பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 245 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. abishek sharma shares his secret after century 141
அந்த அணியின் வெற்றிக்கு 55 பந்துகளில் 141 ரன்கள் குவித்த ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா ஒரு முக்கிய காரணம்.
தனது அதிரடி சதத்தின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன் குவித்த வீரர்களில் மூன்றாவது இடத்தை பெற்றார். கெயில்(175*) மற்றும் மெக்குலம் (158*) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். அதே வேளையில் ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை அவர் வசமானது.

இதனையடுத்து போட்டிக்கு பின்னர் அபிஷேக் சர்மா அளித்த பேட்டியில் உணர்ச்சிவசத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து பேசினார்.
அவர், “எனது ஃபார்முக்கு முக்கியமாக அணிக்கும் கேப்டனுக்கும் நன்றி சொல்ல வேண்டும். கம்மின்ஸ் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவு கொடுப்பார். எனக்கும், டிராவிஸுக்கும் ஒரு சிறப்பு நாளாக இது அமைந்தது.
நான் பெரிதாக எதையும் இன்று யோசிக்கவில்லை. விக்கெட்டின் தன்மையை அறிந்து, சில ஷாட்களை முயற்சித்தேன். க்ளிக் ஆனது. போட்டிக்கு முன்பாக என் பெற்றோருக்காக மொத்த அணியும் காத்திருந்தது மறக்க முடியாதது.
ஒரு அணியாக நாங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினோம். அணியின் மனநிலை மிகவும் நன்றாக இருந்தது. தனிப்பட்ட முறையில் தொடர் தோல்வியை முறியடிக்க விரும்பினேன். அடுத்தடுத்த தோல்வி ஒரு வீரராகவும் ஒரு இளைஞனாகவும் ஏற்றுக்கொள்ள எனக்கு கடினமாக இருந்தது.
இந்த நேரத்தில் எனது பயிற்சியாளர் யுவராஜ் சிங்கிற்கும், டிப்ஸ் கொடுத்த சூர்யகுமார் யாதவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு ஆதரவாக அவர்கள் இருந்தனர்” என அபிஷேக் சர்மா தெரிவித்தார்.