ராஜன் குறை A mature democracy and Unnecessary governor’s position
முன்பெல்லாம் நாற்சந்தியில் ஒரு குடையின் கீழோ, வெட்டவெளியிலோ ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள் கையில் ஸ்டாப் என்று கூறும் பிளேட்டுடன் நின்றிருப்பார்.
அவர் அதைக்காட்டும் திசையில் வரும் வாகனங்கள் பிரேக் போட்டு நிற்கவேண்டும். அவர் அந்த கட்டளையை நீக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதை மீறினால் அபராதம், தண்டனை.
அந்த டிராஃபிக் கான்ஸ்டபிள் “ஆகா! நம்மிடம் எவ்வளவு அதிகாரம் இருக்கிறது!” என்று அவர் விருப்பத்திற்கு ஒரு சாலையில் மட்டும் வாகனங்களை நிறுத்தினால் என்னவாகும்? பெரிய பிரச்சினை வெடிக்கும். வாகன ஓட்டிகள் கொந்தளிப்பார்கள். பயணிகள் கொந்தளிப்பார்கள்.
நல்லவேளையாக, இப்போதெல்லாம் தானியங்கி சிக்னல்கள் வந்துவிட்டன. அவை தானாகவே குறிப்பிட்ட கால அளவிற்குப் பின் பச்சை, மஞ்சள், சிவப்பு விளக்குகளை மாற்றி போக்குவரத்தை நெறிப்படுத்துகின்றன.
அவை மனிதர்கள் இல்லையாததால் தங்களுக்குள்ள அதிகாரத்தை குறித்து மமதை கொள்வதில்லை. எந்த ஆரவாரமுமின்றி போக்குவரத்தை நெறிப்படுத்துகின்றன.
ஆளுநரின் பணியும் டிராஃபிக் கான்ஸ்டபிள் பணி போலத்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்ற காரணத்தால் மக்களாட்சி விழுமியங்களுக்கு மாறாக சட்டம் இயற்றினால் அவர் அதற்கு ஸ்டாப் சிக்னல் காட்டலாம். மீண்டும் பரிசீலிக்கச் சொல்லலாம்.
பிரச்சினை பெரிதாக இருந்தால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். ஆனால் தனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அரசின் செயல்பாட்டையே தடுத்து நிறுத்தும் வகையில், மக்களால் அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மறுக்கும் வகையில் செயல்பட முடியாது, கூடாது!
எப்படி போக்குவரத்துக் காவலர் பொறுப்புணர்ந்து செயல்படுவார் என்று நம்பி அவர் கையில் அதிகாரம் அளிக்கப்படுகிறதோ, அதே போலத்தான் ஆளுநருக்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. அவர் எத்தனை நாட்களில் சட்டமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை.
ஏனெனில், அவர் வேண்டுமென்றே தாமதிப்பார் என்றெல்லாம் அரசியலமைப்புச் சட்டம் எழுதிய காலத்தில் யாரும் சிந்திக்கவில்லை! அவர் விருப்பப்படி சட்டங்களை நிறுத்திவைப்பார், (withhold) செய்வார் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லை!
மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் தனக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக பொதுநலனுக்கு எதிராக சட்டங்களை இயற்றிவிடுமோ என்று அஞ்சினார்கள்! அதனால் ஒரு எச்சரிக்கைக்காக சில தடுப்புகளை ஏற்படுத்தினார்கள்! ஆங்கிலத்தில் இதை செக் அண்ட் பாலன்ஸ் என்பார்கள்.
அதாவது அதிகாரம் ஓரிடத்தில் குவியாமல் சில தடுப்புகளை ஏற்படுத்தி சமன் செய்வது. இப்படியெல்லாம் அரசியலமைப்புச் சட்டம் இயற்றியவர்கள் சிந்திக்க காரணங்கள் என்னவாக இருந்திருக்கும்? அந்த சூழல் என்ன என்பதை பரிசீலிப்போம்.
அரசியலமைப்புச் சட்டம் உருவான காலம் எது?
அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்ட காலத்தில் இந்திய நாடு இன்றுள்ளது போல தெளிவான மாநில அமைப்புகளை கொண்டதாக இல்லை. பிரிட்டிஷ்காரர்கள் அவர்கள் வசதிக்காக பிரித்திருந்த பிரசிடென்சிகளாக, நிலப்பகுதிகளாகத்தான் இருந்தன. உதாரணமாக தெற்கு ஆந்திரா மெட்ராஸ் பிரிசிடென்ஸியில்தான் இருந்தது.
எந்த அடிப்படையில் ஒன்றியத்துடன் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ளும் உறுப்புகளான மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்பதில் தெளிவு இருக்கவில்லை.
நாடு முழுவதும் சிறிதும், பெரிதுமான சுயாட்சி பெற்ற சமஸ்தானங்கள் இருந்தன. அவை இந்தியாவுடன் இணையுமா, இணையாதா என்ற கேள்வியும், இணைந்தாலும் மக்கள் முழு விருப்புடன் இந்திய குடிமக்களாக விளங்குவார்களா என்பதெல்லாம் நிச்சயமற்ற கேள்விகளாக இருந்தன. பல சமஸ்தானங்களில் மன்னர்கள் விருப்பமும், மக்கள் விருப்பமும் வேறுபட்டிருந்தன.
சுருக்கமாகச் சொன்னால் இந்தியா என்ற ஒன்றியத்தினை உருவாக்கும் மக்கள் தொகுதிகள் இவைதான் என தெளிவாகக் கூற முடியவில்லை. இன்றைக்கு அரசியல் தத்துவ சிந்தனையாளர் பார்த்தா சாட்டர்ஜி இந்தியா என்பது மக்கள் தொகுதிகளின் கூட்டாட்சி என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் என்றால் அதற்குக் காரணம் இன்று தனித்தனி மொழி பேசும் மக்கள் தொகுதிகள் தெளிவாக மாநில அரசியல் களமாக உருவாகி விட்டார்கள் என்பதுதான். ஆனால் 1947-இல் இது தெளிவாக இல்லை.
சொத்துவரி கட்டுபவர்கள் மட்டும் வாக்களித்து பேச்சுக்கு ஓரளவு பிரதிநிதித்துவம் உள்ள அரசியலமைப்பு சட்ட வரைவிற்கான அவையை தேர்ந்தெடுத்து விட்டார்கள். அரசியலமைப்பு சட்டம் உருவான பிறகு வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, Universal Adult Franchise என்பது இன்றியமையாதது, அப்போதுதான் இந்தியா மக்களாட்சிக் குடியரசாக அமையும் என்று தீர்மானமாக இருந்தார்கள். ஆனால் நாட்டில் எண்பது சதவீதம் மக்களுக்கு எந்த மொழியும் எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் மாநில அரசுகள் எப்படி உருவாகும் என்பது உறுதியாக இல்லை.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பலவிதமான போக்குகள் இருந்தன. உதாரணமாக உத்திரப்பிரதேச கட்சியில் செல்வாக்காக இருந்த பலர் பழமைவாத, சனாதன நோக்கு கொண்டவர்களாக, முற்போக்காளரான நேருவுடன் இணக்கம் இல்லாதவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த விதமான கருத்தியல் போக்குள்ளவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்ற கவலை இயல்பாகவே அனைவருக்கும் இருந்திருக்கலாம்.
அஸ்ஸாம் மாநிலத்தில் பூர்வகுடிகள் தங்களுக்கான சுயாட்சி பகுதிகளை கோரினார்கள். ஒன்றிய அரசுடன் அவர்கள் உறவை எப்படி நிர்ணயிப்பது என்பது குறித்த ஆய்வுகள் தனியாக நடந்த வண்ணம் இருந்தன.
இப்படி நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பலவிதமான கேள்விகளுக்கு விடை தேட வேண்டி இருந்தது. சுருங்கச் சொன்னால் இந்தியா என்ற குடியரசு உருவாகியது; அதன் உறுப்புகள் எவை என்பதும், அவற்றிற்கிடையேயான உறவுகள் எப்படி இருக்கும் என்பது தெளிவாக, உறுதியாக இல்லை.
