பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்து கொடூரமாகத் தாக்கிய இளைஞர் ஒருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. a youngster arrested under pocso at coimbatore
கோவை மாவட்டம் சூலூர் அடுத்துள்ள சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் அன்னூர் அருகே சொக்கம் பாளையத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் மதியம் வகுப்பை கட்டடித்து விட்டு, விடுதியிலிருந்து வெளியேறிய மாணவன், அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.
அந்த நபர், சூலூர் அருகே காடாம்பாடி விஐபி நகர் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமற்ற ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள வீட்டிற்கு மாணவனை அழைத்துச் சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு மாணவன் மறுப்பு தெரிவித்து அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மரக்கட்டையால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவன் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் அருகிலுள்ள சாலையில் கிடந்துள்ளார்.
அந்த வழியாகச் சென்றவர்கள் மாணவனை மீட்டு, சூலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவன் ரத்த வெள்ளத்தில் கிடந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சூலூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அதேசமயம் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருக்குத் தகவல் அளித்தனர். மாணவரின் தந்தை கொடுத்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
சிசிடிவியில் சிக்கிய கொடூரன்!
இதைத்தொடர்ந்து மாணவன் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு இருசக்கர வாகனத்தில் மாணவனை ஏற்றிச் சென்ற நபர், கோடாங்கி பாளையம் ஆராக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயது வசந்த குமார் என்பது தெரியவந்தது. அவர் அப்பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வந்தவர் என்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சூலூர் காவல்துறையினர் வசந்த குமாரை கைது செய்தனர்.
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் ஆத்திரம்!
கைது செய்யப்பட்ட வசந்த குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவனை கருமத்தம்பட்டி வழியாக அழைத்துச் சென்று, சோமனூரில் உள்ள ஒரு மதுக்கடையில் மது அருந்தியதாகவும், பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டிற்கு அழைத்துச் சென்று ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றார் எனவும், மாணவன் ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை மரக்கட்டையால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சூலூர் காவல்துறையினர் வசந்த குமாரை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
