விமர்சனம் : QUITE PLACE: DAY ONE!

Published On:

| By Kavi

உதயசங்கரன் பாடகலிங்கம்

நீங்கள் ’QUITE PLACE’ பட ரசிகரா?

ஒலி மாசு குறித்து நாம் நிறைய பேசியும், விவாதித்தும் வருகிறோம். அது பற்றி துளி கூட பேசாமல், அதன் அபாயத்தை உணர வைக்க முடியுமா? பூமியின் இயக்கத்தில், மனித செயல்பாட்டில் அவசியமாக உள்ள சத்தங்களைக் கூட வெளிப்படுத்த இயலாதபோது அது தானாகப் புரியும் என்பதை உணரவைத்தது ‘கொயட் ப்ளேஸ்’ எனும் ஆங்கிலத் திரைப்படம்.

சிறிதாகச் சத்தம் எழுந்தாலும், அதற்குக் காரணமானவர்களைத் துவம்சம் செய்யும் ஜந்துக்களின் அட்டகாசங்களைச் சொன்னது அப்படம்.

முதல் பாகத்தில், அந்த உயிரினங்களால் சூறையாடப்பட்ட அமெரிக்க கிராமமொன்றில் ஒரு குடும்பம் எப்படி உயிர் பிழைத்து வாழ்ந்து வந்தது என்பது காட்டப்பட்டிருந்தது.

அந்த குடும்பத்தின் தலைவன் இறந்துவிட, அவரது மனைவியும் குழந்தைகளும் நகரத்திற்கு இடம்பெயர்வதையும், அந்த ஜந்துக்களின் வேட்டையை மீறிச் சில மனிதர்கள் அங்கு வாழ்வதையும் சொன்னது இரண்டாம் பாகம்.

அவ்விரண்டு பாகங்களும் வெற்றியை வாரிக் குவிக்க, மூன்றாவது பாகமாக ’கொயட் பிளேஸ்; டே ஒன்’ உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இது உலகம் முழுக்க வெளியாகியிருக்கிறது.

இந்தப் படம் எப்படியிருக்கிறது?

தொடக்கப்புள்ளி!

’கொயட் பிளேஸ்; டே ஒன்’ எனும் டைட்டிலே இப்படத்தின் கதை என்னவென்பதை நமக்குச் சொல்லிவிடும். ஆம், அந்த உயிரினங்கள் முதன்முதலாக எப்போது தனது ஆட்டத்தை ஆரம்பித்தது என்பதைச் சொல்லும் ‘ப்ரீக்யூல்’ (PREQUEL) ஆக இப்படம் உள்ளது.

புற்றுநோய் மருத்துவமனையில் வேலை செய்யும் ரூபன் எனும் செவிலியர், அங்கிருக்கும் நோயாளிகளை உற்சாகப்படுத்தி மன்ஹாட்டனுக்கு ஷாப்பிங் செய்ய அழைத்துச் செல்கிறார். சமீரா எனும் பெண் நோயாளி மட்டும் வர மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்.

புற்றுநோய் முற்றிய நிலையில் இருக்கும் அவர், வாழ்வின் மீதான பிடிப்பு சிறிதுமின்றி இருக்கிறார். எந்நேரமும் தான் வளர்க்கும் பூனையே துணை என்றிருக்கிறார். அந்தப் பூனையின் பெயர் ப்ரெடோ. சமீராவைக் கட்டாயப்படுத்தி மன்ஹாட்டனுக்கு அழைத்துச் செல்கிறார் ரூபன்.

அந்த நகரம் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் சென்ற சில மணி நேரத்தில் அதன் இயல்பு தலைகீழாகிறது.

திடீரென்று வேற்றுக்கிரகத்தைச் சேர்ந்த சில உயிரினங்கள் தாக்குதல் நடத்துகின்றன. சிறிது சத்தம் எழுந்தாலும், அந்த இடத்தையே சூறையாடுகின்றன. முதலில் நடப்பது என்னவென்று தெரியாமல் மனிதர்கள் திகைத்து நிற்கின்றனர்.

