அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச கேரம் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்திப் பிடித்த, வடசென்னை விளையாட்டு மங்கை காஜிமாவின் வாழ்க்கை, திரைப்படமாகிறது.
மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து, ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து, அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டை சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு, சர்வதேச விளையாட்டு போட்டியில் வென்று, தன் ஏழ்மை நிலையையும் வென்றவர் காஜிமா.
இவரது வலி மிகுந்த போராட்டம் மற்றும் வெற்றி பெற்ற வாழ்க்கையை, உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் இந்தப் படம் உருவாகிறது.
காஜிமாவின் கதாபாத்திரத்தில் ரந்தியா பூமேஷ் என்ற கன்னட நடிகை நடிக்கிறார். காரணம் தயாரிப்பாளர் நிஹான் என்டர்டெயின்மென்ட்ஸ் நாகேஷ் பாட்டில், கர்நாடகாவைச் சேர்ந்தவர்.
“நான் பெல்லாரியில் இருந்து வருகிறேன். எனக்கு தமிழில் ஒரு படம் தயாரிக்க ஆசை இருந்தது. காஜிமாவின் கதையை என்னிடம் சொன்னார்கள். அந்த வலியும் வெற்றியும் என்னை பாதித்தது. நானே அந்தக் கதையை எடுத்து இப்போது தயாரிப்பாளர் ஆகி விட்டேன். தமிழில் தொடர்ந்து படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன்” என்கிறார் நாகேஷ் பாட்டில்.
இயக்குனர் முரளி , ” காஜிமா குடும்பத்தார் கதை – திரைக்கதையை உருவாக்க முழு ஆதரவு தந்தார்கள். பேசும் போது காஜிமா அப்பா பேச முடியாமல் கண் கலங்கினார். உண்மை தான் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் கண்கலங்கும் விதமாக படம் இருக்கும்”என்கிறார்.
பட பூஜையில் தன் குடும்பத்தாரோடு கலந்து கொண்ட காஜிமா , “நான் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். அதற்கு என் அப்பாவும், குடும்பத்தாரும் தான் காரணம். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பணம் இல்லாமல் தவிக்கும் போது அப்பா இரவு பகலாக ஆட்டோ ஓட்டி அந்த பணத்தைக் கொண்டு என்னை விளையாட அழைத்துச் செல்வார். இன்றைக்கு இந்த வெற்றியின் மூலம் கஷ்டம் தீர்ந்து அப்பாவுக்கு சொந்த வீடு வாங்கி கொடுத்திருக்கிறேன். எல்லா பெண்களையும் உற்சாகப்படுத்தி அவர்கள் திறமையை ஊக்குவித்தால் எல்லோராலும் வெற்றி பெற வைக்க முடியும். முயற்சியை விடாமல் தொடர வேண்டும்”என்றார். .
நடிகையும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனையுமான கோமல் சர்மா, ” கேரம் குயின் கதை அப்படியே என் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. காரணம் நான் ஸ்குவாஷ் விளையாட்டில் பெற்ற பல அனுபவங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் தெரியும். அந்த வகையில் இந்த கேரம் குயின் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.”என்றார்.
நாங்களும் !
