விஜய் காரை வழிமறித்த தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் காரை வழிமறித்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் தனக்கு தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் எனக் கூறி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அலுவலகத்திற்கு வந்த விஜயின் காரை வழிமறிக்க முயன்றார். ஆனால் அதைக் கண்டு கொள்ளாத விஜய் தனது காரை தொடர்ந்து இயக்கச் செய்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து விஜய் கார் கட்சியின் அலுவலகத்திற்குள் சென்றது. இதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து தவெக தலைமை அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் தவெக நிர்வாகிகள் அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து அஜிதா ஆக்னல் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் 15 தூக்க மாத்திரை எடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அஜிதா தற்போது தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக தன் இறுதி மூச்சு வரை என் தாய் கழகமான தவெகவில், தலைவர் தளபதி விஜய் அவர்களோடும் மட்டும் தான் எனது அரசியல் பயணம் தொடரும் என அஜிதா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தொடர் சம்பவங்கள் தவெகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share