சுதாரிப்பதற்கு அவகாசம் தராமல், அவர்களைக் கொன்று குவிக்கின்றன அந்த உயிரினங்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்காக ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் படையினரும் வாகனங்களும் கொத்துக்கொத்தாக வீழ்கின்றன. மலையையே புரட்டிப் போடும் அளவுக்கு ஆற்றல் படைத்தவையாக அவ்வுயிரினங்கள் இருக்கின்றன.

சமீராவின் உயிரை அந்த உயிரினங்களிடம் இருந்து காப்பாற்றுகிறார் ரூபன். அந்த உயிரினங்களின் துரத்தலைச் சமாளிக்கும் வகையில் பல இடங்களுக்கு அவரை அழைத்துச் செல்கிறார். ஆனால், சந்தர்ப்பச் சூழ்நிலையால், அதிலொரு உயிரினத்தால் ரூபன் கொல்லப்படுகிறார்.

அதன்பிறகு, இன்னும் மோசமான மனநிலையை அடைகிறார் சமீரா. ப்ரெடோவைக் காப்பது தவிர வேறெதுவும் அவர் மனதில் இல்லை. அந்தச் சூழலில் எரிக் எனும் நபர் அவரைக் காண்கிறார். அவரைப் பின்தொடர ஆரம்பிக்கிறார்.

தொடக்கத்தில் எரிக்கை கண்டு எரிச்சலடையும் சமீரா, மெல்ல அவருடன் சேர்ந்து அந்த இடத்தை வலம் வர ஆரம்பிக்கிறார். அவர்களுக்குள் நட்பு பிறக்கிறது.
தொலைவில் இரண்டு படகுகள் உயிருடன் இருப்பவர்களை மீட்கத் தயாராக இருப்பதாகச் சொல்லும் அறிவிப்பினைக் கேட்டபிறகும் கூட, சமீரா எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறார். அப்போது, சமீராடம் ’நீ எதை நோக்கி பயணிக்கிறாய்’ என்கிறார் எரிக். அதற்கு, அவர் ‘நான் பீட்சா கடைக்குப் போக வேண்டும்’ என்கிறார்.

சிறு வயதில் தந்தை வாசித்த ஜாஸ் இசையைப் பியானோவில் கேட்டதும், அவர் வாங்கித் தந்த பீட்சாவைச் சாப்பிட்டதும் மட்டுமே தனது நினைவில் இருப்பதாகச் சொல்கிறார் சமீரா.

புற்றுநோயால் சிறிதுசிறிதாக இறந்து கொண்டிருக்கும் அவருக்கு, அதைத் தவிர வேறெந்த ஆசைகளும் இல்லை என்பதை அறிகிறார் எரிக். அவற்றை நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்.

இருவரும் அந்த உயிரினங்களின் கோரப் பிடியில் இருந்து தப்பித்தார்களா? சமீராவின் அந்த ஆசைகள் நிறைவேறினவா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
முதல் இரண்டு பாகங்களைப் பார்த்தவர்கள், இந்த படத்தின் பட்ஜெட் மிக அதிகமிருப்பதை நிச்சயம் கவனிப்பார்கள். அடுத்தடுத்த பாகங்களில் பட்ஜெட் அதிகப்படுத்தப்பட்டிருப்பதே, இந்த கதைக்கரு எப்படிப்பட்ட தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதைச் சொல்லிவிடும்.

அசத்தும் காட்சியாக்கம்!

ஆங்கிலப் படங்களைத் தொடர்ச்சியாகப் பார்ப்பவர்களுக்கு, குறிப்பிட்ட வகைமை படங்களில் ‘க்ளிஷே’வாக என்னென்ன காட்சிகள் இடம்பெறும் என்பது நன்றாகவே தெரியும். அந்த வகையில், ‘சர்வைவல்’ வகையறா திரைப்படங்களுக்கான பல ‘க்ளிஷே’ காட்சிகள் ‘கொயட் பிளேஸ்: டே ஒன்’னில் நிறைய உண்டு.

