தேர்வு வினாத்தாள் மோசடி விவகாரங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 1 வாரத்துக்குள் தமது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று காக்ரோச் (Cockroach) ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் திப்கே (Abhijeet Dipke) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிரான டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தைத் தொடர்ந்து தமது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவுக்கு இன்று திரும்பினார் அபிஜீத் திப்கே.
அபிஜீத் திப்கே இன்று ஜூன் 7-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியால் ரஷ்யா-உக்ரைன் போரையே நிறுத்த முடிகிறது;அவரால் ஏன் தேர்வுகளின் வினாத்தாள் கசிவை நிறுத்த முடியவில்லை?
தேர்வு முறைகேடுகளுக்கு கல்வி அமைச்சகம்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்க வேண்டியது பிரதமர் மோடியின் பொறுப்பு.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அடுத்த ஒரு வாரத்திற்குள் தானாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் டெல்லியில் தொடங்கிய இந்த போராட்டம் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட நாடு தழுவிய தொடர் போராட்டமாக மாறும்.

இன்றைய இளைஞர்கள் (Gen Z) எதற்கும் பயப்படுபவர்கள் அல்ல என்பதை டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம் நிரூபித்துள்ளது. இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்பும் கிடைப்பதில்லை, தேர்வுகளும் சரியாக நடத்தப்படுவதில்லை. இதனால் அவர்களின் எதிர்காலமே பாழாகிறது. இதற்கு எதிராக இளைஞர்கள் குரல் எழுப்ப வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பது மட்டுமே ஜனநாயகம் அல்ல. நாம் யாருக்கு வாக்களித்தோமோ, அவர்களிடம் கேள்விகளை எழுப்ப வேண்டும். நாம் கேள்விகள் கேட்காததால் தான் தொடர்ச்சியாக தேர்வுத்தாள் கசிவுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
நான் தனியாக இவ்வளவு பெரிய போராட்டத்தை முன்னெடுப்பதைக் கண்டு என் பெற்றோர் பயப்படுகிறார்கள். ஆனால், என்னுடன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள், நான் தனி ஆள் இல்லை என்று அவர்களிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.
