என்னை மன்னிச்சிடுங்க… மா.சு., சேகர்பாபு, முன்னிலையில் ஆ.ராசா உணர்ச்சிகரம்! – சென்னை ஆய்வுக் கூட்டம் ஆரம்பமே அமர்க்களம்!

Published On:

| By Minnambalam Desk

a raaja asked sorry infront of dmk cadres

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி திமுகவில், தமிழக அளவில் கட்சியை ஏழு மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு ஆய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. a raaja asked sorry infront of dmk cadres

இந்த வகையில் சென்னை மண்டல பொறுப்பாளரான திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா எம்பி, சென்னை தெற்கு, சென்னை தென்மேற்கு மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் அறிமுகக் கூட்டங்களை நேற்று மே 17ஆம் தேதி நடத்தினார்.

இந்த கூட்டங்களில் மாவட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாநில- மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காலை 12:30 மணிக்கு சென்னை தெற்கு சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை சைதாப்பேட்டையில் ஒரு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான மா. சுப்பிரமணியன்.

இந்த நிகழ்வில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா. சுப்பிரமணியன், சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளர் மயிலை வேலு ஆகியோர் தங்களுடைய மாவட்ட நிர்வாகிகளை மண்டல பொறுப்பாளரான ஆ. ராசாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

இதன் பிறகு பேசிய ஆ ராசா, “இங்கே அமைச்சராக இருக்கக்கூடிய மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினரான மாவட்டச் செயலாளர் வேலு, உள்ளிட்ட நிர்வாகிகள் ஏன் நானே கூட தவறு செய்திருக்கலாம். அவை எல்லாவற்றுக்கும் நானே உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் எல்லாம் ஒதுக்கி வையுங்கள். நமது தலைவரை 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதலமைச்சராக ஆக்க வேண்டும். இந்த ஒரு குறிக்கோளை மட்டுமே மையமாக வைத்து நாம் செயல்பட வேண்டும்.

அடுத்தடுத்து கூட்டங்கள் இருக்கின்றன. இது முதல் கூட்டம் தான். எனவே இந்த அறிமுகத்தோடு நான் விடைபெறுகிறேன். விரைவில் அடுத்தடுத்து உங்களை சந்தித்து உங்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து தலைமைக்கு தெரிவிப்பேன்” என்று பேசினார் ஆ ராசா.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவாக அசைவ பிரியாணி மற்றும் சைவ சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை அமைச்சர் மா. சு. மேடையில் அறிவித்து, ‘நிர்வாகிகள் அனைவரும் சாப்பிட்டு விட்டு தான் போக வேண்டும் அதுவரை கதவு சாத்தப்படும்’ என அன்புக் கட்டளையிட்டார்.

மண்டல பொறுப்பாளர் ராசா, ‘எனக்கு அடுத்து மீட்டிங் இருக்கு. அதனால் நான் சாப்பிடாமல் கிளம்புகிறேன்’ என்று மாசுவிடம் சொல்லிவிட்டு புறப்பட்டார்.

இந்தக் கூட்டத்தில் சலசலப்பு எதுவும் இல்லாத நிலையில்… சென்னை ஓட்டேரியில் நடந்த சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பித்தது.

லேசாக மழை தூறிக் கொண்டிருந்ததால், நிர்வாகிகள் சிலர் வருவதற்கு தாமதமானது.
கூட்டம் தொடங்கியபோதுதான் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், சட்டத்துறை இணைச் செயலாலருமான பரந்தாமன் அரங்கத்துக்குள் வந்தார். அவர் வரும்போது மேடை நிறைந்திருந்தது.

மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான சேகர்பாபுவுக்கும், எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமனுக்கும் இடையேயான மோதல் அனைவரும் அறிந்ததுதான். கடந்த நான்கு ஆண்டுகளாக மாவட்டச் செயலாளரான சேகர்பாபு கூட்டிய எந்த மாவட்டக் கழக கூட்டத்துக்கும் பரந்தாமன் வந்ததில்லை. இது தலைமை நியமித்த மண்டல பொறுப்பாளர் பங்கேற்கும் கூட்டம் என்பதால்தான் பரந்தாமன் வந்தார்.
வந்தவர் மாவட்டச் செயலாளாரான அமைச்சர் சேகர்பாபுவுக்கு சால்வை அணிவிக்க முற்பட்டார். அப்போது சேகர்பாபு, ‘பரவால்ல… கைலயே கொடுத்துடுங்க’ என்று சொல்லி சால்வையை கையில் வாங்கிக் கொண்டார்.

அதன் பின் பரந்தாமன் மேடையில் உட்கார இடம் தேடினார். நிகழ்ச்சி தொடங்கும்போதே வந்துவிட்ட தமிழன் பிரசன்னா மேடையில் அமர்ந்திருந்தார். அவர் அருகே சில நிமிடங்கள் நின்று பார்த்தும் பரந்தாமனுக்கு தமிழன் பிரசன்னா இடமளிக்கவில்லை. இதனால் பரந்தாமன் மேடையில் இருந்து இறங்கி கீழே சென்று முதல் வரிசையில் அமர்ந்துகொண்டார். இதை மண்டல பொறுப்பாளர் ஆ.ராசா பார்த்துவிட்டு, ‘பரந்தாமன் மேல வாங்க…’ என்று இரு முறை அழைத்தார். அதன் பின் பரந்தாமனுக்கு மேடையில் நாற்காலி போடப்பட்டது.


