மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் ஆண்டின் தொடக்கத்தில் ”ஆளுநர் உரை வாசிப்பு” என்ற நடைமுறையை விலக்குவதற்கு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் இன்று ஜனவரி 20-ந் தேதி காலை தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்து அனுப்பிய உரையை வாசிக்க வேண்டும். இதுதான் நடைமுறை.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்து வந்தார் ஆளுநர் ரவி. சட்டப்பேரவை கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படுகிற மரபில் திருத்தம் செய்து தேசிய கீதத்தை பாட வேண்டும் என்பது ஆளுநர் ரவியின் கோரிக்கை. இதனை தமிழ்நாடு அரசு நிராகரித்துவிட்டது.
இந்நிலையில் இன்றும் 4-வது ஆண்டாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். சட்டப்பேரவை கூட்டத்தின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்து ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்துள்ளார்.
இதனைக் கண்டித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, ‘நாடு முழுவதும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர்கள் உரை வாசிப்பு என்ற நடைமுறை இருந்து வருகிறது. இந்த நடைமுறையை விலக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம். இதற்காக அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வோம் என்று அதிரடியாக அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
