுபவம் காணக் கிடைக்கும். accused trailer gives postive vibes
மேற்சொன்னவற்றில் ’அக்யூஸ்டு’ திரைப்படம் எந்த ரகத்தில் சேரும் எனத் தெரியவில்லை.
இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் யூடியூபில் வெளியானது. ‘இது கேங்க்ஸ்டர் படங்களில் இன்னொன்று’ என்று சொல்லும்விதமாக இருந்தது. அதேநேரத்தில், வழக்கமான பாத்திர வார்ப்பின் ஊடே அசாதாரணமான கதை சொல்லல் இருக்குமோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது.
உதயா, யோகிபாபு, அஜ்மல், ஜான்விகா கலாகேரி, டி.சிவா, பவன், பிரபு சாலமோன் உள்ளிட்ட பல நடித்திருக்கிற இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிரபு ஸ்ரீனிவாஸ். நரேன் பாலகுமார் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
’மன்சூர் அலிகான் தவிர மத்த எல்லோரும் கைதியா நடிக்கிறாங்க’ என்று யோகிபாபு பேசுகிற ‘பஞ்ச்’ உட்பட ட்ரெய்லரில் வருகிற வசனங்கள் சட்டென்று கவனம் ஈர்க்கின்றன. அதேநேரத்தில் ‘காட்சிரீதியாக’ இந்த ட்ரெய்லர் பெரியளவில் நம்மை ஈர்ப்பதாக இல்லை. இதுவே உண்மை.
அதேநேரத்தில் ‘ரெட்’, ’டான்சேரா’, ‘புதுப்பேட்டை’, ‘பட்டியல்’, ‘நாளை’ என்று 2000ஆவது ஆண்டுக்குப் பிறகு பல திரைப்படங்கள் ‘கேங்க்ஸ்டர்’ வாழ்வைச் சொல்வதாக இருந்தன. அவற்றில் ‘புதுப்பேட்டை’ அளவுக்கு ‘கிளாசிக்’ அந்தஸ்தை வேறு படங்கள் பெறவில்லை. ஆனால், அந்த படங்களைத் தாண்டிப் புதிதாகச் சில விஷயங்கள் இருக்குமென்ற நம்பிக்கையைத் தருகிறது ‘அக்யூஸ்டு’. ட்ரெய்லரில் தெரிகிற சில காட்சிகள், இதன் திரைக்கதை ட்ரீட்மெண்டில் யதார்த்தத்தின் சாயல் பெரிதாக இராது என்றுணர்த்துகிறது.
அதையும் மீறி, நல்லதொரு திரையனுபவத்தை ‘அக்யூஸ்டு’ தருமா என்பதை தியேட்டர்களில் வெளியாகும்போது தெரிந்துகொள்ளலாம்..!
