தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசமைப்பு சட்டத்தை மீறி செயல்படுகிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இருந்து நான்காவது ஆண்டாக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று வெளிநடப்பு செய்துள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சட்டசபையில் பேசினார். “ஆளுநர் அவையிலிருந்து வெளியேறிச் சென்றிருக்கிறார். ஆளுநரின் இந்தச் செயல் அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு அழகல்ல. இந்திய அரசமைப்புச் சட்டம் ஆர்டிகல் 176 படி, ஆளுநர் உரை என்பது மாநில அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரால் முழுமையாகப் படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதில் ஆளுநர் தனது சொந்தக் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கோ, மாநில அரசால் தயாரிக்கப்பட்ட உரையை நீக்குவதற்கோ அரசமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை. இருப்பினும், ஆளுநர் சில விளக்கங்களைக் குறிப்பிட்டு நேற்று அரசுக்கு கடிதம் எழுதினார். அதற்கான பதிலும் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் வேண்டுமென்றே அரசமைப்புச் சட்டத்தை மீறிய ஒரு செயலைச் செய்துள்ளார். ஆளுநரின் இந்தச் செயல், நூற்றாண்டு கால மரபையும் நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையையும் அதன் மரியாதையையும் அவமதிக்கும் செயலாக நான் கருதுகிறேன்.
10-4-2023 அன்று இதே பேரவையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கு நினைவுகூர விரும்புகிறேன். ‘ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறிய போதிலும், முத்தமிழறிஞர் கலைஞர் அதை வழிமொழிந்த போதிலும், அந்தப் பதவி இருக்கும் வரை அதற்குரிய மரியாதையைக் கொடுக்க அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் தவறியதில்லை. அவர்களது வழியைப் பின்பற்றி நானும் இம்மியளவும் விலகியதில்லை. இந்த அரசும் தவறியதில்லை. அந்தக் கொள்கையை ஒட்டியே, ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த வேண்டும் என்று எடுத்துரைத்தேன். எனினும், மாண்புமிகு ஆளுநர் ஏற்கனவே நடந்து கொண்டது போலவே மீண்டும் இன்றும் செயல்பட்டது மிகவும் வருத்தத்திற்குரியது.
தமிழ்நாடு சட்டமன்றம் எத்தனை கோடி தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற மாமன்றம். ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக, மக்கள் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவராக, உண்மையைப் பேசுபவராக இருக்க வேண்டும். மக்களின் பேராதரவோடு பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற ஆட்சி அமைத்துள்ள அரசு எடுக்கின்ற முடிவுகளுக்கு ஒத்துழைப்பவராக இருக்க வேண்டும். அதைத்தான் அரசியலமைப்புச் சட்டமும், அந்தப் பதவி வகிப்பவரிடமிருந்து எதிர்பார்க்கிறது. ஆனால், நம்முடைய ஆளுநர் அதற்கு மாறாகச் செயல்படுகிறார்.
மாநில நிர்வாகத்தை முடக்கவும், பொது மேடைகளில் அரசியல் பேசியும், அவதூறு பரப்பியும் வருகிறார். அது அவரது சொந்த விருப்பம் என்று கருதலாம். எனினும், அத்தகைய முயற்சியைப் பேரவையிலும் செய்ய அவர் முயல்வது ஏற்புடையது அல்ல. நூற்றாண்டு விழா கொண்டாடி சீரும் சிறப்புமாக இயங்கும் பேரவையின் புகழ் மங்கிடாத வகையில் பாதுகாத்து வந்த சான்றோர்களின் வழித்தடத்தைப் பின்பற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
வரலாற்றுப் பெருமை கொண்ட இப்பேரவையின் மாண்பைப் பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ளதால், இந்தத் தீர்மானத்தை மாண்புமிகு பேரவைத் தலைவரின் இசைவோடு கொண்டு வருகிறேன்.
தீர்மானம்:
ஏற்கனவே உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையைப் பேரவையில் படிக்காமல் மாண்புமிகு ஆளுநர் சென்றதை இப்பேரவை ஏற்கவில்லை. மாண்புமிகு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட, சட்டமன்ற உறுப்பினர்களின் மேஜையில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கில உரையாக்கம் இங்கு மாண்புமிகு ஆளுநர் அவர்களால் படிக்கப்பட்டதாக இப் பேரவை கருதுகிறது. அவ்வாறே அவைக் குறிப்பில் நடவடிக்கை குறிப்புகள் இடம்பெறலாம்.
மேலும், மரபு வழி நிகழ்வுகளாக மாண்புமிகு பேரவைத் தலைவரால் படிக்கப்பட உள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் மற்றும் நான் முன்மொழிகின்ற தீர்மானம் அதன் முடிவு ஆகியவை மட்டும் பேரவை நடவடிக்கைக் குறிப்பில் இடம்பெறலாம் எனும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்.” இதைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு பேரவை உறுப்பினர்களின் ஒப்புதலோடு தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் பேசுகையில்,“ஆண்டுதோறும் அரசின் சார்பில் உரை தயாரித்து அனுப்புவதும், அதனை முறையாக வாசிக்காமல் ஆளுநர் முரண்டு பிடிப்பதும் தொடர்ந்து வருவது நல்லதல்ல. ஆளுநர் மாநில அரசுகளுக்கு இடைஞ்சலாக இருந்து செயல்படுவது இங்கு மட்டுமல்ல; பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. ஒரு நாள் செய்தியாக இதனை கடந்து விட முடியாது. இதனால் நாடு முழுவதும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர்கள் உரை வாசிப்பு என்ற நடைமுறை இருந்து வருகிறது. இந்த நடைமுறையை விலக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம். இதற்காக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வோம்” என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
