உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2° செல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை 40.2° செல்சியஸ் ஆக பதிவானது.
இந்நிலையில் 26-04-2026 முதல் 30-04-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
26-04-2026 முதல் 30-04-2026 வரை: உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.
26-04-2026 முதல் 30-04-2026 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பதிவில்,மே 1முதல் உள்நாட்டு, தென் மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் மழை மீண்டும் தொடங்கினாலும், ஆந்திர எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகள் (KTCC – சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள்) கடும் வெயில் காணப்படும்
சென்னை புறநகர் பகுதிகளில் வெப்பநிலை எளிதாக 40°C-ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலூரில் ஏப்ரல் 7, 2026 அன்று பதிவான 42°C மீண்டும் எட்டப்படும் வாய்ப்பு உள்ளது.
ஆந்திராவுக்கு அருகிலுள்ள பகுதிகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும். கடலோரத்தின் மிகவும் அருகிலுள்ள பகுதிகள் மட்டும் சற்றே தப்பிக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.









