குன்றத்தூர் குழந்தைகள் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ப.உ.செம்மல், அபிராமியை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தாததற்கு போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தார். Abirami to delay going to court
குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி, அதே பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தார். இதற்காக சுந்தரத்தின் பேச்சை கேட்டு சதித் திட்டம் தீட்டிய அபிராமி தனது இரண்டு குழந்தைகளை பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்றார்.
இந்த வழக்கில் கைதான அபிராமியும், சுந்தரமும் 7 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஜூலை 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
“இன்று (ஜூலை 24) தீர்ப்பு வெளியாவதையொட்டி, அபிராமியும் சுந்தரமும் நேற்றிரவு தூங்கவில்லை. இன்று காலை இருவரும் கோர்ட்டுக்கு போக கிளம்பினர். அவர்களை அழைத்துச் செல்ல குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் எஸ் கார்டு போலீசாரும் வந்துவிட்டனர். போலீசார் வந்த தகவலும் இருவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அபிராமி வரவில்லை. சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார். இதனால் தாமதமாகத்தான் சிறையில் இருந்து கிளம்பினார்கள்” என்கிறார்கள் புழல் சிறை வட்டாரத்தில்.
சிறையில் இருந்தே தாமதமாக கிளம்பியதால் நீதிமன்றத்தை அடைவதற்கும் தாமதம் ஆகிவிட்டது.
இதையடுத்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட அபிராமியும், சுந்தரமும் நீதிபதி முன் நிறுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதி ப.உ.செம்மல், உரிய நேரத்தில் குற்றவாளிகளை ஆஜர்ப்படுத்தவில்லை எனவும் கடமையை சரியாக செல்லவில்லை என்றும் குன்றத்தூர் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தார்.
அந்த சமயத்தில் தனது துப்பட்டாவால் அபிராமி முகத்தை மூடியிருந்தார். இதனை பார்த்த நீதிபதி, குற்றவாளிக்கு ஏன் துப்பட்டாவை வழங்கினார்கள். அதைவைத்து அவர் கழுத்தை நெறித்து தற்கொலை செய்ய நேரிடும் என்று போலீசாருக்கு எச்சரித்தார்.
இதையடுத்து அபிராமி சார்பில், தனக்கு வயதான தாய் தந்தை இருக்கிறார்கள். அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் குறைந்தபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
சுந்தரம் சார்பில், தனது அப்பாவுக்கு 70 வயதாகிவிட்டது என்பதாலும் 7 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டதாலும் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, இருவரையும் குற்றவாளி என அறிவித்து கடைசி மூச்சு அதாவது சாகும் வரையில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
தீர்ப்பை கேட்ட அபிராமியும், சுந்தரமும் கதறி அழுதனர். பின்னர் நீதிமன்ற அறையில் இருந்து போலீசார் இருவரையும் வெளியே அழைத்து வந்தனர். அப்போது அபிராமியிடம் துப்பட்டா இல்லை. இதனால் கையை வைத்து முகத்தை மறைத்துக்கொண்டு அழுதுகொண்டே இருந்தார்.
பின்னர் இருவரையும் வேனில் ஏற்றி புழல் சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். Abirami to delay going to court
