ஜின் முதல் கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் வரை : இந்த வார தியேட்டர் ரிலீஸ் படங்கள் – ஒரு பார்வை!

Published On:

| By uthay Padagalingam

a short look on theater release of this week

மாதக் கடைசியில் வெளியாகிற படங்கள் அனைத்துமே முதல் தேதியை மனதில் கொண்டுதான் தியேட்டரை வந்தடைகின்றன. அதாகப்பட்டது, மாத இறுதியைக் கடந்து அடுத்த வாரம் வரை வரவேற்பைத் தக்க வைத்தால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும் என்கிற நிலை. அது நிகழ்ந்தாலும் கூட, ஜுன் 5 அன்று ‘தக் லைஃப்’ படம் வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக, தமிழ்நாடு முழுக்கக் கணிசமாகத் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்பதே நிலைமை. அதனால், கிட்டத்தட்ட ஆறு அல்லது ஐந்து நாட்களில் பெறுகிற வரவேற்பை மட்டுமே குறி வைத்துக் களமிறங்குகின்றன இந்த வார வெளியீடுகள். a short look on theater release of this week

அந்த வகையில், நாளை மே 30 அன்று தமிழில் நான்கு படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஜின் – தி பெட்

‘கொஞ்சம் சுவாரஸ்யமான ஹாரர் படமா இருக்கும்போல’ என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘ஜின் – தி பெட்’ பட ட்ரெய்லர். முகேன் ராவ், பவ்யா த்ரிகா இதில் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். ராதாரவி, பாலசரவணன், இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி, ஜார்ஜ் விஜய், ரித்விக் என்று ஒரு பட்டாளமே இதில் நடித்துள்ளது. டி.ஆர்.பாலா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர்.

ராஜபுத்திரன்

‘எட்டு தோட்டாக்கள்’, ‘ஜீவி’ படங்களின் வழியே கவனம் ஈர்த்த வெற்றி, அதே போன்றதொரு வரவேற்பைப் பெறத் துடித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் பிரபு, கிருஷ்ண்பிரியா, மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், தங்கதுரை, இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன் உட்படப் பலர் நடித்துள்ள படம் ‘ராஜபுத்திரன்’. மகா கந்தன் இயக்கியிருக்கிற இப்படத்திற்கு நவ்ஃபால் ராஜா இசையமைத்திருக்கிறார். கிராமத்துப் பின்னணியில் ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன் கலந்த குடும்பச் சித்திரமாக இப்படம் அமையும் என்று சொல்கிறது இதன் ட்ரெய்லர்.

தி வெர்டிக்ட்

வரலட்சுமி சரத்குமார், சுஹாசினி மணிரத்னம், ஸ்றுதி ஹரிஹரன், வித்யூலேகா ராமன், பிரகாஷ் மோகன்தாஸ் உட்படப் பலர் நடித்துள்ள படம் ‘தி வெர்டிக்ட்’. அமெரிக்காவில் நிகழ்வதாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கொலை நிகழ, அதன் மீதான நீதிமன்ற விசாரணையைப் பேசுகிற வகையில் அமைந்திருக்கிற இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிருஷ்ணா சங்கர். ஆதித்யராவ் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

மனிதர்கள்

ஒன்றாகப் பயணிக்கிற ஆறேழு நண்பர்களில் ஒருவர் திடீரென்று கொலையாகிறார். ’அவரைக் கொன்றது தங்களில் ஒருவரா’ என்ற பதைபதைப்புடன் அவர்கள் ஒருவரையொருவர் குறை கூறுவதும் குற்றம் சொல்வதுமாக நகர்வதைச் சொன்னது ‘மனிதர்கள்’ பட ட்ரெய்லர். ’நிச்சயம் நல்லதொரு க்ரைம் த்ரில்லர் ஆக இருக்கும்’ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ராம் இந்திரா இயக்கியிருக்கிற இப்படத்தில் கபில் வேலவன், தக்‌ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தான், சாம்பசிவம் உட்படப் பலர் நடித்துள்ளனர்.

ஆண்டவன்

கே.பாக்யராஜ், மகேஷ் வைஷ்ணவி, ஹலோ கந்தசாமி, ஆதிரா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்திருக்கிற படம் ‘ஆண்டவன்’. கிராமத்து பின்னணியில் அமைந்த இப்படத்தை இயக்கியிருக்கிறார் வி.வில்லி திருக்கண்ணன். கபிலேஸ்வர், சார்லஸ் தனா இதற்கு இசை அமைத்திருக்கின்றனர்.

இது போக ஜாக்கிசான் நடித்த ஆங்கிலப் படமான ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ தமிழில் வெளியாகிறது. அதிதி ஷங்கர் நடித்துள்ள கருடன் பட தெலுங்கு ரீமேக்கான ‘பைரவம்’, ராதிகா ஆப்தே நடித்த இந்திப்படமான ‘சிஸ்டர் மிட்நைட்’, புதுமுகங்கள் நடித்துள்ள மலையாளப்படமான ‘மூன்வாக்’ ஆகியன வெளியாகின்றன.

இவற்றில் எந்தப் படம் ரசிகர்கள் கவனத்தை அள்ளப் போகிறது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share