பாகிஸ்தான் பிரிவினையின் தாக்கம்
எல்லா பிரச்சினைகளையும் ஓரம் கட்டும் விதத்தில் அவசரமாக எல்லைகள் வகுக்கப்பட்டு, தனி நாடாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் பகுதிகள் உருவாக்கம் அமைந்தது.
பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து இந்து மக்களும், இந்திய பகுதிகளிலிருந்து முஸ்லீம்கள் பெரும் எண்ணிக்கையில் இடம் பெயரத் துவங்கினார்கள். கட்டுப்படுத்த முடியாத பயங்கர வன்முறை வெறியாட்டங்களும் துவங்கின.
இது நிச்சயம் புதிய அரசை உருவாக்க முனைந்தவர்கள் மனதில் பிரிவினை குறித்த பெரும் அச்சத்தை உருவாக்கி இருக்கும். பல்வேறு மொழிகள்,பண்பாடுகளைக் கொண்ட இந்தியா துண்டு துண்டாக சிதறிப்போகும் என்று பலர் கூறிவந்தார்கள்.
இத்தகைய சூழ்நிலையில்தான் ஒன்றிய அரசின் அதிகாரத்தை சற்றே வலுவாக வைக்க வேண்டும் என்று பலரும், அம்பேத்கர் உட்பட கருதுவது சாத்தியமானது. அதே நேரம் இந்தியாவின் பன்மை குறித்து அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள்.
அதனால்தான் திட்டவட்டமாக இந்தியா ஒரு கூட்டாட்சி குடியரசுதான் என்று கூறினார்கள். ஆனால் அந்த கூட்டாட்சியின் உறுப்புகளான மக்கள் தொகுதிகள் எவையெவை என்பதை திட்டவட்டமாக உணர முடியாததால் ஒன்றிய அரசிடம் சில ஒருங்கிணைக்கும் இழைகளை கொடுக்க நினைத்தார்கள்.
அப்படி உருவானதுதான் இந்த ஆளுநரை ஒவ்வொரு மாநிலத்திலும் நியமிக்கும் எண்ணம். எப்படி குடியரசுத் தலைவர் ஒன்றிய அரசின் சட்டபூர்வமான இறையாண்மைக் குறியீடாக இருப்பாரோ, அதேபோல மாநில ஆளுநர் மாநில அரசுகளுக்கு இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அத்துடன் மாநில அரசுகளை ஒன்றிய அரசுடன் இணைக்கும் கண்ணியாகவும் இருப்பார் என்பதும் திட்டம். மாநிலங்களில் பெரும் நெருக்கடிகள் உருவானால், ஆளுநர் மூலமாக அதனை ஒன்றிய அரசு கையாள இயலவேண்டும் என்ற எண்ணம்.
இவையெல்லாமே மாநிலங்கள் திட்டவட்டமாக உருப்பெற்று அங்கே அனைவரும் வாக்களிக்கும் தேர்தல்கள் நடந்து மக்களாட்சி நடைமுறைக்கு வருவதற்குமுன் சிந்திக்கப்பட்ட விஷயங்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
எழுபதாண்டுகளில் மக்களாட்சி அடைந்துள்ள முதிர்ச்சி
அரசியலைப்பு சட்டம் உருவாகி 1952-ஆம் ஆண்டு தேர்தல்கள் நடக்கத் துவங்கிய பிறகு எழுபதாண்டுகளில் இந்தியாவில் மக்களாட்சி சிறப்பாக வேரூன்றி, முதிர்ச்சியடைந்துள்ளது என்றே கூற வேண்டும். இதன் பொருள் இதில் போதாமைகளோ, சிக்கல்களோ இல்லை என்பதல்ல. ஆனால் இவ்வளவு பெரிய, அளப்பரிய பன்மை மிகுந்த நாட்டில் பல்வேறு மக்களாட்சி நடைமுறைகள் வெற்றிகரமாக வலுப் பெற்றுள்ளன என்பதுதான் சிறப்பு. இதில் சில முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.
