தன்னை கடவுளின் குழந்தை என்று கூறி வந்த பிரதமர் மோடி தற்போது ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகளின் தயவை நாடியிருப்பது பற்றி திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும், இதில் பாஜக 370 இடங்களை கைப்பற்றும் என்று கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்தே பிரதமர் மோடி நம்பிக்கையோடு பேசி வந்தார்.
இதையே தனது தேர்தல் பிரச்சாரங்களிலும் மோடி உறுதிபட தெரிவித்தார். மேலும், இந்த தேர்தலில் மோடியின் தேர்தல் பிரச்சாரங்கள் பெரும் விமர்சனத்திற்குள்ளானது.
குறிப்பாக முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்கள், ஊடுருவல்காரர்கள் என்று பேசியதும் நான் பயாலஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை. என்னை பூமிக்கு அனுப்பியது பரமாத்மாதான் என்று மோடி பேசியதும் பெரும் விவாதத்திற்குள்ளானது.
இந்தநிலையில் தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று (ஜூன் 4) வெளியானது. இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மையை பாஜக இழந்தது. என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட சில கட்சிகளோடு கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது பாஜக.
400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையாக பேசி வந்த பிரதமர் மோடி, தற்போது நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் உதவியுடன் தான் மீண்டும் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
இதுகுறித்து திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம். அட்சயப்பாத்திரத்தோடு ஆந்திராவும் பீகாரும். கடவுளை மற மனிதனை நினை. பெரியார் வாழ்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
T20 World Cup: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?
இனியும் வேடிக்கை பார்க்க முடியாது… அதிமுகவினருக்கு சசிகலா அழைப்பு!
Comments are closed.