வரப் போகும் தேர்தலை முன்னிட்டு மகா மெகா அகா துகா ஜுகா கூட்டணிகளை அமைக்க ஆளாய்ப் பறக்கும் நேரம் இது . இந்த சூழலில் ஐசரிகணேஷின் வேல்ஸ் பிலிம் நிறுவனத்துக்கு படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இப்போது இருவரும் கூட்டணி சேர்ந்து ஒரு திரைப்பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் இயக்குனர் விஜய்யின் டி ஸ்டுடியோஸ் போஸ்ட் இணைந்து , இனி ‘வேல்ஸ் – டி ஸ்டுடியோ’ என்ற பெயரில் செயல்படும்.
தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப மற்றும் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் செயல்படும். நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் ‘வேல்ஸ் – டி ஸ்டுடியோ’ இயங்கப் போகிறது என்கிறார்கள்.
இயக்குநர் விஜய் “இந்திய சினிமாவின் இதயத்துடிப்பு சென்னைதான். திரைப்படத் தயாரிப்பின் சில துறைகளில் மும்பை எவ்வாறு முன்னணியில் உள்ளது என்பதை நான் பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். அதுதான் இங்கு உலகத் தரம் வாய்ந்த படைப்பாற்றல் சூழலை உருவாக்க என்னைத் தூண்டியது. உயர்தர கேமரா, புரொடக்ஷன் கருவிகள், எடிட்டிங் சூட்ஸ், ஒலி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான சப்போர்ட் மற்றும் அவுட்டோர் யூனிட் என அனைத்தும் இந்த அப் கிரேட்டட் ஸ்டுடியோவில் இருக்கும் ‘வேல்ஸ் – டி ஸ்டுடியோ’ தமிழ் சினிமாவை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லும் நிறுவனமாக இருக்கும். திரைப்படத் தயாரிப்பிற்கான மையமாக சென்னையை வலுப்படுத்துவதே எங்கள் குறிக்கோள்” என்றார்.
இந்த சினிமா கூட்டணியாவது சொன்னதை செய்யுமா?
- ராஜ திருமகன்
