மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு!

Published On:

| By Balaji

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 5 நாள்கள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி செவ்வாய்கிழமை (நேற்று) வந்தார்.

கொழும்பில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு வந்தடைந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

ADVERTISEMENT

புதன்கிழமை(இன்று) ஏப்ரல் 26ஆம் தேதி காலை இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.அதன் பின்னர், மதியம் 1 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே உள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து இருதலைவர்களும் பேசினர்.

ADVERTISEMENT

சந்திப்பு நிறைவடைந்த பின்னர் இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வணிகம், இயற்கை எரிவாயு தொடர்பான சில ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாயின என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து பேசும் ரணில் விக்ரமசிங்கே, பின்னர் ஏப்ரல் 27ஆம் தேதி வியாழக்கிழமை ராஜஸ்தான் சென்று, வரும் ஏப்ரல் 29ஆம் தேதி சனிக்கிழமை கொழும்பு திரும்புவார் எனத் தெரியவருகிறது.

ADVERTISEMENT

இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயின் இந்திய வருகையைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மே மாதம் இலங்கை செல்கிறார். அங்கு ‘ஐ.நா. வெசாக் நாள்’ (புத்த பூர்ணிமா) கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்திற்கு முன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே கண்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது, “இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்திய பயணத்தின்போது திரிகோணமலை மாவட்ட வளர்ச்சி தொடர்பாக பேசப்படும். திரிகோணமலையில் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது ஜப்பானுடன் இணைந்த ஒரு கூட்டு முயற்சியாகும்” என தெரிவித்திருந்தார்.,”

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share