புனே விமான நிலையத்தில் டிரை ஷாம்பூ கொண்டு சென்ற ஒரு தம்பதி, தங்களுக்கு நேர்ந்த திக் திக் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. A couple get shocked at the airport by dry shampoo
ஒரு காலத்தில் விமானத்தில் பறப்பது சாகசமாக இருந்த நிலைமாறி, இன்று சிலருக்கு அன்றாட பயணப் போக்குவரத்தாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அமன் – அனுஷா என்ற தம்பதியினர் அவர்களது பையில் சட்டவிரோதமான பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால், புனே விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு சோதனைக்காக உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கூறியுள்ளது கவனம் பெற்று வருகிறது.
அந்த வீடியோவில் அனுஷா கூறுகையில், ”இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அமனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் ஒருவர், ’உங்கள் பையில் சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் உடனடியாக கேட் எண் 3க்கு வாருங்கள்” எனக் கூறினார்.
நாங்களும் பதற்றத்துடன் கேட் எண் 3க்குச் சென்றோம், அங்கு ஒரு ஊழியர், ‘என்னுடன் வாருங்கள்’ என்று கூறி, அங்கிருந்த ஐடி அறைக்கு எங்களை அழைத்துச் சென்றார்.
இந்த நடைமுறை இன்னும் எங்களுக்குள் திகிலூட்ட, அந்த அறைக்குள் நுழைந்தோம்.
அங்கிருந்த மேஜையில் எனது பை ஒன்று எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து அவர்களை அச்சுறுத்திய ஒரு பொருளை எடுத்துக்காட்டி ’இது என்ன?’ என்றனர். அதற்கு நாங்கள், ’அது டிரை ஷாம்பூ தான் வேறொன்றுமில்லை. அது 100 சதவீதம் டிரை ஷாம்பூ தான்’ என்றோம்.
அதனை அவர்களும் உறுதி செய்த நிலையில், எங்களுக்கு வார்னிங் கொடுத்து அனுப்பி வைத்தனர்” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் இதுவரை கிட்டத்தட்ட 3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து பல பயனர்கள் விமான நிலையத்தில் தங்கள் சொந்த அசாதாரண அனுபவங்களை கமெண்ட் பிரிவில் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு பயனர், “நான் கல்லூரிக்கு தேர்வுகளுக்காக புனேவிலிருந்து டெல்லிக்குச் சென்றதால் என் பையில் ஒரு வெற்று பார்க்கர் பேனாவை எடுத்துச் சென்றேன். விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் அதை இன்சுலின் ஊசி மற்றும் போதை மருந்து என நினைத்து விசாரித்தனர்’ என்றார்.
மற்றொருவர், ”நானும் டிரை ஷாம்பூ கொண்டு சென்றதற்காக விசாரிக்கப்பட்டேன். இப்போதெல்லாம் பாதுகாப்பு அதிகாரிகள் லக்கேஜ் செக்கிங் திரையை பார்த்தாலே பயம் தொற்றிக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

டிரை ஷாம்பூ கொண்டு செல்லலாமா?
விமானங்களில் ஸ்பிரே வகை உலர் ஷாம்பூ கொண்டு செல்வது சிலக் கட்டுப்பாடுகள் உள்ளன. அவை கட்டாயம் செக்கிங் லக்கேஜில் வைக்க அறிவுறுத்தப்படுகிறது. 100 மில்லி அல்லது அதற்கும் குறைவாக உள்ள உலர் ஷாம்பூவை கையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
பொதுவாக உலர் ஷாம்புவிற்கான விமான நிறுவனங்களின் விதிகளில் மாறுபாடு இருக்கும். எனவே குறிப்பிட்ட விமான நிறுவனம் மற்றும் விமான நிலையப் பாதுகாப்பை உலர் ஷாம்பூ குறித்த அறிவுறுத்தல்களை பயணம் மேற்கொள்வதற்கு முன் சரிபார்ப்பது எப்போதும் நல்லது’ என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
