தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை வட்டியுடன் சேர்த்து ரூ. 2,291 கோடி வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

Published On:

| By Minnambalam Desk

Tamil Nadu Case

தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி வட்டியுடன் சேர்த்து ரூ.2,291 கோடியை மத்திய அரசு உடனே வழங்க உத்தரவிட கோரி தமிழ்நாடுஅரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. Educational Fund

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு விவரம்: தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையை பின்பற்றி வருகிறது. 2010 ஆம் ஆண்டு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழ்நாட்டின் கல்வித்தரம் சிறப்பாக உயர்ந்துள்ளது.

2006 ஆம் ஆண்டு சட்டப்படி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை(NEP) தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த தேவை இல்லை.

ஆனால் மத்திய அரசு தமது கல்விக் கொள்கையை திணிக்க நிதி விவகாரத்தை பயன்படுத்துவது என்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது. இந்திய அரசியல் சாசனம் வழங்கிய உரிமையின் படி மாநில அரசு சொந்த கல்வி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தடையாக இருப்பது அரசியல் அமைப்புக்கு எதிரானது.

மத்திய அரசு கல்வி நிதி வழங்காததால் 43.94 லட்சம் மாணவர்கள், 2.21 லட்சம் ஆசிரியர்கள், 32,701 இதர பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பிப்ரவரி மாதம் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார்.

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூபாய் 2151.59 கோடி கல்வி நிதியும், அதற்கான 6 சதவீத வட்டி ரூபாய் 139.70 கோடியும் சேர்த்து மொத்தம் ரூபாய் 2,291 கோடி, தமிழ்நாடு அரசுக்கு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share