அதிமுக சட்ட விதிகள் ஏற்பு: தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

Published On:

| By Jegadeesh

அ.தி.மு.க.வின் விதிமுறைகளை மாற்றம் செய்ததை ஏற்றுக்கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் இன்று (மே16) பதிவேற்றம் செய்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி தீர்ப்பு வெளியானது.
அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இதன் பின்னர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரி அதிமுக தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.

பின்னர், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்.

மேலும் அதிமுகவின் சட்டவிதிகள் திருத்தம், நிர்வாகிகள் மாற்றம் போன்றவற்றை ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் அ.தி.மு.க.வின் விதிமுறைகளை மாற்றம் செய்ததை ஏற்றுக்கொண்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் இன்று பதிவேற்றம் செய்துள்ளது.

இதனிடையே நாளை (மே 17) மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுள்ளது என்பதை தேர்தல் ஆணைய நடைமுறை முழுமைப்படுத்தியுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை!

மெத்தனாலுக்கு தமிழ்நாட்டில் தடையா?: மா.சுப்பிரமணியன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share