5? 6? திமுக கூட்டணியில் சிபிஎம் நீடிப்பா? ஸ்டாலின் சொன்னது என்ன? பெ.சண்முகம் பேட்டி- முழுமையாக!

Published On:

| By Mathi

CPM DMK Talks

திமுக கூட்டணியில் 5 தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், தங்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய நிலையில் திமுக கூட்டணியிலேயே சிபிஎம் தொடருகிறது என்றும் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் 5 இடங்களை சிபிஎம் கட்சிக்கு ஒதுக்க திமுக முன்வந்தது. ஆனால் திமுக கூட்டணியில் 6 இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதில் சிபிஎம் உறுதியாக இருக்கிறது. இந்த 6 என்ற எண்ணிக்கையை குறைப்பதை ஏற்க முடியாது என சிபிஎம் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தலைமையிலான குழு இன்று மார்ச் 22-ந் தேதி சந்தித்து பேசியது.

இச்சந்திப்புக்குப் பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவின் பேச்சுவார்த்தை குழுவினரை எங்களது பேச்சுவார்த்தை குழு இன்று சந்தித்து பேசியது. அப்போது, “5 தொகுதிகளை நீங்கள் ஏற்க வேண்டும்.. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தொடர்வதற்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சந்திப்பதற்கும் அது கட்டாயம் பயன்படும். ஆகவே நீங்கள் இந்த 5 என்கிற எண்ணிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

ADVERTISEMENT

முதலமைச்சருடைய கருத்தை கட்சியினுடைய மாநில செயற்குழுவில் விவாதித்து அதனுடைய முடிவு என்ன என்பதை நாங்கள் உரிய முறையில் தலைவருக்கு செய்திகள் அனுப்புகிறோம் என்பதைச் சொல்லி இருக்கிறோம்.

மாநில செயற்குழு கூடி முதலமைச்சர் இப்படியாக வேண்டுகோள் விடுத்திருக்கிற நிலையில் அதை ஏற்பதா? எப்படி? என்பது சம்பந்தமாக நாங்கள் முடிவெடுப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ADVERTISEMENT

எங்களது செயற்குழு இன்று மாலையோ நாளை காலையோ அவசரமாக சந்திப்போம்.

20 நாட்களாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் முதலமைச்சரோடு இதுதான் முதல் சந்திப்பு, பேச்சுவார்த்தை சம்பந்தமாக. முதலமைச்சர் இப்படி நேரடியாக அழைத்துத் தொகுதி உடன்பாடு சம்பந்தமாக இதுவரைக்கும் பேசல. இப்போ அவருடைய வேண்டுகோள் என்கிற முறையிலே அவர் தெரிவித்திருக்கிற நிலையில் அவருடைய வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நாங்கள் கட்டாயம் பேசுவோம் என்பதைச் சொல்லியிருக்கிறோம்.

காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் கூடுதலாக கொடுத்துள்ளதை முதலமைச்சரே தெரிவிச்சாங்க… அது ஏதோ ஒரு ரகசிய விஷயம் மாதிரி நீங்க வந்து கேட்டுக்கிட்டு இருக்கீங்க. முதலமைச்சரே இந்த மாதிரி கொடுத்ததுனால இன்னும் வேறு சில கட்சிகள் வந்திருக்கிறதினால ஏற்பட்டிருக்கிற நெருக்கடிகளை அவரே தெரிவித்தார். நாங்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது எதுவும் ஒன்னும் ரகசியமான உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் எதுவும் ஏற்படல. எல்லாமே வெளிப்படையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வெளிப்படையாகப் பேச்சுவார்த்தை என்பது நடைபெறுகிறது. நாங்கள் செயற்குழு கூடி முடிவெடுத்து முறையாக நாங்கள் தெரிவிப்போம்.

கடந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக எல்லாத்துக்குமே சமமாக 6 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. இந்த முறை எல்லோருமே குறைத்துக் கொள்வதற்கு முன்வந்திருக்கிற நிலையில் நீங்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதை நாங்கள் பரிசீலிக்கிறோம்னு சொல்லியிருக்கிறோம்.

எங்களுடைய கட்சியின் பலம் இருக்கிற மாவட்டங்களில் எங்களுக்குக் கடந்த முறை தொகுதி என்பது ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கன்னியாகுமரியோ, கோயம்புத்தூரோ, திருப்பூரோ இந்த மாதிரி எங்களுடைய கட்சி வலுவாக இருக்கக்கூடிய மாவட்டங்களில் தொகுதி கிடைத்திருந்தால் நாங்கள் கடந்த முறை 6 இடங்களிலுமே வெற்றி பெற்றிருப்போம்.

நான் பலமுறை சொல்லிட்டேன். முதல்ல நம்பரை முடிவு பண்றது, அதுக்கப்புறம் தான் தொகுதி பட்டியலை வழங்குவோம். இப்பவும் அதேதான்.

5 தொகுதிகள் என்பதை மாநில குழு ஒப்புக் கொள்ளாத நிலையில் அப்போது பார்ப்போம். யூகத்துலயே ஏன் கேள்வி கேக்குறீங்க?

மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்துதான் 2026 சட்டமன்றத் தேர்தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சந்திக்கும். தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது என்ற போராட்டத்தை நாங்க நடத்துவது என்பது வேறு. அதற்காக வேறுவிதமான முடிவுகள் எதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்லாது. எந்த நேரத்திலயும் அப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு நாங்க போனது கிடையாது.

கொள்கைப்பூர்வமாக எங்களுடைய தீர்மானத்தின் அடிப்படையில் இந்த அணியில் நீடிக்கிறோம். அதனால அவங்க எத்தனை தொகுதிகள் கொடுக்கிறாங்க என்பதைப் பொறுத்து இந்த அணியில் நீடிப்பதா நீடிக்க வேண்டாமா என்று முடிவு செய்வதல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

சென்னையிலும் நாங்கள் கட்டாயம் நாங்க போட்டியிடுவோம். சென்னை தமிழ்நாட்டுலதானே இருக்கு. தொகுதிப் பட்டியலைப் பொறுத்தவரைக்கும் நாங்க இந்தத் தொகுதி எண்ணிக்கை சம்பந்தமாக உடன்பாடு ஏற்பட்டதற்குப் பிறகு அதற்கான பட்டியலை வழங்குவோம். சென்னை உட்பட வலுவான இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது எங்களுடைய விருப்பப்பட்டியலில் இருக்கக்கூடியதுதான்.

எங்கள் நிலைப்பாட்டில் குழப்பமெல்லாம் ஒன்றும் இல்லை. 6 தொகுதி பெற வேண்டும் என்பதே மாநிலக்குழுவினுடைய முடிவு. முதலமைச்சர் அவர்கள் 5 தொகுதிகளை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். மீண்டும் நாங்க விவாதித்து, ஏன்னா முதலமைச்சர் அளவுல கூப்பிட்டுப் பேசி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிற நிலையில், அதைப் பற்றிப் பரிசீலிக்க வேண்டியது எங்களுடைய கடமை. நாங்க கட்டாயம் பரிசீலித்து முடிவைத் தெரிவிப்போம்.

நிறைய கட்சிகள் இருக்கக்கூடிய நிலையில் தொகுதிகள் சம்பந்தமான பேச்சுவார்த்தை இந்த மாதிரி நீடிப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share