அவற்றை மீறி நம்மைத் திரையுடன் பிணைப்பது, அவை காட்சிப்படுத்தப்பட்ட விதம் தான்!

பாட் ஸ்கோலாவின் ஒளிப்பதிவு, சிமோன் பௌலஸின் தயாரிப்பு வடிவமைப்பு, கிரிகொரி ப்ளாட்கின் மற்றும் ஆண்ட்ரூ மாண்ட்ஸினின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பப் பங்களிப்பு அனைத்தும் ஒன்றிணைந்து செறிவானதொரு காட்சியனுபவத்தைத் தருகின்றன.

வேற்றுக்கிரக உயிரினங்களை ‘க்ளோஸ்அப்’பில் காட்டும் ஷாட்களில் விஷுவல் எபெக்ட்ஸின் நேர்த்தி அபாரம்.

அழிவுகளுக்கும் கோரங்களுக்கும் நடுவே சில மனிதர்கள் உயிர் தப்பிக்கும் சாகசங்களைச் சொல்லும் ஒரு படத்தில் மனதை வருடும் காட்சிகளுக்கோ, பின்னணி இசைக்கோ பெரிதாக இடம் இருக்காது. இதில் அப்படிப்பட்ட தருணங்கள் நிறைய இருக்கின்றன. அலெக்ஸிஸ் க்ரெப்சாஸின் பின்னணி இசை அக்காட்சிகளை நம் மனதுக்கு நெருக்கமானதாக மாற்றுகிறது.

இதில் சமீராவாக லுபிடா யோங்கோ, எரிக் ஆக ஜோசப் க்யூன், ரூபனாக அலெக்ஸ் வோல்ஃப் நடித்துள்ளனர்.

ஏற்கனவே வெளியான ‘கொயட் பிளேஸ்’ இரண்டு பாகங்களில் உள்ள சில பாத்திரங்கள் இதிலும் வருகின்றன. ஆப்பிரிக்க அமெரிக்க கலைஞரான ஜமூன் ஹன்சோவின் பாத்திரமும் அதிலொன்று.

போலவே, அந்த ஜந்துக்களின் இயல்பையும் இயக்கத்தையும் அப்பாகங்களைக் கொண்டே இப்படத்தின் கதையை வடிவமைத்திருக்கின்றனர் மைக்கேல் சர்னோஸ்கி  மற்றும் ஜான் கிரசின்ஸ்கி.

படத்தின் தொடக்கத்தில் மனிதர்கள் ஆயிரக்கணக்கில் காட்டப்பட்டாலும், மெல்ல மெல்ல அந்த எண்ணிக்கை குறைந்து இறுதிக்கட்டத்தில் இரண்டொரு பாத்திரங்களின் மீது மட்டுமே நம் கவனம் நிலைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் மைக்கேல் சர்னோஸ்கி, ஒரு விறுவிறுப்பான படத்தில் கொஞ்சம் ‘க்ளாஸ்’ விஷயங்களும் இருக்க வேண்டுமென்று அடம்பிடித்திருக்கிறார். சமீரா பாத்திரத்தையும் அதற்காகவே செதுக்கியிருக்கிறார்.

வெறுமனே ஆக்‌ஷன் எபிசோடுகளை மட்டுமே ரசிக்க விரும்புபவர்களுக்கு அக்காட்சிகள் எரிச்சலைத் தரலாம். அதேநேரத்தில், ‘கொயட் பிளேஸ்’ ரசிகர்களுக்கு இந்த மூன்றாம் பாகம் நிச்சயம் திருப்தி தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

TNAssembly : காவல்துறைக்கு 100 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்

”கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக நாடகம்” : ஸ்டாலின் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share