இதன் பின் தயாநிதி மாறன் எம்பி வர, அவர் மேடையேறியபோதுதான், தமிழன் பிரசன்னா எழுந்து தனது நாற்காலியை தயாநிதிமாறனிடம் கொடுத்துவிட்டு இறங்கினார். இப்படியாக கூட்டத்தின் தொடக்கமே சலசலப்போடுதான் இருந்தது.

மண்டல பொறுப்பாளரான ஆ ராசா, ‘முதல் கட்ட கூட்டம் என்பதால் கலந்துரையாடல் என்று நாம் ஏற்கனவே அறிவித்திருந்தாலும் அறிமுகக் கூட்டமாகவே தொடங்குகிறோம். நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார். அதன் பின் நான் பேசுகிறேன்’ என்றார்.

அமைச்சர் சேகர்பாபு நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தபோது தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், பரந்தாமன் என்ற வரிசையில் சட்டமன்ற உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரான திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

மேயர் பிரியாவை அறிமுகம் செய்து வைத்தபோது கைதட்டல் எழுந்தது. அப்போது தயாநிதி மாறன் எம்பி, ‘இத்தனை நிர்வாகிகளுக்கு இல்லாத கைதட்டல் மேயருக்கு கிடைக்குது’ என்று கமெண்ட் அடித்தார். அதற்கு அமைச்சர் சேகர்பாபு, ‘அவங்க ஃபீல்டுலயே இருக்காங்களே…’ என ரிப்ளை கொடுத்தார். அப்போது மேடையில் கலகலப்பு ஏற்பட்டது. அதேநேரம் சேகர்பாபுக்கு எதிராக மேயர் பிரியா சில நகர்வுகளை வடசென்னையில் தொடங்கியிருக்கும் நிலையில், மேயர் பிரியாவை அமைச்சர் சேகர்பாபு பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்த பிறகு மாவட்ட வழக்கறிஞர் அணிச் செயலாளர் துரைக் கண்ணன் கூட்டத்துக்கு வந்தார். அவர் மேடையேறியபோது அவரைப் பார்த்த சேகர்பாபு, ‘ நீ லேட்டா வந்ததால உன்னை அறிமுகப்படுத்தி பேச முடியலைப்பா’ என்றார் சாதாரணமாய்.
அப்போது துரைக்கண்ணன், ‘மரியாதையா பேசுங்க…’ என்று சேகர்பாபுக்கு எதிர்க்குரல் எழுப்பினார். துரைக்கண்ணன் எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமனின் ஆதரவாளராக அறியப்பட்டவர்.
உடனே சேகர்பாபு முகம் சிவக்க இதைப் பார்த்த எழும்பூர் கவுன்சிலரும், அயலக அணி மாநில துணைச் செயலாளாருமான பரிதி இளம் சுருதி, ‘என்ன இப்ப மரியாதை குறைவா பேசிட்டாங்க?’ என்று குரல் கொடுத்தார். உடனே ஒட்டுமொத்த மகளிரணி நிர்வாகிகளும் சேகர்பாபுவுக்கு ஆதரவாக சுருதியோடு சேர்ந்து குரல் கொடுத்தனர். இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு நீடித்தது.

இதன் பின் பேசிய மண்டலப் பொறுப்பாளார் ஆ.ராசா, “இங்கே இருக்கும் அமைச்சர் சேகர்பாபுவாகட்டும்… எம்பி தயாநிதிமாறன் ஆகட்டும்…. நானே ஆகட்டும்… யார் தவறு செய்திருந்தாலும் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நமக்குள் எத்தனை கருத்துவேறுபாடுகள் பிரச்சினைகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு இன்னும் எட்டு, பத்து மாதங்கள் ஒற்றுமையோடு உழைக்க வேண்டும். தலைவரை மீண்டும் முதல்வர் ஆக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு நாம் உழைக்க வேண்டும். மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள். விரைவில் நான் உங்களிடம் மீண்டும் வருகிறேன். கருத்துகளை கேட்கிறேன்.

இப்போது திமுகவுக்கு போட்டி என்று யாருமே கிடையாது. நமக்கு போட்டி ஐ.டி., சிபிஐ, ஈ.டி.தான். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமனாலும் செய்வார்கள். அதற்கெல்லாம் நாம் தயாராக இருக்க வேண்டும், ஒற்றுமையோடு செயலாற்ற வேண்டும்’ என்று சைதையில் பேசியதை போலவே ஓட்டேரியிலும் பேசி முடித்து ஒரு மணி நேரத்தில் நிகழ்வையும் முடித்தார்.

அறிமுகக் கூட்டம் என்பதால் சின்னச் சின்ன சலசலப்புகளோடு முடிந்துவிட்டது. ஆ.ராசாவின் அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்களில் சர்ச்சைகளாக வெடிக்கும் என்கிறார்கள் சென்னை திமுக வட்டாரங்களில்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share