டிஜிட்டல் திண்ணை: நெரிசல், ஊழல்… ஆன் லைன் புகார்கள்! ரகுமான் மீது வழக்கு?

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசல் சம்பவ வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“செப்டம்பர் 10 ஆம் தேதி சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் பனையூரில் உள்ள ஆதித்யராம் டவுன்ஷிப்புக்குள் உள்ள வளாகத்தில் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதே இடத்தில் ஆகஸ்டு 12 ஆம் தேதியே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்போது மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. டிக்கெட் வாங்கிய பல்லாயிரம் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதுகுறித்து அப்போது ரகுமான் ட்விட்டரில் தனது கவலையை தெரிவிக்க, அவருக்கு பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின், ‘கவலைப்படாதீர்கள். உலகத் தரமுள்ள உள்கட்டமைப்புகளோடு விரைவில் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் திறக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் செப்டம்பர் 10 ஆம் தேதி அதே இடத்தில் ரகுமானின், ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரிலான இசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை 7. 30 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த நிகழ்ச்சிக்காக 2 மணி முதலே ரசிகர்கள் அங்கே திரள ஆரம்பித்துவிட்டனர். 50 ஆயிரம் ரூபாய், 25 ஆயிரம் ரூபாய், 15 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 4 ஆயிரம் ரூபாய், 2 ஆயிரம் ரூபாய், ஆயிரம் ரூபாய் என்று டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலை முதலே அங்கே நெரிசல் ஏற்படத் தொடங்கியது.

மதியமே வந்தவர்கள் உள்ளே சென்று அமர்ந்துவிட்டனர். ஆனால் மாலை நேரத்தில் சென்றவர்கள் தங்கள் கையில் டிக்கெட் வைத்திருந்தும் உள்ளே செல்ல முடியவில்லை. ஏனென்றால் தங்களது இருக்கைகள் ஏற்கனவே பலரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டனர். இதை யாரிடம் சொல்வது யாரிடம் முறையிடுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஏனெனில் அங்கே விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் எந்த பிரதிநிதிகளும் இல்லை. இந்த நிலை சில மணி நேரங்கள் நீடிக்க அது நெரிசலாக மாறியது.

என்ன காரணம் என்று விசாரித்தபோது ஆகஸ்டு 12 ஆம் தேதி நடப்பதாக இருந்து ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சியில் டிக்கெட் எடுத்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திரும்பத் தரப்படாமல், மீண்டும் நிகழ்ச்சி நடக்கும் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு புதிய தேதி அறிவிக்கப்பட்டு அதற்கும் புதிய டிக்கெட் விற்பனை நடந்திருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட இரட்டிப்பு கூட்டம் திரண்டுவிட்டது. ஆனால் இதற்கான எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், வசதிகளையும் விழா ஏற்பாட்டாளர்களான ஏசிடிசி நிறுவனம் செய்யவில்லை.

ரசிகர்கள் இதுகுறித்து சமூக தளங்களில் வீடியோ பகிர்ந்து தங்கள் வலிகளையும் கோபத்தையும் பகிர்ந்தனர். ரசிகர்களாகவே முடிவு செய்து பின்வாங்கியதால்தான் அங்கே பெரும் நெரிசல் தவிர்க்கப்பட்டது. மாறாக நாங்களும் சென்று நிகழ்ச்சியைப் பார்ப்போம் என்று முண்டியடித்திருந்தால் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் வரை போயிருக்கலாம் என்பதே அங்கே சென்று வந்தவர்களின் திகில் அனுபவமாக உள்ளது. இதேநேரம் மாமல்லபுரம் அருகே கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் இல்லத் திருமணத்துக்கு சென்று வந்த முதலமைச்சர் ஸ்டாலின் கான்வாயும் நெருக்கடிக்கு உள்ளானது.

ரசிகர்களின் இந்த புகார்கள் குறித்து ஏ.ஆர். ரகுமான் கவலை தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச கட்டமைப்புள்ள அரங்கம் அதற்கான வசதிகள், விதிகளை பின்பற்றும் பார்வையாளர்கள் சென்னைக்கு கிடைக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நான் பலிகடா ஆகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமும் மன்னிப்பு கோரியுள்ளது.
சிறு கூட்டங்களுக்கு கூட பல்வேறு கெடுபிடிகள் விதித்து அனுமதி வழங்கும் போலீஸார், இதுபோன்ற பெரும் கூட்ட நிகழ்ச்சிக்கு எப்படி ஆய்வு செய்யாமல் அனுமதியளித்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் ஆன் லைனில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் ஏ.ஆர்.ரகுமான் மீதும் போலீஸில் புகாரும் செய்திருக்கிறார்கள்.

இதற்கிடையே ஏசிடிசி நிறுவனத்தைச் சேர்ந்த ஹேமந்த் குமார் உள்ளிட்டோர் போலீஸாரை சந்தித்து சில விளக்கங்களை அளித்துள்ளனர். இன்று (செப்டம்பர் 11) நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்ட தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ், ‘நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் டிஸ்கஸ் செய்து இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க வேண்டியதைச் செய்வோம்’ என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். முதலமைச்சரும் ரகுமானும் நெருக்கமாக இருப்பதால் ரகுமான் மீதான புகார்களை போலீஸ் கண்டுகொள்ளவில்லையோ என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

‘நடந்தது தவறு அல்ல, மெத்தனம், அதனால் ஏற்பட்ட குற்றம். இதில் விசாரணை நடத்தாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோடு டிஸ்கஸ் செய்ய என்ன இருக்கிறது?’ என்று கேட்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். ஆன் லைன் மூலம் புகார்கள் செய்தவர்களில் சிலர் இதுகுறித்து நீதிமன்றம் செல்லவும் தயாராகிவிட்டார்கள்.  ‘நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம், இசையமைப்பாளர் ரகுமான் இருவர் மீதும் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் பெரும் கூட்டம் கூட்டி நிகழ்ச்சி நடத்தியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். டிக்கெட் விற்பனை செய்ததில் ஊழல் நடந்துள்ளது இதுகுறித்து விசாரிக்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளோடு நீதிமன்றம் செல்லத் தயாராகிவிட்டார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் சென்றது வாட்ஸ் அப்.

பாகிஸ்தானுக்கு 357 ரன்கள் இந்தியா இலக்கு!

உதயநிதிக்கு எதிராக எடப்பாடி வழக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share