வக்ஃப் சட்டம்… நாடாளுமன்றத்தை கொச்சைப்படுத்தும் பாஜக… ஆ.ராசா ஆவேசம்!

Published On:

| By Selvam

“எந்த நாடாளுமன்றம் இருந்தால் எங்களுடைய உரிமை பாதுகாக்கப்படும் என்று நம்பினோமோ, அதே நாடாளுமன்றத்தை வைத்து எங்களது உரிமைகளை தூக்கி எறியும் வேலையை பாஜக செய்கிறார்கள்” என்று திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இன்று (பிப்ரவரி 22) தெரிவித்துள்ளார். Raja condemned Waqf amendment

வக்ஃப் திருத்த ஒழிப்பு சட்டம் கருத்தரங்கம் சென்னை அண்ணாசாலையில் உள்ள அன்பகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் ஆ.ராசா பேசும்போது, “இஸ்லாமியர்களையும், அவர்களின் சொத்துக்களையும் காப்பாற்றுவதற்காக 1954-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் அமலுக்கு வருகிறது. இந்த சட்டத்தை பாதுகாப்பதற்கு 1995-ஆம் ஆண்டு நரசிம்மராவ் சில திருத்தங்களை கொண்டு வந்தார்.

2013-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் இந்த சட்டம் மீண்டும் செம்மைப்படுத்தப்பட்டது. அப்போது, ஏறத்தாழ இந்த சட்டத்தில் 70 அமென்ட்மென்ட் கொண்டு வந்தார்கள். அனைத்தையும் படித்து பார்த்தேன் சரியாக புரியவில்லை.

திடீரென ஒருநாள் இரவு 12 மணிக்கு அந்த சட்டத்தை படித்தேன். இப்போது இருக்கும் திருத்த சட்டம் என்பது 1995, 2013-ஆம் ஆண்டுகளில் நரசிம்மராவ், மன்மோகன் சிங் கொண்டு வந்த திருத்தங்களை எடுத்துவிட்டால் தற்போதைய சட்டத்திருத்தம் அவ்வளவு தான். இந்த அயோக்கியத்தனத்தை எங்காவது நடத்துவார்களா?

நாடாளுமன்றம் என்ன விரும்பியதோ, ஒப்புக்கொண்டதோ அந்த சட்டத்தை அதே நாடாளுமன்றத்தின் மூலமாக எடுக்கின்ற வித்தையை இந்த காவி கும்பல் செய்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தை இவர்கள் எவ்வளவு கொச்சைப்படுத்துகிறார்கள் என்று இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்.

எந்த நாடாளுமன்றம் இருந்தால் எங்களுடைய உரிமை பாதுகாக்கப்படும் என்று நம்பினோமோ, அதே நாடாளுமன்றத்தை வைத்து உரிமைகளை தூக்கி எரியும் வேலையை பார்க்கிறார்கள். இந்தியா முழுக்க வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பாக கூட்டங்கள் நடத்தினோம். இந்த சட்டத்தை எதிர்த்தவர்கள் வெறும் 5 சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். அங்கு வந்தவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் தான்.

ஆயிரக்கணக்கான வக்ஃப் போர்டு சொத்துக்களை இந்துக்கள் வைத்திருந்தை வக்ஃப் போர்டு கண்டுபிடித்திருக்கிறது. இதை மறைக்க வக்ஃப் சட்டப்பிரிவு 43-ல் திருத்தம் செய்துள்ளனர். இந்த திருத்த சட்டம் உச்சநீதிமன்றத்தில் செல்லுபடியாகாது என்று ஜேபிசி கூட்டத்தில் நான் பேசினேன். அதையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்கிறார்கள்” என்று ஆ.ராசா தெரிவித்தார். Raja condemned Waqf amendment

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share