விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Accident at a cracker factory
விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால் இங்கு விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
அதன்படி இன்று (ஜூன் 11) விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே,வடகரை கிராமத்தில் ராஜா சந்திரசேகருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த அலையில் இன்று (ஜூன் 11) காலை வழக்கம்போல் 100க்கும் அதிகமானோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில், 3 அறைகள் இடிந்து சேதமானது.
இதனால் தொழிலாளர் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். சிலர் உள்ளே சிக்கி கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கல்குறிச்சியை சேர்ந்த சவுடம்மாள் (53), கண்டியனேந்தல் கருப்பையா (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முருகன் (45), பிச்சையம்மாள் (43), கணேசன் (43) ஆகியோர் பலத்த காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வெடிவிபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தநிலையில், ஆலையின் போர்மேன் வீர சேகரன், மேற்பார்வையாளர் கனி முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் ராஜா சந்திரசேகரை போலீசார் தேடி வருகின்றனர். Accident at a cracker factory
