ஆதார் கார்டு தொடர்பான விதிமுறை விரைவில் மாறவிருக்கிறது. இனி இந்த இடங்களில் உங்களிடம் ஆதார் நகல் கேட்கமாட்டார்கள்.
இந்திய அரசு விரைவில் ஒரு புதிய விதியை அமல்படுத்த உள்ளது. இதன் மூலம், ஹோட்டல்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் இது போன்ற இடங்களில் ஆதார் அட்டையின் புகைப்பட நகல்களை வாங்குவதையும், சேமித்து வைப்பதையும் முற்றிலும் நிறுத்த வேண்டும்.
ஆதார் அட்டையின் காகித நகல்களை வைத்திருப்பது தனிநபர் ரகசியத்திற்கு ஆபத்தானது என்றும், இது ஆதார் சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
இந்த புதிய விதியின்படி, ஆதார் அட்டையை ஆஃப்லைனில் சரிபார்க்க விரும்பும் எந்தவொரு நிறுவனமும் UIDAI உடன் பதிவு செய்ய வேண்டும். மேலும், டிஜிட்டல் முறைகள் மூலமாக மட்டுமே சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறைத்து UIDAI தலைவர் புவனேஸ் குமார் கூறுகையில், “அனைத்து நிறுவனங்களும் இனி QR குறியீடுகள் மற்றும் ஆப்-அடிப்படையிலான சரிபார்ப்பை ஒரு பாதுகாப்பான API (Application Programming Interface) மூலம் பயன்படுத்த வேண்டும்” என்றார்.
அதாவது, ஹோட்டல்கள், நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் மற்றும் பிற இடங்களில் ஆதார் அட்டையின் காகித நகல்களை இனி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. காகித அடிப்படையிலான சரிபார்ப்பைக் குறைப்பதும், ஆதார் தரவு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும்.
UIDAI தற்போது ஒரு புதிய செயலியை சோதனை செய்து வருகிறது. இந்த செயலியின் சிறப்பு என்னவென்றால், இதற்கு ஒரு மத்திய சர்வரின் நேரடி இணைப்பு தேவையில்லை. இதனால், விமான நிலையங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் போன்ற இடங்களில் நெட்வொர்க் பிரச்சனைகள் இல்லாமல் ஆதார் சரிபார்ப்பை எளிதாகச் செய்ய முடியும்.
மேலும், இந்த ஆப் மூலம் பயனர்கள் தங்கள் முகவரிகளைப் புதுப்பிக்கலாம். மொபைல் போன் இல்லாத குடும்ப உறுப்பினர்களையும் இதில் சேர்க்கலாம். இந்த புதிய அமைப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால், சர்வர் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை இது தடுக்கும்.
தற்போது, இடைநிலை சேவையக இணைப்புகளில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஆதார் சரிபார்ப்பு அடிக்கடி நின்றுவிடுகிறது. ஆனால், QR மற்றும் ஆப் அடிப்படையிலான ஆஃப்லைன் சரிபார்ப்பு இந்த சிக்கலை நீக்கும்.
இந்த மாதிரி, பயனர் ரகசியத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் என்றும், காகித நகல் கசிவு அபாயத்தை நீக்கும் என்றும் UIDAI கூறுகிறது. இந்த முழு அமைப்பும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்துடன் இணக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தச் சட்டம் அடுத்த 18 மாதங்களுக்குள் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
