திமுக தேர்தல் அறிக்கையில், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் விவாதிக்க தயார் என்று திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இன்று (ஜூன் 9) தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா,
“மதுரையில் நேற்றைய தினம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து பேசியிருக்கக்கூடிய பேச்சுக்களின் மொத்த தொகுப்பையும் சுருக்கி சொல்வதானால், அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், பிளவு நோக்கம் கொண்ட சூதுரை. A Raja Challenges Amit Shah
இந்த மூன்றை தவிர, அவருடைய பேச்சில் வேறு எதையும் என்னால் கண்டுபிடிக்க முடிவில்லை. ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் ஒரு மாநிலத்திற்கு வரும்போது, அவருடைய பொறுப்பு, கடமை உணர்ச்சி இவைகளை பற்றி கிஞ்சித்தும் கவலையில்லாமல், அவதூறுகளை அள்ளி வீசுகிறார்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை கலவரத்தை தூண்டி அதன்மூலம் அரசியல் ஆதாயம் கிடைக்குமா? அறுவடை செய்யலாமா என்கின்ற அருவருப்பான உணர்ச்சியும் அவருடைய பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது.
இது கூட்டாட்சி தத்துவத்திற்கும், ஒன்றிய மாநில அரசுக்கும் இடையிலான சுமூகமான போக்கிற்கும் குந்தகம் விளைவிக்கின்ற வகையில் அவர் பேசியிருக்கிறார். அவர் பேச்சை ஒவ்வொரு வரியாக எங்களால் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியும்.

ஆனால், தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக இருப்பதை அவர்கள் விரும்பாமல் அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அமித்ஷாவின் பேச்சை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அமைதி, வளர்ச்சி திட்டங்களை மிக விரைவாக வழங்கி நடைமுறைப்படுத்துவதை ஜீரணிக்கமுடியாத ஒன்றிய அரசும் பாஜகவும், அமித்ஷாவை இங்கு கொண்டு வந்து கேலிக்கூத்தை அரங்கேற்றியிருகிறார்கள்.
அமித்ஷா என்ற தனி மனிதருக்கு மட்டுமல்ல, அவர் வகிக்கும் பதவிக்கும் இது அழகல்ல. இந்த அரசியல் சித்து விளையாட்டுகளை இத்தோடு அவர்கள் நிறுத்திக்கொள்வது நல்லது.
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி ஐந்து முறை தமிழகத்திற்கு வந்தார். ஆனால், அவர்கள் ஏன் வெற்றி பெறவில்லை.
தேர்தல் அறிக்கையில் நாங்கள் சொன்னதை 98.5 சதவீதம் நிறைவேற்றியிருக்கிறோம். அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் மட்டும் நிலுவையில் உள்ளது. அதனை செயல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி குறித்து விவாதிக்க அமித்ஷாவை நான் அழைக்கிறேன்.
நாங்கள், அமித்ஷாவையும் மோடியையும் பார்த்து பயப்படவில்லை. அவர்களுக்கு பின்னால் இருக்கும் அரசியல் தத்துவம் அனைத்து இடங்களிலும் படையெடுத்து வெற்றி பெறுகிறது. ஆனால், தமிழகத்தில் ஏன் வெற்றி பெற முடியவில்லை. அந்த சித்தாந்தத்திற்கு மாற்று சித்தாந்தம் எங்களிடம் இருப்பதால், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே அவர்களால் நாடாளுமன்றத்தில் எந்தவொரு மசோதாவையும் சட்டத்தையும் கொண்டு வர முடியும் என்பதற்காக தான் டிலிமிட்டேஷன் கொண்டு வருகிறார்கள். அதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் முறியடித்துள்ளார்.
அரசியல் உள்நோக்கத்திற்காகவே மதுரையில் முருகன் மாநாடு நடத்துகிறார்கள். இந்து மத ஒற்றுமைக்காகவோ, முருகனுக்காகவோ இவர்கள் மாநாடு நடத்தவில்லை. மதவாதத்தை ஏற்படுத்த வேண்டும், பிளவுவாதத்தை ஏற்படுத்த வேண்டும், கிறிஸ்துவ, இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரிவினையை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். இதனை மதுரை மக்களே விரும்பவில்லை.
கீழடி அகழாய்வை திரும்ப திரும்ப ரிஜெக்ட் செய்வதன் நோக்கம் என்ன? ஆராய்ச்சியாளர் அமர்நாத் கொடுத்த அறிக்கையில் பிழை இருந்தால், அவரிடம் தானே பதில் கேட்க வேண்டும். ஆனால், ஏன் அவரை இடமாறுதல் செய்கிறீர்கள்? இல்லாத சரஸ்வதி நாகரிகத்திற்கும், சமஸ்கிருத நாகரிகத்திற்கு நிதி ஒதுக்குகிறார்கள். ஆனால், தமிழுக்கு நிதி ஒதுக்க மறுக்கிறார்கள்.
இதன்மூலம் தமிழ் கலாச்சாரத்திற்கு, திராவிடத்திற்கு அவர்கள் எதிரானவர்கள் என்பதை திரும்ப திரும்ப அப்பட்டமாக வெளிக்காட்டி கொள்கிறார்கள். இதற்கான தண்டனையை நிச்சயமாக 2026 தேர்தலில் சந்திப்பார்கள்” என்று தெரிவித்தார். A Raja Challenges Amit Shah
