திருமணம், வாழ்க்கையில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு என்பதால் பலரும் அதை பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் கொண்டாட வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால், தங்களின் வசதிக்கேற்றவாறு திருமணங்களை வித்தியாசமான முறையில் நடத்துவார்கள். தற்போது ஒருஜோடி தற்போதைய கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிச்சயதார்த்த விழாவை நடத்தியுள்ளனர்.
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதல் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. அத்துடன் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டு வருவதுடன், இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விழிப்புணர்வு பணியில் அரசுக்கு உதவும் வகையில், பூவிருந்தமல்லியில் திருமண நிச்சயதார்த்த விழா ஒன்று நடந்துள்ளது.
சென்னை பூவிருந்தவல்லியில் எம்.எஸ்.ஐ தேவாலய மண்டபத்தில் ஸ்டெல்லா மேரி என்ற பெண்ணுக்கும் விவேக் என்ற பையனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
மணமக்களுக்கு வாழ்த்துக் கூற மேடைக்கு வந்தவர்களிடம் சாப்பிட்டீர்களா என்று கேட்பது போல் கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா என்று மணமக்கள் விசாரித்துள்ளனர். செலுத்தாதவர்களை விரைவில் செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அதனுடன் நிச்சயதார்த்தத்துக்கு வந்தவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது.
மாஸ்க்கினால் செய்யப்பட்ட மாலைகளை அனைவரது மத்தியிலும் மாற்றிக்கொண்டு திருமண பந்ததத்தில் இணைய உறுதி ஏற்றுக் கொண்ட ஜோடி, “இரண்டு டோஸ் தடுப்பூசி… உங்களுக்குப் பிரியாணி விருந்து”, “தடுப்பூசி செலுத்தி ஒமிக்ரானை ஓடவிடுவோம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
**-வினிதா**
