சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எடுத்த போட்டோவே அவரை கொலை செய்ய காரணமாக அமைந்திருக்கிறது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன்களான மணிகண்டன், தங்கபாண்டி என இருவர் மீதும் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டம் என நான்கு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவற்றில் கைதாக வேண்டிய இருவரும் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தங்களது தந்தை பணியாற்றி வந்த அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில் பணிக்குச் சேர்ந்து தலைமுறைவாக தங்கபாண்டி வாழ்ந்து வந்துள்ளார். அதேபோல மணிகண்டனும் வெவ்வேறு பகுதிகளில் தலைமைறைவாக வாழ்ந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு உடுமலைக்கு வந்து அதே தோட்டத்தில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் தந்தை மூர்த்தி மற்றும் மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேரும் மது போதையில் தினசரி தகராறில் ஈடுபட்டு வந்தனர் என கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவர்கள் உடன் பழகாமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் மது போதையில் இருந்த மூன்று பேரில் தங்கபாண்டி மற்றும் தந்தை மூர்த்திக்கு இடையே தகராறு எழுந்துள்ளது.
இதில் தங்கபாண்டி தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளார். முகத்தில் ரத்த காயம் அடைந்த அவரை தங்கப்பாண்டி கொன்று விடுவாரோ என அருகில் இருந்தவர்கள் 100 அவசர எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அவர் தந்தை, மகன் இருவரின் சண்டையைத் தடுத்து காயம் அடைந்த மூர்த்தியை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.
ஆனால் இது எங்கள் குடும்ப விஷயம் தலையிட வேண்டாம் என மற்ற இருவரும் தெரிவித்துள்ளனர். ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு அடித்து விட்டு குடும்ப விஷயம் என எப்படி சொல்கிறாய் என கேட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் நீ ஸ்டேஷனுக்கு வா உன்னிடம் விசாரிக்க வேண்டும் என பெயர் விவரங்களை கேட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து மூர்த்தி மற்றும் தங்கபாண்டி இருவரையும் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து அதனை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த புகைப்படம் வெளியானால் தலைமறைவாக இருப்பதை கண்டுபிடித்து விடுவார்கள் என்று பதறிய மணிகண்டன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து உதவி ஆய்வாளர் சண்முகவேலை தாக்கி உள்ளார்.
தடுக்க வந்த ஆயுதப்படை காவலரையும் வெட்ட முயன்றனர். அவர் தப்பி ஓடி காவல் நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மணிகண்டன், தங்கபாண்டி, மூர்த்தி என மூன்று பேரும் சேர்ந்து உதவி ஆய்வாளரை சரமாரியாக வெட்டியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