முதலில் எக்ஸக்யூடிவ் எனப்படும் அரசு இயந்திரம். இந்திய ஆட்சிப் பணியாளர்கள் என்ற வலைப்பின்னல் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு, ஒன்றிய மாநில அரசுகளின் கட்டுமானத்திற்கான ஆதாரமாக விளங்குகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் முதன்மைச் செயலர் என்பவர் ஒன்றிய அரசுடன் இடையறாத் தொடர்பில் உள்ளார்.
வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆட்சிப்பணி அதிகாரிகள் வெவ்வேறு மாநிலங்களில் பணியில் அமர்த்தப்படுவதும், ஒன்றிய அரசிலும் பணி செய்வதுமாக ஒரு நிர்வாக வலைப்பின்னல் உருவாகி இயங்கி வருகிறது. இந்த வலைப்பின்னலில் காவல்துறை அதிகாரிகளும் அடக்கம்.
அதேபோல தொழில், வர்த்தகம் ஆகியவை அடங்கிய குடிமைச் சமூகமும் பல்வேறு மாநிலங்களுக்கிடையேயான உறவுகளை பன்மைப்படுத்தி, வலுப்படுத்தியுள்ளது கண்கூடு. நாட்டின் ஏதோவொரு மூலையில் உற்பத்தியாகும் பொருள் நாடெங்கும் வினியோகம் பெறுகின்றது. அதற்கான வலைப்பின்னல்கள் நாளுக்குநாள் வலுவடைந்து வருகின்றன.
உலகளாவிய பொருளாதார வலைப்பின்னலின் பகுதியாக இந்திய பகுதிகளுக்கிடையிலான வலைப்பின்னலும் விரிவானதாகவே உள்ளது. கடந்த சில பத்தாண்டுகளாக மாநிலங்களிடையே தொழிலாளர்கள் இடப்பெயற்சியும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இவற்றின் இணை நிகழ்வாக ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் மாநில அளவில் அரசையும், மக்களையும் இணைக்கும் வலைப்பின்னல்களாக வளர்ந்துள்ளன. பல மாநிலங்கள் பத்து, பன்னிரெண்டு பொதுத்தேர்தல்களை சந்தித்துவிட்டன. மக்களின் பங்கேற்பு இந்த தேர்தல்களில் கணிசமாக இருப்பதுடன், கட்சிகள் மாறி, மாறி பெரும்பான்மை பெற்று அரசாள்வதும் நடக்கிறது.
நீதிமன்றங்களின் வலைப்பின்னலும் நாடு முழுவதும் வேரூன்றியுள்ளது. சில வழக்குகள் தல மட்ட நீதிமன்றங்களிலிருந்து மேல்முறையீட்டிற்கு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை செல்வது சாத்தியமாகிறது. இதில் கால தாமதம், பொருட்செலவு போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், சட்டத்தின் ஆட்சி குறித்த உத்திரவாதம் மக்களுக்குக் கிடைக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும், வெவ்வேறு மொழிகளிலும் ஊடகங்கள் வலுவாக இயங்குகின்றன. அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகம் தவிர சமீபகாலத்தில் இணைய பயன்பாடும், சமூக ஊடகங்களும் பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ளன. கிராமங்களில் கூட மக்கள் செல்பேசிகளை பயன்படுத்தி செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதை காண முடிகிறது.
இப்படி பல்வேறு அம்சங்களிலும் கூட்டாட்சி அமைப்பு திட்டவட்டமாக உருவாகி இயங்கும்போது, மாநிலங்களை ஒன்றிய அரசின் சார்பாக மேற்பார்வை பார்க்க ஆளுநர் பதவி என்பது முற்றிலும் அவசியமற்றதாகிறது. மாநில அரசு ஒரு தவறான சட்டம் இயற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே நீதிமன்றத்தை நாடிவிடுவார்கள். தீவிரமான பிரச்சினையாக இருந்தால் தடை பெற்று விடுவார்கள். பொது நல வழக்குகளுக்கும் கூட குறைவில்லை. A mature democracy and Unnecessary governor’s position
மேலும் நிதிப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து இயங்க வேண்டியுள்ளது, பொருளாதார வளர்ச்சியின் இயங்குவிசை யாரையும் தனித்து செயல்பட விடாது. இந்த நிலையில் மாநில அரசுகள் தான்தோன்றித்தனமாக அதிகார அத்துமீறல் எதையாவது செய்துவிடும் என்று நினைப்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனம். அது மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதன்றி வேறல்ல.
உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்திய அரசியலின் ஸ்டெபிலிடி என்று ஆங்கிலத்தில் கூறப்படும் உறுதிப்பாடும், தேர்தல் சார் மக்களாட்சியின் காலம் தவறா ஒழுங்கும் மிக அபூர்வமானவை என்று கூறவேண்டும். இந்த வாரம் கூட மத்தியப் பிரதேச தேர்தலில் 74% வாக்குப் பதிவாகி உள்ளது. காங்கிரசும், பாஜகவும் கடுமையாக போட்டியிட்டுள்ளன. யார் ஆட்சி அமைத்தாலும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி செய்வார்கள் என்று கூறலாம். சில சமயங்களில் கட்சிகள் பெரும்பான்மை இழந்தாலும், சமூக அமைதி சீர்கெடுவதில்லை. ஆட்சி நிலைகுலைந்து போவதில்லை.
பேரரசின் பிரதிநிதிகளா ஆளுநர்கள்?
இப்படி தானாகவே தானியியங்கி சிக்னல்கள் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதுபோல அனைத்தும் சீராக நடக்கையில், ஆளுநர் என்ற தேவையில்லாத போக்குவரத்து காவலர் எதற்காக என்பதே கேள்வி. பாஜக பேரரசு மனப்பான்மையில் ஆளுநர்கள் மூலம் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் இடையூறுகள் செய்வது அபூர்வமாக உருவாகியுள்ள தேசிய கூட்டாட்சி வலைப்பின்னலையே சிதைத்து விடும்.
பாரதீய ஜனதா கட்சி 1930, 1940-களிலேயே தேங்கி நிற்கிறது. அன்றைய நிலையில் சாவர்க்கர், கோல்வால்கர் உள்ளிட்டோர் உருவாக்கிய இந்து மத அடையாள அரசியலுக்கு இன்றைய நிலையில் எந்த பொருத்தப்பாடும் கிடையாது. நியாயமாகச் சொன்னால் இன்றுள்ள அறிவியல், தொழில்நுட்ப, பொருளாதார வளர்ச்சிக்கு உலகமே ஒரு கூட்டாட்சியாக மாற வேண்டும்.
ஆனால் பாஜக காலத்திற்கு உதவாத ஒற்றை அடையாள தேசியவாதத்தை சுமந்து கொண்டு அலைகிறது. அதன் வெளிப்பாடாகவே அவசியமற்றுப்போன ஆளுநர் பதவிக்கு அதிகாரம் தந்து கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கப் பார்க்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று போகாத ஊருக்கு வழி தேடுகிறது. இது உண்மையிலேயே தேசப்பற்றுதானா என்பதை பாஜக கட்சிக்காரர்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற திராவிட சமூக நீதிச் சிந்தனையை ஆளுநர் ரவியின் மூலம் அவமதிப்பதால் என்ன அரசியல் பலன்களை பெற்றுவிட முடியும் என்று ஒன்றிய அரசை ஆளும் பாஜக நினைக்கிறது என்று வியப்பாக இருக்கிறது. தன் எல்லைமீறி அரசியல்வாதியாக செயல்பட்டுவரும் ஆளுநர் ரவியை திரும்பப் பெறுவதே தமிழ்நாட்டு, இந்திய அரசியலின் எதிர்காலத்திற்கு பாஜக செய்யும் நல்லதொரு பங்களிப்பாக இருக்கும். A mature democracy and Unnecessary governor’s position
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
கிச்சன் கீர்த்தனா: ஷக்கர்கந்தி (சர்க்கரைவள்ளிக் கிழங்கு) சாட்
INDvsAUS : இறுதிப்போட்டியில் தோல்வி ஏன்?: ரோகித் சர்மா பேட்டி!
ஆஸ்திரேலியா சாம்பியன்: மோடி, ராகுல், ஸ்டாலின் வாழ்த்து!
INDvsAUS Final: சொன்னதை செய்த கம்மின்ஸ்… 6வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!