மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால், பள்ளி மாணவியின் காதலன், காதலியின் வகுப்பு தோழி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக அரசு பள்ளிகள் தொடர்ந்து பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார் மாணவி மாளவிகா (பெயர் மாற்றம் செய்யப்பட்டது). இவர் கடந்த வாரம் பள்ளிக்கு அணிந்து வந்த 12 கிராம் பவுன் நகையை கழட்டி தனது பையில் வைத்திருந்த நிலையில் காணாமல் போய்விட்டது.
பையில் வைத்திருந்த நகையை காணவில்லை என்று பள்ளி ஆசிரியர் அனுமதியுடன் விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் மாணவி மாளவிகா சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
அதில் சந்தேகப்படும் நபர்களாக அதே பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளான சேமளா, கோனிகா, சீதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) ஆகிய மூவர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார் மாளவிகா.
குற்றச்சாட்டுக்கு ஆளான சேமளா, கோனிகா, சீதா மூவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நகை திருடுபோன மாளவிகா வேறு சமூகத்தை சேர்ந்தவர்.
புகாரைப் பெற்ற விசாரணை அதிகாரி, ’இந்த புகாரை கவனமாக விசாரிக்க வேண்டும் இல்லை என்றால் சாதி கலவரமாக வெடித்து விடும்’ என்ற அச்சத்தில் சிஎஸ்ஆர் கொடுத்து பின்னர் விசாரிக்கிறோம் என்று அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பின்னர் போலீஸார் ரகசியமாக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வகுப்பு நேரத்தில் மாணவி சேமளா, மாணவி கோனிகாவிடம் ’நீ தானடி மாளவிகா நகையை திருடி உன்னோடே காதலனுடன் செலவு செய்து ஜாலியாக இருந்தீங்க, இப்போது போலீஸில் எங்கள் மீதும் கேசு கொடுத்திருக்கா. என்னை போலீஸ் விசாரித்தால் உண்மையை சொல்லிடுவேன்” என்று கூறியுள்ளார்.
பதட்டமான கோனிகா பள்ளிவிட்டு வந்ததும் தனது காதலன் ரகுபதியை சந்தித்து, ”பள்ளியில் படிக்கும் வகுப்பு தோழி மாளவிகா நகையை நான் எடுத்ததை போலீசிடம் சொல்ல போவதாக சேமளா சொல்றா.. எனக்கு பயமாக இருக்கிறது” என்று அழுதுள்ளார்.
அதற்கு காதலன் ரகுபதி, ”நீ கவலைப்படாதே, அவள் சொல்லாதபடி நான் பார்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். ரகுபதி ஏற்கெனவே குற்ற வழக்கில் சிறைக்கு சென்று வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து செப்டம்பர் 21 ஆம் தேதி சனிக்கிழமை இரவு ரகுபதி, தனது நண்பர்கள் கோகுல் மற்றும் விஷ்ணுடன் ஆலோசனை செய்துள்ளார் ரகுபதி. ”என் லவ்வர் கோனிகாவை போட்டுக் கொடுக்க நினைக்கும் சேமளாவை விடக்கூடாது, அவளை கடத்தி மிரட்டலாமா அல்லது வீட்டில் வெடிகுண்டு வீசி விடலாமா” என்று குடி மற்றும் கஞ்சா போதையில் ஆலோசனை செய்துள்ளனர். இறுதியாக வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசலாம் என முடிவு செய்தனர்.
அதன்படி கண்ணாடி பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி திரி வைத்து செப்டம்பர் 22 ஆம் தேதி அதிகாலை 2.00 மணிக்கு மூவரும் பைக்கில் சென்று விழுப்புரம் ஜி ஆர் பி வீதியில் உள்ள சேமளா வீட்டின் முன்பு வெடிகுண்டு வீசி விட்டு தப்பித்துள்ளனர்.
வெடிகுண்டு சம்பவம் அறிந்து விசாரணை செய்த விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் அதிகாரிகள், குற்றவாளிகளான ரகுபதி, கோகுல், விஷ்ணு ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சில மாணவிகள் கர்ப்பமாக பள்ளிக்கு வருகிறார்கள்!
இந்த சம்பவத்தை பற்றி பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தோம். அப்போது அவர்கள் ”முப்பது வருடங்களுக்கு முன்பு ஆசிரியர்களுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மரியாதை கொடுப்பார்கள் பயப்படுவார்கள். இப்போது மாணவர்களுக்கு நாங்கள் பயந்து போகிறோம். சொல்லவே அசிங்கமாக இருக்கிறது. காதலனுங்க பள்ளிக்கே வரானுங்க. அவர்களை கண்டிக்க முடியாமல் மாணவிகளைக் கண்டித்தால் அவர்கள் காதலனிடம் சொல்லி எங்களை மிரட்டுகிறார்கள்.. நாங்கள் என்ன செய்வது?
விழுப்புரம் பகுதியில் பெரும்பாலான இளைஞர்கள் கஞ்சா போதையில் தான் சுற்றி திரிகிறார்கள். அதைவிட கொடுமை பள்ளியில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யவே பயமாக உள்ளது. காரணம் சரியான புரிதல் இல்லாமல் லவ் அஃபெக்ஷனில் தடுமாறி சில மாணவிகள் கர்ப்பமாக பள்ளிக்கு வருகிறார்கள்.
ஆசிரியர்களான நாங்கள் பள்ளி நேரத்தில் மட்டும்தான் மாணவிகளை பார்த்துக் கொள்ள முடியும். வெளியில் பெற்றோர்கள்தான் கவனித்து கொள்ள வேண்டும்” என்கிறார் வேதனையுடன்.
கஞ்சா அடிச்சவனை கண்டுபிடிக்க முடியவில்லை!
காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தால், ”கஞ்சா நடமாட்டத்தை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால் கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து அதை வாங்கி அடிக்கிறார்கள்.
மது குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டினால் கண்டுபிடித்து விடலாம். ஆனால், கஞ்சா அடிச்சவனை கண்டுபிடிக்க முடியவில்லை, அவனது செயலில்தான் அவன் கஞ்சா அடித்திருப்பது தெரியும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வணங்காமுடி
கான்பூர் டெஸ்டில் அஸ்வின் எட்டவுள்ள சாதனைகள்… அடடே சூப்பர்தான்!