தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றுவோம் என பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘முட்டாள்’ என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி பேசியது சர்ச்சையாகி உள்ளது. A Raja Amit Shah BJP
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ.ராசா பேசியதாவது:
சாதனைகளுக்காக மட்டுமே ஒரு அரசு 50 ஆண்டுகள் நீடிக்கும் என சொல்லவும் முடியாது. மத்திய அமைச்சர் அமித்ஷா அண்மையில் மதுரைக்கு வந்தார். அங்கு பேசிய அமித்ஷா, டெல்லியைப் பிடித்துவிட்டோம்; ஹரியானாவைப் பிடித்துவிட்டோம்; மகாராஷ்டிராவைப் பிடித்துவிட்டோம்; அடுத்து தமிழ்நாடுதான் என்கிறார். முட்டாள்.. முட்டாள்..
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் என்பவர் ஒரு தனிப்பட்ட தலைவன்; ஒரு அரசியல் கட்சி அவ்வளவுதான். ஹரியானாவில் நீ தோற்கடித்தது ஒரு தனிமனிதனை.. மகாராஷ்டிராவில் நீ தோற்கடித்தது ஒரு தனி மனிதனை..
ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தனி மனிதன் அல்ல.. அவருக்குப் பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்கிற திராவிட தத்துவம் இருக்கிறது. அந்த தத்துவத்தை வீழ்த்துவதற்குதான் துடிக்கிறீர்கள். இவ்வாறு ஆ.ராசா எம்பி பேசினார்.
தமிழிசை கடும் கண்டனம்
மத்திய அமைச்சர் அமித்ஷாவை முட்டாள் என ஆ.ராசா விமர்சித்ததற்கு தமிழக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆ ராசா தவறாக விமர்சித்திருப்பதை… வன்மையாக கண்டிக்கிறேன்… தமிழகத்தில் பாஜக பலம் பெறும் என்று அமித்ஷா அவர்களின் வார்த்தைகள் இவரை எவ்வளவு பதற்றம் அடைய செய்திருக்கிறது என்பது இவரது பேச்சில் வெளிப்படுகிறது…
டெல்லியில் வெற்றி பெற்றதை போல மகாராஷ்டிராவில் வெற்றி பெற்றது போல நிச்சயமாக இங்கே வெற்றியைத் தான் பெறப் போகிறோம்… அங்கே உள்ளவர்களைப் போல இங்கே தனிப்பட்ட தலைவர்கள் அல்ல தங்கள் தலைவர்களுக்கு பின்னால் மாபெரும் இயக்கம் இருக்கிறது என்று இறுமாப்போடு பேசுகிறார்…
ஆம் அந்த மாபெரும் இயக்கத்தை தான் வெற்றி கொள்ளப் போகிறோம்.. வெட்கமில்லாமல்… ஜனநாயகத்தின் குரலை நெரித்த அவசரநிலை பிரகடனம் செய்த நாள் இன்று.. எந்த கட்சி அவசரநிலை கொண்டு வந்ததோ அந்த கட்சிக்கு அடிமையாகி அவர்களோடு கைகோர்த்துக்கொண்டு இன்று நீங்கள் செய்யும் அரசியல் நிச்சயமாக உடைத்து எறியப்படும்..
பழம்பெருமை பேசி இன்று தமிழ்நாட்டில் பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்களின் மோசமான நிலையை மறைத்து விட முடியாது… உங்கள் திராவிட மாடல் முதலமைச்சர்.. துணை முதலமைச்சர் வரும்பொழுது எப்படி ஏழைகளின் நிலைமை திரை சீலையிட்டு மறைக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்..
முதலில் நாகரீகமாக பேச கற்றுக் கொள்ளுங்கள்…. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தையை பயன்படுத்தும் அளவிற்கு நாங்கள் கீழ் தரமானவர்கள் அல்ல ஆனால் 2026 யார் அறிவாளிகள் என்பதை நிச்சயமாக உணர்த்தும்.. முடியாததையும் முடித்து காண்பிப்பது தான் அமித்ஷா அவர்களின் சாதனை. பார்க்கத்தான் போகிறீர்கள்… பாரதப் பிரதமரின் நல்லாட்சியின் நீட்சி தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியின் மூலம் இங்கே வரத்தான் போகிறது என கூறியுள்ளார்.