ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு! இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நவம்பர் 1, 2025 முதல் ஆதார் தொடர்பான பல முக்கிய மாற்றங்களை அமல்படுத்த உள்ளது. இந்த மாற்றங்கள் ஆதார் சேவைகளை எளிதாக்குவதுடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் KYC செயல்முறைகளையும் மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்டைதாரர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும் இந்த புதிய விதிகள் பற்றிய முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.
நவம்பர் 1 முதல், ஆதார் அட்டைதாரர்கள் இனி தங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற மக்கள்தொகை விவரங்களை ஆதார் சேவை மையங்களுக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தே ஆன்லைனில் புதுப்பிக்க முடியும். UIDAI அறிமுகப்படுத்தியுள்ள புதிய சரிபார்ப்பு அமைப்பு, உங்களது விவரங்களை பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் பள்ளிச் சான்றிதழ்கள் போன்ற அரசு தரவுத்தளங்களுடன் தானாகவே ஒப்பிட்டு சரிபார்க்கும். இதனால், மனிதத் தலையீடு குறைந்து, தரவு பிழைகள் தவிர்க்கப்பட்டு, புதுப்பிப்பு செயல்முறை வேகமாகவும் பாதுகாப்பாகவும் மாறும்.
ஆதார் புதுப்பிப்புக்கான சேவைக் கட்டணங்கள் அக்டோபர் 1, 2025 முதல் திருத்தப்பட்டுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வது அவசியம்= மாற்றப்பட்ட கட்டண அமைப்பு
- பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் போன்ற மக்கள்தொகை விவரங்களைப் புதுப்பிக்க இனி ரூ. 75 வசூலிக்கப்படும் (முன்பு ரூ. 50).
- கைரேகை, கருவிழி ஸ்கேன் அல்லது புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க ரூ. 125 கட்டணம் (முன்பு ரூ. 100).
- 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புகள் இலவசமாக செய்யப்படும். 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பயோமெட்ரிக் புதுப்பிப்புகள் இலவசம்.
- ஆதார் சேவா கேந்திராவில் ஆவண புதுப்பிப்புகளுக்கு ரூ. 75 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், ஆன்லைன் மூலம் ஆவண புதுப்பிப்புகள் ஜூன் 14, 2026 வரை இலவசமாகக் கிடைக்கும்.
- ஆதார் கார்டை மீண்டும் அச்சிடக் கோரினால் ரூ. 40 கட்டணம் வசூலிக்கப்படும்.
- வீட்டிலிருந்தே ஆதார் சேவைகளைப் பெற, முதல் நபருக்கு ரூ. 700 மற்றும் அதே முகவரியில் உள்ள ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் ரூ. 350 கட்டணம் வசூலிக்கப்படும்.
பான்-ஆதார் இணைப்பு கட்டாயம்: டிசம்பர் 31 கடைசி நாள்!
பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் ஆதார் எண்ணை டிசம்பர் 31-க்குள் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், 2026 ஜனவரி 1 முதல் உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும். இதனால், வருமான வரி தாக்கல், பரஸ்பர நிதி மற்றும் டிமேட் கணக்குகள், வரி சேமிப்பு முதலீடுகள் போன்ற பல நிதி சார்ந்த நடவடிக்கைகளில் சிக்கல்கள் ஏற்படும். புதிய பான் கார்டு விண்ணப்பிக்கும்போது ஆதார் அங்கீகாரம் இனி கட்டாயமாக்கப்படும். செயலில் உள்ள மற்றும் நகல் இல்லாத ஆதார் எண்கள் மட்டுமே KYC-க்கு செல்லுபடியாகும் என்பதால், உங்களது ஆதார் எண் சரியானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
KYC செயல்முறை எளிதாக்கப்பட்டது!
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் KYC சரிபார்ப்பை இனி ஆதார் OTP சரிபார்ப்பு, வீடியோ KYC அல்லது நேரில் சென்று சரிபார்ப்பு மூலமாகவும் முடிக்கலாம். இது காகிதமில்லா மற்றும் விரைவான செயல்முறையாக இருக்கும் என UIDAI தெரிவித்துள்ளது.
மற்ற முக்கிய மாற்றங்கள்:
- வங்கி கணக்கு நாமினிகள்: நவம்பர் 1 முதல், வங்கிக் கணக்குதாரர்கள் தங்கள் வங்கிக் கணக்குகள், லாக்கர்கள் மற்றும் பாதுகாப்பான காப்பக சேவைகளுக்கு நான்கு நாமினிகள் வரை சேர்க்கலாம் (முன்பு ஒரு நாமினி மட்டுமே).
- SBI கட்டணங்கள்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) நவம்பர் 1 முதல், கல்வி சேவைகள் மற்றும் வாலட் ரீசார்ஜ்களுக்கு (ரூ. 1,000க்கு மேல்) மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் செய்யப்படும் கட்டணங்களுக்கு 1% பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கும்.
- AePS விதிகள்: 2026 ஜனவரி 1 முதல், ஆதார் அடிப்படையிலான பணம் செலுத்தும் முறைக்கு (AePS) புதிய KYC மற்றும் மோசடி கண்காணிப்பு விதிகள் பொருந்தும். இது கிராமப்புறங்களில் ரொக்கப் பணம் எடுத்தல் மற்றும் டெபாசிட் செய்வதை ஒழுங்குபடுத்த உதவும்.
- அஞ்சலக திட்டங்கள்: அஞ்சலக திட்டங்களான தொடர் வைப்புத்தொகை (RD), பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் (NSC) போன்றவற்றை ஆதார் e-KYC மூலம் இனி தொடங்கலாம்.
