சிவகாசியில் பயங்கரம் : மனைவி குழந்தைகளை தீ வைத்து கொலை செய்ய முயற்சி – 5 பேர் ஆபத்தான நிலையில் மீட்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

சிவகாசியில் குடும்ப பிரச்சனையால் அக்பர் அலி என்பவர் மனைவி மற்றும் குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி முஸ்லிம் ஓடை தெருவைச் சேர்ந்தவர் அக்பர் அலி 50. இவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அக்பர் அலி இன்று (டிசம்பர் 23) தனது மாமியார் மற்றும் மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த அக்பர் அலி தனது மனைவி செய்யது அலி பாத்திமா 35, மகள் பர்வீன் 18, மகன் பாருக்-13, மாமியார் சிக்கந்தர் பீவி 60 ஆகியோர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

ADVERTISEMENT

நான்கு பேர் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்த போது எதிர்பாராத விதமாக அவர் மீதும் தீ பற்றி எரிந்துள்ளது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் 5 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 5 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக செய்யது அலி பாத்திமாவின் முதல் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும், அதன் பின்னர் அவர் அக்பர் அலியை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட குடும்பத் தகராறில் அக்பர் அலி, செய்யது அலி பாத்திமாவின் தலையில் சுத்தியலால் தாக்கி உள்ளார். இது தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஜாமினில் வெளியே வந்த நிலையில், அதிகாலை 6 மணியளவில் குடும்பத்தினரிடம் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் தீ திடீரென பரவி, அக்பர் அலியும் காயமடைந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share